சென்னை, நவ.17 – தி.மு. கழக இளைஞர் அணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதய நிதிஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற அறிவுத் திருவிழாவையொட்டி முற்போக்கு புத்தகக் காட்சி 2025 நடைபெற்று வந்தது. இதன் இறுதி நாளான நேற்று (16.11.2025) முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் முற்போக்குப் புத்தகக் காட்சியைப் பார்வையிட்டு, ஆண்டுதோறும் இவ்விழா தொடரும் என்று முதலமைச்சர் கூறினார்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ‘காலத்தின் நிறம் கருப்பு- சிவப்பு’ நூல் வெளியீடு, இருவண்ணக் கொடிக்கு வயது 75 இரண்டு நாள் கருத்தரங்கம், முற்போக்குப் புத்தகக் காட்சியுடன் நவம்பர் 8 ஆம் தேதி அறிவுத் திருவிழா தொடங்கியது.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தி.மு.க.வின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தி.மு.க. இளைஞரணி ‘தி.மு.க. 75 அறிவுத்திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இதனை தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். தி.மு. கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு. கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள், தி.மு. கழக இளைஞர் அணிச்செயலாளர் – துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
அறிவுத் திருவிழாவின் இறுதி நாள்!
தி.மு.க. இளைஞர் அணியின் முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் பெரியாரிய – அம்பேத்கரிய- மார்க்சிய பதிப்பாளர்கள் மற்றும் நூல் விற்பனையாளர்களை மட்டும்கொண்டு நடைபெறும் புதுமையான இப்புத்தகக் காட்சி அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, புத்தகக் காட்சியைப் பார்வையிட்டு நூல்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
இப்புதுமையான முயற்சி தொடர வேண்டு மென்று நூற்றுக்கணக்கானோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
முற்போக்குப் புத்தகக் காட்சியை ஒட்டி, மாலை நேரங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளையும், கருத்தாளர்கள் உரையையும் காண பொதுமக்கள் தன்னெழுச்சியாக பெரும் ஆர்வத்துடன் கூடினர்.
10% தள்ளுபடி விலையில் முற்போக்கு நூல்களைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் வாங்கும் வாய்ப்பும், கலைநிகழ்ச்சிகளும் வாச கர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த எட்டு நாள்களாக கோலாகலமாக நடைபெற்று வந்த சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி- 2025 நேற்றுடன் (16.11.2025) நிறைவு பெற்றது.
நேற்று (16.11.2025) தி.மு. கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முற்போக்குப் புத்தகக் காட்சியை சுமார் இரண்டரை மணி நேரம் பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்த மாணவர்கள், புத்தக பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன புத்தக அரங்கில் முதலமைச்சர்!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவ னத்தின் சார்பில், 39, 40 அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ‘‘பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்’’, ‘‘அறிஞர ்அண்ணா அறிவுரை’’ ஆகிய நூல்களை வாங்கினார்.
மற்ற புத்தக அரங்குகளுக்கும் சென்று மேலும் 61 புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கினார்.
அதில், திராவிட இயக்க புத்தகங்கள், வரலாறு புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள், தன்வரலாறு புத்தகங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை படித்துப்பார்த்து வாங்கினார்.
திமுக 75 அறிவுத் திருவிழாவில், அமைக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சியில் 56 அரங்குகளில் பல்வேறு புத்தகப் பதிப்பாளர்களின் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். இங்கு, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் பார்வையிட்டு, பல்வேறு புத்தகங்களை வாங்கிப் பயன டைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாபெரும் அறிவுத் திருவிழாவினை வெற்றிகரமாக நடத்தியதற்கு தி.மு. கழக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்.
நிறைவு விழாவில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன புத்தக அரங்கு உள்பட, பல புத்தக அரங்குகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் மரு.நா.எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, சென்னை மாநகர நூலக ஆணையக் குழு உறுப்பினர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் தி.மு. கழக நிருவாகிகள் உடனிருந்தனர்.
