சென்னை, நவ.14 தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குநர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” விருது அறிவிக்கப் பட்டது. நேற்று நவம்பர் 13-ஆம் தேதி சென்னை யில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார். கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ஆம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது. ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குநராக சினிமா காட்சிகளுக்கு நேர்த்தியாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த படத்தினை ஓவியமாகத் தீட்டியவர் தோட்டா தரணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
