ரொஹதக், நவ. 11- ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய ‘நகர்ப்புறப் போக்குவரத்து திறன் விருது’ பிரிவில், நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதைச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வென்றுள்ளது.
தேசிய விருது
ஹரியானா மாநிலம், குரு கிராமில் ஒன்றிய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ‘இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி 2025’நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. ஒன்றிய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் இணை அமைச்சர் டோகன் சாஹூ கலந்துகொண்டனர்.
இந்த கண்காட்சியில் தமிழ் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.பிரபுசங்கர் ஆகியோர் இந்த உயரிய விருதை ஒன்றிய அமைச்சர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகம் அதன் சேவைகளில் மேற்கொண்ட பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளுக்காக இந்த தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை வசதி: பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் பயணச் சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது.
மின்சாரப் பேருந்து வசதிகள்: சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளை இயக்குவதில் காட்டிய அக்கறை மற்றும் மாசைக் குறைக்கும் நடவடிக்கைகள்.
பள்ளி மாணவர்களுக்கான சிறப்புச் சேவைகள்: பள்ளி மாணவர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்து சேவைகளை திறம்படச் செயல்படுத்தியது.
நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம்: பயணிகளின், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நள்ளிரவு நேரங்களிலும் பேருந்துகளைச் சீரான இடைவெளியில் இயக்கியது.
பொதுப் போக்குவரத்தின் செயல்திறன் மற்றும் அணுகுமுறை: பொதுப் போக்குவரத்தின் செயல்திறன், அனைவராலும் அணுகக்கூடிய தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சிகள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு:
சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகம் தேசிய விருது பெற்றதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பாராட்டினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும் பாராட்டுகள்!
நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் எம்டிசி, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
