சென்னை, நவ.13 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி. லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் (பிஎச்.டி), முனைவர் பட்ட மேலாய்வாளர் (PostDoctoral Fellow) போன்ற வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ‘தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்’ என்ற சிறப்புத் திட்டத்தை 2024–-2025ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதமும் (6 மாதங்கள்), முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதமும் (3 ஆண்டுகள்) உதவித்தொகையாக வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில் (2025-2026) இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக இணையதளம் (fellowship.tntwd.org.in) உருவாக்கப் பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் நெறிமுறைகளை இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 12ஆம் தேதி ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
‘முதலமைச்சர் கணினி தமிழ் விருது’க்கு
விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, நவ.13 தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித் துறை நேற்று (12.11.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கணினித் தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
கணினித் தமிழ் விருது
இந்த விருது ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றைக் கொண்டது. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர்கள், நிறுவனங்களிடம் இருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் மற்றும் செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படும் மென்பொருள்கள் 2025ஆம் ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம், விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறை இணையதளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களோடு ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை 600008’ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடர் பாகக் கூடுதல் விவரங்கள் அறிய 044 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
