திருச்சி, நவ.11- நவம்பர் 7 ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து 08.11.2025 அன்று மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தியது.
திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாரி செல்வம் மற்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் மரு. க.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த இப்பேரணியை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் புற்றுநோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இந்தியாவில் மட்டும் 1.1 மில்லியன் மக்கள் புற்றுநோயினால் புதிதாக பாதிக்கப்படுவதாகவும் இதற்கு காரணம் மக்களின் உணவு பழக்கவழக்கம், உடலுழைப்பில்லாத மன இறுக்கமான வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, போதைப் பழக்கங்கள் மற்றும் மரபு ரீதியான பாதிப்புக்கள் என உரையாற்றினார். விழிப்புணர்வு என்பது மற்றவர்களுக்காக மட்டும்தான் என்று கருதாமல் அது ஒவ்வொருவரிடமிருந்தும் துவங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷமித்ரா மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கோவிந்தராஜ், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளோம். இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதோடு சிறு வயதிலேயே புற்றுநோயினால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருகிறது. ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் அதை விரைவில் குணப்படுத்த முடியும்.
உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டாயம் மாற்றம் தேவை, பீசா, பர்கர், பரோட்டா, சவர்மா, பார்பிக்யூ, தந்தூரி போன்றவற்றில் அதிக கொழுப்பு மற்றும் ஹை சுகர் கார்போஹைட்ரேட் இருப்பதால் அது கேன்சர் செல்களை உருவாக்கும். மேலை நாடுகளில் இது போன்ற உணவுகளால் தான் புற்றுநோய் வருகிறது என்பதை உணர்ந்து அவர்கள் காய்கறிகள் பழங்கள் அடங்கிய சாலட்டுகளை உணவாக உண்டு வருகின்றனர்.
உணவுப் பழக்க வழக்கங்கள் மாற வேண்டும்
நமது உணவுப் பழக்க வழக்கங்கள் மாற வேண்டும் நமது பாரம்பரிய உணவான முளைகட்டிய பயிர்கள், சாலட்டுகள், கீரை வகைகளை உண்ண வேண்டும். அசைவ உணவுகளை குளிர் படுத்தி பின்னர் அதை சூடு செய்து சாப்பிடுகின்றனர். அதிலுள்ள எண்ணெய்யும் மீண்டும் மீண்டும் சூடாக்கப்படுகிறது. மிட் நைட் பிரியாணி கடைகள் அதிகமாகி விட்டதாலும், கிராமங்களிலும் அதிக அளவு இது போன்ற உணவுகள் கிடைப்பதால், இவை அனைத்திலும் கேன்சர் உருவாக்கும் கெமிக்கல்கள் உள்ளன அது மருத்துவர்களான எங்களுக்கு தெரியும்.
ஆபத்தை உணராமல்…
ஒரே நாளில் கேன்சர் வந்தால் மக்கள் அனைவருக்கும் இது தெரியும். ஆனால் இது படிப்படியாக 5 அல்லது 10 ஆண்டுகள் இது போன்ற உணவுகளை உண்ட பின்பு தான் கேன்சருக்குண்டான அறிகுறிகள் பொதுமக்களுக்கு தெரியும். எங்களுக்கு தற்போதே அது குறித்து தெரியும் என்பதால் அதை இளைஞர்களுக்கும் பொது மக்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. சுவைக்காக இது போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அதில் உள்ள ஆபத்தை அவர்கள் உணராமல் உள்ளனர் என மருத்துவர் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
இவ்விழிப்புணர்வு பேரணி தில்லை நகரில் துவங்கி சாலை வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இதில் குளோபல் கனெக்ட் நிறுவனத்தின் பணியாளர்கள், ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாச்சலம், மருத்துவக் குழுவினர் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஏ. ஜெசிமா பேகம் மற்றும் பேராசிரியர்கள் என 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு புற்றுநோய் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
