தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதத்தைக் கலந்து பேசினால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது செல்லாது என்ற ஒரு தீர்ப்பு – 1994ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
மகாராட்டிர மாநிலம் தானே மக்களவைத் தொகுதியிலிருந்து பிஜேபி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்கப்சே என்பவரின் தேர்தல் செல்லாது என்பதுதான், இந்தக் கால கட்டத்தில் நினைவூட்டப்படத்தக்க முக்கிய தீர்ப்பாகும்.
‘வெற்றி பெற்ற பிஜேபி வேட்பாளர் ராம்கப்சேவின் தேர்தல் வெற்றி செல்லாது’ என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹர்பன்சிங் என்பவர்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
‘விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி ரிதம்பரா என்பவரும், பிஜேபியைச் சேர்ந்த பிரமோத் மகாஜனும், பிஜேபி வேட்பாளருக்கு ஆதரவாக இந்துமத அடிப்படையில் வாக்குக் கேட்டார்கள்’ என்ற அடிப்படையில்தான் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
1991ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி விசுவ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சாத்வி ரிதம்பரா ஹிந்து மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கேட்டது உண்மையென்றும், அந்த மேடையில், பிஜேபி வேட்பாளர் ராம்கப்சேவும் இருந்தார் என்றும், உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி ஏ.சி. அகர்வால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 123(3)க்கு எதிரானது என்று கூறி, ‘தேர்தலில் ெவற்றி பெற்றது செல்லாது’ என்று திட்டவட்டமாகத் தீர்ப்பை வழங்கினார் (15.4.1994).
lll
இந்த ஒரு தீர்ப்பு மட்டுமல்ல; 2004ஆம் ஆண்டில் கேரள மாநிலம் மூவாட்டுப் புழா மக்களவைத் தேர்தலில் இந்திய ஃபெடரல் ஜனநாயகக் கட்சி (அய்.எஃப். டி.பி.) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி. தாமஸ், பின்னர் இவர் காங்கிரஸ் (ஜே) உடன் தம் கட்சியை இணைத்துக் கொண்டவர். இவர் மேனாள் ஒன்றிய சட்டத் துறை இணை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் பி.எம். இஸ்மாயிலைவிட வெறும் 529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர் ஆவார்.
இவரது வெற்றியை எதிர்த்து சி.பி.எம். வேட்பாளர் பி.எம். இஸ்மாயில், ஜோஸ் கே.மணி உள்ளிட்டசிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.
பி.சி. தாமஸ் மக்களவைத் தேர்தலில் கத்தோலிக்கக் கிறித்துவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக போப் மற்றும் தெரசா ஆகியோரின் படங்களுடன் தன்னுடைய படத்தையும் இணைத்து, காலண்டர் அச்சிட்டு, மக்களிடம் வழங்கினார் என்பதுதான் வழக்கு.
இந்த வழக்கில் நீதிபதி சி.என். இராமச்சந்திரன் முக்கிய தீர்ப்பை வழங்கினார். (31.10.2006) அந்தத் தீர்ப்பில் ‘‘மதத்தின் அடிப்படையில், வாக்குகளைக் கோரியதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123 (3)இன்படி தவறானது. இந்த முறை கேடுகள் இல்லா விட்டால், தோல்வி அடைந்ததாகக் கருதப்படும் சி.பி.எம். வேட்பாளர் பி.எம். இஸ்மாயில் வெற்றி பெற்று இருப்பார். எனவே நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த மனுதாரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்’’ என்ற உன்னதமான தீர்ப்பினை வழங்கினார்.
இந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் பீகாரில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலி்ல், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பச்சையாக தேர்தல் பிரச்சார மேடைகளில் மதவாதத்தையே முதன்மைப்படுத்திப் பேசியுள்ளார்கள்.
பீகார் மாநிலத்தில் அராரியா மாவட்டத்தில் நடந்த பிஜேபி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி என்ன பேசியுள்ளார்?
‘‘காங்கிரஸ் இளவரசர் ராகுல்காந்தி அயோத்தி சென்று ராமரைத் தரிசத்தது இல்லை. வாக்கு அரசியலுக்காக ராமரை வெறுக்கிறார்கள். நிஷாத் ராஜ், மாதா சாப்ரி, மகரிஷி வால்மீகி ஆகியோருக்கான சன்னதியில் கூடத் தரிசனம் செய்ய மனமில்லை; இது பட்டியலினத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதான வெறுப்பைக் காட்டுகிறது’’ என்று பேசியுள்ளாரே, அப்படியானால் ‘எந்தெந்த வேட்பாளர்களை ஆதரித்து மதப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசினாரோ, அந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், அது செல்லாது’ என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிட அதிகம் வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடிதான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதவாதத்தை முன்னிலைப்படுத்திப் பேசினார் என்றால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சாசரம் நகரில் நடைபெற்ற பிஜேபி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் என்ன பேசினார்?
‘‘முகலாய மன்னர் பாபர் அயோத்தியில் 550 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்து ஆலயத்தை இடித்தார். அங்கு ராமன் கோயில் கட்டுவதை காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தடுக்க முயன்றன. இன்று பிரதமர் மோடி பதவியில் இருப்பதால் வானுயர்ந்த ராமன் கோயில் அதே இடத்தில் கட்டப்பட்டுள்ளது?’’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மிகவும் வெளிப்படையாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதவாதத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தில் பிஜேபி வேட்பாளரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மதவாதத்தை முன்னிலைப் படுத்திப் பேசி இருப்பதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)இன்படி சம்பந்தப்பட்ட தொகுதிகளில் பிஜேபி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செல்லாது என்று ஆகி விடுகின்றது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் இது உறுதியாகும் என்று உறுதியாக நம்பலாம். ஏற்கெனவே நீதிமன் றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளே. இதற்குப் போதுமானதாகும்.
