இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது.இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் நிலவில் உள்ள நீர் பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திர யான்-2 ஆர்பிட்டர் அனுப்பி இருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் சேகரித்து அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்ததில் நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் நிலவில் நீர் இருக்கும் இடம் பற்றிய வரைப்படத்தை இஸ்ரோ தயாரித்திருக்கிறது. அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மய்யத்தின் விஞ்ஞானிகள் இந்த வரைப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக இரட்டை அதிர் வெண் செயற்கை துளை ரேடார் (டி.எப்.எஸ்.ஏ.ஆர்) என்ற உயர் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.
