திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (TTD) லட்டு தயாரிப்பதற்காக, உத்தரகாண்டில் செயல்படும் ஒரு பால் பண்ணை நிறுவனம், 2019 முதல் 2024 வரை, சுமார் 68 லட்சம் கிலோ போலி நெய்யை விநியோகித்து, ரூ. 250 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக அஜய் குமார் சுகந்தி என்பவரை சிபிஅய் கைது செய்ததைத் தொடர்ந்து, இந்த அதிர்ச்சிகரமான விவரங்களை சிபிஅய்யின் சிறப்பு விசாரணைக் குழு வெளியிட்டுள்ளது.
அஜய் குமார் சுகந்தி என்பவர், மோனோ கிளிசரைடுகள், அசிட்டிக் ஆசிட் எஸ்டர், வெண்மை தரும் வேதிப்பொருள் (வொயிட்னர்), கிளிசரின் மற்றும் நெய் வாசனையைத் தரும் டையாசெட்டைல் பியூட்டோமைன்ட் போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி, லட்டு பிரசாதம் தயாரிக்கத் தேவையான நெய்யை விநியோகித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் தலைவர்களான போமில் ஜெயின் மற்றும் விபின் ஜெயின் ஆகியோர், உத்தரகாண்டில் போலி நெய் உற்பத்தி நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனம் எந்த ஒரு பால் பண்ணையிடமிருந்தும் பால் பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் குஜராத், மேற்கு வங்கம் மற்றும் கருநாடகாவில் உள்ள இரசாயன நிறுவனங்களில் இருந்து வேதிப்பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பால், தயிர் மற்றும் நெய் தயாரித்து, அதனை நாடு முழுவதும் அனுப்பி உள்ளனர். மேலும், பால் பண்ணைகளில் இருந்து பால் பொருட்கள் வாங்கியதாகப் போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.
போலேபாபா டெய்ரி நிறுவனம் 2023ஆம் ஆண்டிலேயே தேவஸ்தானத்தால் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தாலும், மா கங்கா டெய்ரி, வைஷ்ணவி டெய்ரி, அம்பே டெய்ரி போன்ற பெயரில் புதிய நிறுவனங்களை உருவாக்கி, ஒப்பந்தங்களைப் பெற்று, போலி நெய்யைத் தொடர்ந்து விநியோகித்து வந்துள்ளது. இதன் மூலம் சுமார் 68 லட்சம் கிலோ நெய்யை விநியோகித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நெய் அடங்கிய நான்கு லாரிகள், ஆய்வின் மூலம் – அதில் பால் பொருள் அறவே இல்லாமல் வேதிப்பொருள் மட்டுமே உள்ளது என்று கண்டறியப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, மீண்டும் பால் பண்ணைக்கே திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நான்கு டேங்கர்களும் உத்தரகாண்ட் செல்லாமல், ஆந்திராவில் இருந்த தனது நிறுவனம் ஒன்றில் 4 நாட்கள் வைத்திருந்து, போலியான ஆய்வறிக்கையைத் தயாரித்து, லேபிள்கள் மாற்றப்பட்டு, ஆகஸ்ட் 2024இல் தேவஸ்தானத்திற்கு மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது அதே போலியான நெய்தான், ‘புனித’மானது என்று கூறப்படும் திருப்பதி லட்டு ‘பிரசாத’த்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேதிப் பொருள்களால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்ற அபாயமும் உள்ளது. எப்படி இருக்கிறது – கடவுள், கோயில் வியாபாரக் கதை? தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம்’ என்று ஒரு பக்கத்தில் திருப்பதி ஏழுமலையானின் சக்தியைப் பற்றிப் பிரச்சாரம் செய்து கொண்டு – இன்னொரு பக்கத்தில் நாமக் கடவுளான ஏழுமலையானுக்கே நாமத்தைச் சாத்தி கொள்ளை அடிக்கின்றனர் என்றால், உண்மையிலேயே கடவுளை நம்புபவர்கள் யார் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.
ஏழுமலையான் என்பது எல்லாம் வெறும் உருவச் சிலை தான்! சக்தியாவது புடலங்காயாவது? என்பதைப் புரிந்து கொள்வீர்!
ஏற்ெகனவே மன்னன் கிருஷ்ண தேவராயன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அளித்த ஏராளமான நகைகள் கொள்ளை பற்றி செய்திகள் வந்ததுண்டு.
ஆனால் ‘அந்தப் பிரச்சினை என்னாயிற்று?’ என்பதற்கான பேச்சு மூச்சே இல்லை.
காஞ்சி சங்கராச்சாரியராக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி ஒரு முறை உண்மையை ஒப்புக் கொண்டு சொன்னாரே – ‘பக்தி என்பது ஒரு ஃபேஷனாக, வணிகமயமாகி விட்டது’ என்று சொன்னாரே – அதுதான் இப்பொழுது நம் நினைவிற்கு வந்து தொலைகிறது (1976 மே திங்களில் காஞ்சிபுரத்திலே நடந்த அகில இந்திய இந்து மாநாட்டில்தான் அப்படிப் பேசினார்)
பக்தர்களே சிந்திப்பீர்!
