சென்னை, நவ.12– மோசடித் தொகை எவ்வளவோ, அந்தத் தொகையை மட்டுமே முடக்கம் செய்ய வேண்டும். மாறாக சிறிய தொகைக்காக ஒட்டுமொத்தமாக வங்கிக்கணக்கை முடக்கக் கூடாது என்று காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘வி-மார்ட் ரீடெய்ல் லிமிடெட்’ லிமிடெட்’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கை சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் முடக்கினர். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ‘வாடிக்கை யாளர்களிடம் இருந்து இணைய வழி பணப் பரிவர்த்தனையை பெறுவதற்கு என்று எச்.டி.எப்.சி., வங்கியில் தனியாக ஒரு கணக்கு வைத்துள்ளோம்.
அதில் ரூ.75 கோடிக்கு மேல் உள்ளது. அந்தக் கணக்கை முன்னறிவிப்பு எதுவுமில்லாமல், காவல் துறையினர் முடக்கியுள்ளனர். ஏதாவது முறைகேடு பணம் வந்ததாக புகார் இருந்தால், புலன்விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகக் கூறியும், முடக்கத்தை காவல் துறையினர் நீக்கவில்லை” என்று வாதிடப்பட்டது.
மோசடி
காவல் துறையினர் தரப்பில், ‘மணிமாறன் என்பவர் இணைய வழி வர்த்தகத்தில் ரூ.1.48 கோடி இழந்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த மோசடி புகாரில் மேற்கொண்ட விசாரணையில், ரூ.4,194 மனுதாரர் கணக்கிற்கு சென்றுள்ளது.
அது மட்டுமல்ல, ஒன்றிய அரசின் தேசிய சைபர் கிரைம் இணைய தளத்தில் மனுதாரர் வங்கிக் கணக்குக்கு எதிராக 172 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால், வங்கிக்கணக்கு முடக்கம் செய்யப்பட்டது” என்று விளக்கம் அளிக்கப் பட்டது.
எச்.டி.எப்.சி., வங்கி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் செவனன் மோகன், ‘இதே போன்ற வழக்கில், மோசடியாக வந்த பணம் எவ்வளவோ, அந்த தொகையை மட்டுமே முடக்கம் செய்யவேண்டும். ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்கை முடக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு, சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை பின்பற்றியிருந்தால், மனுதாரரின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருக்காது” என்று வாதிட்டார்.
அடிப்படை உரிமை மீறல்
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மோசடிப் பணத்தையும், கணக்கு முடக்கத்துக்கான காலத்தையும் குறிப் பிடாமல், வங்கிக் கணக்கை காவல் துறையினர் ஒட்டு மொத்தமாக முடக்கம் செய்தது, மனுதாரரின் வர்த்தகம் செய்யும் அடிப்படை உரிமையை மீறிய செயலாகும்.
அதுமட்டுமல்ல, ஒருவரது வாழ்வாதாரத்தை மீறும் செயலாகும். எனவே, மனுதாரரின் வங்கிக் கணக்கை முடக்கம் செய்த எச்.டி.எப்.சி. வங்கி நீக்கவேண்டும். அதேநேரம், ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 998 மட்டும் முடக்கம் செய்யவேண்டும். மனுதாரரும், இந்தத் தொகையை வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டும்.
மேலும், ஒரு வங்கிக் கணக்கில் சந்தேகப்படும் படி ஏதாவது மோசடி பணம் வந்ததாக தெரிய வந்தால், அந்த தொகையை மட்டுமே முடக்கம் செய்ய வேண்டும். மாறாக சிறிய தொகைக்காக ஒட்டுமொத்த வங்கிக் கணக்கையும் முடக்கம் செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.
