கேரளப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறைத் தலைவராகவும், ‘டீனாக’வும் இருக்கக் கூடிய விஜயகுமாரி என்ற பார்ப்பன அம்மையார் – தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விபின் விஜயன் என்பவர் தன்னை எப்படி நடத்தினார்; பார்ப்பன ெமாழி வெறியோடு என்ன பேசினார் என்பதை தனது சமூக வலை தளப் பதிவில் வெளியிட்டுள்ளார்.
‘‘ஒரு புலையன் அல்லது பறையன் எவ்வளவு திறமையாகப் படித்தாலும், பார்ப்பனர்களுக்கு இணையாக சமஸ்கிருதத்தைப் படிக்கவே முடியாது. அப்படியே படித்தாலும் அவர்களைப் பார்ப்பனர்களுக்கு இணையாக யாருமே மதிக்கமாட்டார்கள்’’ என்பன போன்ற கடுமையான ஜாதிய ரீதியிலான கருத்துகளைக் கூறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் முனைவர் பட்டம் முடித்த தன்னை, ‘‘சமஸ்கிருதம் தெரியாத மண்’’ என்று இழிவுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.
‘‘இந்தப் பழி என் மீது அழியாத கறை போல குத்தப்பட் டுள்ளது. இது எனக்கு ஆறாத காயங்களை ஏற்படுத்தியுள்ளது’’ என்று விபின் விஜயன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.’’
பார்ப்பனர்கள் திருந்தி விட்டனர் – அவர்களை வீணாக இந்தக் கால கட்டத்திலும் அவதூறு செய்வது நியாயமா என்று வக்காலத்துப் போட்டு வாய் நீளம் காட்டும் அதிகப் பிரசங்கிகளும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த மே(ல்)தாவிகள் கேரளப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்துறை டீனாக இருக்கக் கூடிய ஒரு பார்ப்பன அம்மையார், சமஸ்கிருதம் படித்த தாழ்த்தப்பட்ட தோழரைப் பார்த்து ‘பறையன்’ என்றும், ‘புலையன்!’ என்றும் ஜாதியைக் குறிப்பிட்டுப் பேசியதோடு, ‘இவர்கள் எல்லாம் சமஸ்கிருதம் படித்ததால்தான் சமஸ்கிருதமே தீட்டாகி விட்டது’ என்று இழிவுப்படுத்திப் பேசி இருப்பது எதைக் காட்டுகிறது?
பார்ப்பனப் பிறவி ஆணவத்தை வெளிப்படுத்தவில்லையா? தீண்டாமையை அனுசரிப்பது, சட்டப்படிக் குற்றம், அதனை அனுசரிப்பவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பிரிவு – இந்தப் பார்ப்பன அம்மையார்மீது இதுவரை பாயாதது ஏன்?
காஞ்சி சங்கராச்சாரியார் பூஜை வேளையில் தமிழில் பேச மாட்டார்; அப்படிப் பேச நேர்ந்தால், தீட்டைக் கழிப்பதற்கு மீண்டும் ஸ்நாதனம் செய்வார் என்ற நிலை இன்று வரை தொடர்வது எதைக் காட்டுகிறது?
தமிழ்நாட்டுக் கோயில்களில் பெரும்பாலும் அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதம் இருப்பதை இனியும் அனுமதிக்கலாமா?
இதைப்பற்றிய எழுச்சி ஏற்பட்ட நிலையில் ‘தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்று விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனாக முடியாது; தமிழன் கட்டிய கோயிலில் தமிழனின் தாய் மொழியான தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட வேண்டிய நிலை இருப்பதுபற்றி – தமிழ்த் தேசியம் பேசுவோர்கூட வாய்த் திறப்பது இல்லை.
சமஸ்கிருதம் தேவபாைஷயாம் – தமிழ் நீஷப் பாைஷயாம் – இதுதான் பார்ப்பனர்களின் நிலைப்பாடு.
ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் ஒருமுறை காஞ்சிபுரத்தில் பணி நிமித்தமாக சங்கராச்சாரியாரை சந்திக்க வேண்டியிருந்த நேரத்தில், சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சமஸ்கிருதத்தில் பேச – இடையில் உள்ள கோயில் மேலாளர் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லி இருக்கிறார்; ஆனால் ஆட்சி ெமாழிக் காவலர் கீ. இராமலிங்கனார் தமிழில் பதில் சொன்னதை கோயில் மேலாளர் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துச் சொல்லவில்லை. உரையாடல் முடிந்து சிறிது நேரத்திற்குப் பிறகு கோயில் மேலாளரைப் பார்த்து ஆட்சி மொழிக் காவலர் ‘சங்கராச்சாரியாருக்குத் தமிழ் தெரியாதா?’ என்ற கேள்வியைக் கேட்ட போது ‘பூஜை வேளையில் பெரியவாள் நீஷப்பாைஷயில் பேச மாட்டார்’ என்று பதில் சொன்னதை ஆட்சி மொழிக் காவலரே பதிவு செய்துள்ளார்.
பார்ப்பனராவது – திராவிடராவது, அதெல்லாம் இப்பொழுது தேவையில்லாத வாதம் என்று ‘வாதம் வந்தவர்கள்’ சிலர் உளறக் கூடும்; அத்தகையவர்கள் காஞ்சி மடத்தைப் போய்ப் பார்த்து நேரில் உண்மை நிலையை அறிய முடியும்.
எந்தப் பார்ப்பனராவது – தப்பித் தவறி தம் வீட்டுப் பிள்ளைகளுக்கு சமஸ்கிருதம் கலவாத பெயரைச் சூட்டுவதுண்டா? (சூரிய நாராயண சாஸ்திரி என்ற ஒரே ஒருவர் மட்டும் தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் ெகாண்டார்; அவரைத் தவிர இன்னொருவரைக் காட்ட முடியுமா?)
அறிஞர் அண்ணா அவர்கள் பார்ப்பனர்களின் பிறவிக் குணத்தைப் பற்றி அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்ெமாழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்தில் அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்’’ என்று எவ்வளவுத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் அறிஞர் அண்ணா (‘திராவிட நாடு’ 2.11.1947 பக்.18)
இதுதான் பார்ப்பனர்களின் இரத்தத்தில் ஊறிய உணர்வு!
அதனுடைய வெளிப்பாடு, உலகம் முழுவதும் பரவி வாழும் பார்ப்பனர்களிடம் இன்றும் காண முடிகிறது.
அதன் அடையாளம் தான் கேரளப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சமஸ்கிருதத் துறைத் தலைவரான பார்ப்பன அம்மையாரின் பேச்சும், நடவடிக்கையுமாகும்.
‘‘சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான்’’ என்ற டாக்டர் டி.எம். நாயரின் அனுபவ மொழியை மறவாதீர்!
