சென்னை, நவ.14 தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை ஊதியம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த ஊதியத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஆணையம் அமைக்கப்படும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியங்கள் மாற்றி அமைக்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஒன்றிய அரசு அறிவித்து பல மாதங்கள் கழித்து அகவிலைப்படி அறிவிக்கப்பட்டு முன்தேதியிட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்த படி, கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசு அறிவித்ததும் ஒரு சில நாட்களிலேயே மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவித்து, வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மக்களின் நலனில் அன்பும், அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களை தீட்டுவதிலும், அந்த திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணி ஆற்றுவதிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
அவர்களது நலனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2025 ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக மாநிலப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
