நாடு பழைய பார்ப்பனீய – வருணாசிரம திசைநோக்கித் தள்ளப்படுகிறதா?

4 Min Read

*இந்தியாவின் நவீன தொழிலாளர் கொள்கை பாரம்பரிய, மனுஸ்மிருதி முதலியவற்றின் சாரமாம்!
* பிறவியிலேயே தொழிலாளர்களாகவும், சம்பளமின்றி ‘‘பிராமணனுக்குப்’’ பணி செய்யவேண்டும் என்பதுதான் நவீன தொழிலாளர் கொள்கையா  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

‘‘நவீன தொழிலாளர் கொள்கை’’ என்பது, பழம்பெரும் சாஸ்திரங்களையொட்டி உருவாக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறுவது – நாட்டை பழைய பார்ப்பனீய வருணாசிரம திசை நோக்கித் தள்ளப்படுவதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எச்சரித்து அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

ஒன்றியத்தில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.– பா.ஜ.க. அரசு – தாங்கள் பதவியேற்றபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எடுத்த வாக்கு றுதிக்கு எதிர் முரணாக, நாளும் தங்களது  ‘ஹிந்துத்துவா’ கொள்கைகளை அனைவருக்கும் பொதுவான அரசின் நடைமுறை சட்டத் திட்டங்களாக்கி, நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றிய அரசையும், அதே கட்சி – கூட்டணியைச் சார்ந்த மாநில (ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.) அரசுகளையும் ஹிந்துராஷ்டிர அரசுகளாகவே கருதி, நடத்தி வருவது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரி யதாகும்!

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற நடவடிக்கை களுக்குப் பிரதமர், நிதியமைச்சர் போன்ற வர்கள் ‘தீபாவளிப் பரிசு’ என்று கூறி, ஹிந்துத்துவா கொள்கைத் திணிப்புகளைச் செய்கின்றனர்.

‘தீபாவளி என்பது ஒரு மதப் பண்டிகை. மற்ற மதக்காரர்களும் மதங்களை ஏற்காதவர்களும்கூட நாட்டில் உள்ள குடிமக்கள் என்கிறபோது, ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய, வேத ஸநாதன கலாச்சாரம்) என்பதைத்தான் ‘ஆரிய ஆட்சியாகவே’ நடைமுறைப்படுத்தி வருகின்றனர்!

ஒன்றிய தொழிலாளர் நலத் துறையின் அதிர்ச்சியூட்டக்கூடிய ஆணை!

இப்போது ஓர் அதிர்ச்சியூட்டக்கூடிய ஆணை – திட்டம் – ஒன்றிய தொழிலாளர் நலத் துறையில் வெளியிடப்பட்டுள்ளது!

‘‘பழைமை ஆவணங்களான மனுஸ்மிருதி, யக்ஞ வல்கிய ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் ஆகியவை அரசு நீதி குறித்து வலுவாகக் கூறியுள்ளன.

நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில், ஆள்வோரின் கடமை என்னவென்பதுபற்றி அவற்றில் கூறப்பட்டுள்ளன.

நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, உழைப்பை நிர்வகிக்கும் இத்தகைய கோட்பாடுகள் இந்திய நாகரிகத்தின் உருவாக்கத்தில் வலுவான அடிப்படை அம்சங்கள் உள்ளன.

இந்தியாவின் பாரம்பரிய புரிதல் என்னவெனில், ‘‘உழைப்பு என்பது வாழ்வாதாரத் தேவை மட்டுமல்ல; சமூக ஒற்றுமையையும், கூட்டு முன்னேற்றத்தையும் நிலை நிறுத்த உதவும் ‘புனிதமான’ மற்றும் தார்மீக அம்சமும் கொண்டது’’ என்று கூறும் இந்த வரைவுக் கொள்கை, இத்தகைய பாரம்பரிய ஆவணங்களிலிருந்து உத்வேகம் பெறுவதாகவும், இத்தகைய கொள்கைகள் முற்றிலும் நவீன தொழிலாளர் கொள்கைகளுடன் இசைந்துள்ளதாகவும் கூறுகின்றது.

‘சூத்திரர்கள்’ என்பதற்கு ஏழு வகைப் பிரிவு மனுஸ்மிருதியில்!

‘‘தார்மீகம்’’, ‘‘புனிதம்’’ போன்ற வார்த்தைகள் – மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் முதலிய வர்ணாஸ்ரம தரும – பிறவி ஜாதி அடிப்படையில் உழைக்கும் வர்க்கமான மக்களைக் ‘‘கீழ்ஜாதி’’யாக்கி, அவர்களைப் பிறவி ‘‘அடிமை வகுப்புகளாக’’ – டாக்டர் அம்பேத்கர் மொழியில் கூறவேண்டுமானால் Servile Classes என்று தாழ்வுபடுத்தி, அதிலிருந்து மீள முடியாதவர்களாக, படிக்கும் உரிமை, திருமண உரிமை, சொத்துரிமை, சுதந்திர வாழ்வுரிமை அற்றவர்களாக்கி வைத்ததோடு, ‘சூத்திரர்கள்’ என்பதற்கு ஏழு வகைப் பிரிவு என்று மனுஸ்மிருதி சுலோகம் 410, அத்தியாயம் 8 கூறுவது என்ன?

‘‘அரசன் வைசியனை வர்த்தகம் வட்டி வாங்கு தல், பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல் இவை களையும், சூத்திரனை துவிஜாதிகளுக்குப் பணி விடையுஞ் செய்யச் சொல்லவேண்டியது. அப்படிச் செய்யாவிடில் அவர்களைத் தண்டிக்க’’

என்று கூறியுள்ளது.

அசல் மனுதர்மத்தின் மற்ற சுலோகங்கள் இதோ!

இதுவே அப்படியே, ‘‘அர்த்தசாஸ்திரம்’’ என்ற ஆரிய நூலிலும்!

இந்தக் கொள்கையை நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்கம் தனது சட்டத் திட்டங்களாக ஏற்றால் என்ன நிலை ஏற்படும்?

சுலோகம் 413, அத்தியாயம் 8

‘‘பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடாம லேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் அல்லவா!’’

சுலோகம் 414, அத்தியாயம் 8

‘‘சூத்திரன் யஜமானானால், வேலையினின்று நீக்கப்பட்டிருந்தாலும், அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது. இம்மைக்கும், மறு மைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன் தான் நீக்குவன். ஆதலால், அவன் மறுமைக்காகவும், பிராமண சிசுருைஷ செய்யவேண்டியது.’’

சுலோகம் 415, அத்தியாயம் 8

‘‘யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.’’

சுலோகம் 416, அத்தியாயம் 8

‘‘மனையாள், பிள்ளை, வேலைக்காரன் இவர்க ளுக்குப் பொருளில் சுவாதீநமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவைகள் அவர்களின் எஜமாநனையே சாரும். அதாவது யஜமான் உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளை செலவழிக்கக் கூடாதென்று கருத்து.’’

சுலோகம் 417, அத்தியாயம் 8

‘‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை  வலிமையாலும் எடுத்துக் கொள்ள லாம். யஜமாநனெடுத்துக் கொள்ளத்தக்க பொரு ளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.’’

இதுதான் இனி ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை கொள்கையாக அமையப் போகிறதா? (இதுபற்றி நேற்று (16.11.2025) மார்க்சிஸ்ட் நாளேடான ‘தீக்கதிர்’ ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது).

நாடு பழைய பார்ப்பனீய வருணாசிரம திசை நோக்கி தள்ளப்படுகிறதா?

கடுமையாக எதிர்க்க முன்வருவது
அவசர, அவசியமாகும்!

இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்.

நாடெங்கும் அனைவரும் தக்க விழிப்புணர்வுடன் இருந்து, தமிழ்நாடு அரசும், அதன் தொழிலாளர் அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க முன்வருவது அவசர, அவசியமாகும்!

 கி.வீரமணி
  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
17.11.2025       

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *