சென்னை, நவ.12– சென்னையில் தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னையில் தற்காலிகமாக கொடிக் கம்பங்களை அமைக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறை களை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
* தனிநபர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள், நிகழ்வின் விவரங்களுடன் தற்காலிகமாக கொடிக்கம்பங்களை நிறுவுவதற்கு, நடத்தப்படும் நிகழ்வுக்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக, மாவட்டத்தில் அமைக்கப்பட்ட கோட்ட அளவிலான துணைக்குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
* தற்காலிக கொடிக்கம்பங்கள் 3 நாட்களுக்கு மிகாமல் நிறுவ அனுமதிக்கப்படும்.
* தார்ச்சாலை மேற்பரப்பில் அமைக்கக் கூடாது. சாலையின் மண் மேற்பரப்பில் மட்டுமே அமைக்க அனுமதிக்கப்படலாம். மேலும் அவை தார்ச்சாலை மேற்பரப்பு விளிம்பிலிருந்து மூன்று மீட்டருக்குள் இருக்கக் கூடாது.
* சாலையில் உள்ள எந்தவொரு கட்டமைப்புகளின் மீதும் தற்காலிக கொடிக்கம்பங்கள் 3 நாட்களுக்கு மிகாமல் நிறுவ அனுமதிக்கப்படும்.
மூன்றரை மீட்டர் உயரம்
* கொடிக்கம்பத்தின் அதிகபட்ச உயரம் தரைமட்டத்திலிருந்து 3½ மீட்டராக இருக்க வேண்டும். எந்தவிபத்துகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* சாலையோரங்களில் அமைக்கும்போது தற்காலிக கொடிக்கம்பங்கள் கண்டிப்பாக மின்சாரம் கடத்தாத வகையில் இருக்க வேண்டும்.
* கொடிக்கம்பம் மின்சார கம்பிகளை தொடவோ அல்லது குறுக்கிடவோ கூடாது என்பதை அமைப்பாளர்கள், விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மத நிகழ்வுகளுக்கு…
* சம்பந்தப்பட்ட அலுவலர்கள், உரிய நடைமுறையை பின்பற்றி விண்ணப்பிக்கும் தனி நபர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் தங்கள் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரம், மாநாடு, ஊர்வலம், தர்ணா, விழாக்கள் போன்றவற்றின்போது நிலம், இதர உள்கட்டமைப்புகளுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தற்காலிகமாக கொடிக்கம்பங்களை அமைக்க வாடகை முன் பணம் செலுத்தினால் அனுமதிக்கலாம். அத்தகைய தற்காலிக கொடிக்கம்பங்களுக்கான வாடகை அலுவலர்களால் நிர்ணயிக்கப்படும்.
மத நிகழ்வுகளை பொறுத்தவரை, கொடிக்கம்பங்களை நிறுவுவதற்கு அதிகபட்சமாக 7 நாட்கள் அவகாசம் அனுமதிக்கப்படலாம்.
* அனுமதி காலம் முடிந்தவுடன், தற்காலிக கொடிக்கம்பங்களை அமைப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் உடனடியாக அகற்ற வேண்டும். ஏதேனும் தவறு ஏற்பட்டால், நில உரிமையாளர் துறை கொடிக்கம்பங்களை அகற்றி, அகற்றுவதற்கான செலவை அமைப்பாளர்களிடமிருந்து வசூலிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
