சென்னை, நவ.10 ‘‘தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்போது பல்வேறு கணைகள் தி.மு.க.வைத் தாக்குகிறது. பலமுனை தாக்குதலாக இருக்கிறது. பாரம்பரிய எதிரிகள், பரம்பரை எதிரிகள் எல்லோரும் தாக்குவது தி.மு.க.வைத்தான்’’ என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடா ளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பேசியுள்ளார்.
கனிமொழி எம்.பி.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அறிவுத் திருவிழாவை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வருகிறது தி.மு.க. இளைஞரணி. இதில் நேற்று (9.11.2025) நடந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது கனிமொழி பேசுகையில், “தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, பல்வேறு கணைகள் நம்மை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறார்கள். எந்தத் திசையில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று தெரியாத அளவிற்கு, பலமுனை தாக்குதல் நடை பெறுகிறது.
அவர்களுடைய ஒரே டார்கெட் நாம்தான். பாரம்பரிய எதிரிகள், பரம்பரை எதிரிகள் எல்லோருக்கும் தி.மு.க.தான். அவர்களை எதிர்த்து நின்று அறிவியல் ரீதியாக கேள்வி கேட்பதற்கோ, கருத்துகள் ரீதியாக மறுத்துப் பேசுவதற்கோ வேறு யாரும் கிடையாது. நாம்தான் அவர்களுக்கு வழிவிடாமல் கருத்து ரீதியாக இருக்கட்டும், அரசியல் ரீதியாக இருக்கட்டும் அறத்தின் பால் நின்று எதிர்க்கக்கூடியவர்கள் நாம் மட்டும்தான் என்பதால் எல்லா விதத்திலும் நம்மை நோக்கி எதிர்த்துக்கொண்டு வருகிறார்கள்.
மொழி என்கிற ஆயுதம்!
இது ஒன்றும் புதிதல்ல, காலம் காலமாக எதை எதிர்த்து திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டதோ, அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்தத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மொழியை, அறிவைப் பயன்படுத்திதான், காலம் காலமாக இருந்த அந்த அடக்கு முறைக்கு எதிராக, நாம் போராடினோம். எங்களுக்கு மட்டும்தான் சிந்திக்கத் தெரியும், எங்களுக்கு மட்டும்தான் படிக்கத் தெரியும், தாங்கள் மட்டும் தான் எல்லாம் தெரிந்தவர்கள், இந்த உலகத்தில் இருக்கக்கூடிய சட்டத்தை எழுதக்கூடியவர்கள் எல்லாம் நாங்கள் தான் என்று, எல்லாவற்றையும் தங்கள் கையில் வைத்துக் கொண்டு, அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக்கொண்டு இருந்த அதிகாரத்தை எதிர்த்துப் போராடக்கூடிய சாதாரண சாமானிய, ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்த தி.மு.க. கையில் எடுத்த ஆயுதம் அறிவு ஆயுதம் தான். மொழி என்கிற ஆயுதம் தான்.
அந்த மொழியைத்தான் இன்று உதயநிதி மீண்டும் கையில் எடுத்தி ருக்கிறார். இந்த அறிவுத் திரு விழாவை முன்னெடுத்திருக்கிறார். அறிவுத்திருவிழாவை ஏன் நடத்துகிறோம் என்று யோசித்தபோது, தற்போது அறிவு தேவைப்படுகிறது. நிலவுக்கு முதலில் சென்றவர் யார்? என மாணவர்களிடம் கேட்டபோது, ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என சரியான பதில் கூறிய போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர் நிலாவுக்கு முதலில் ‘அனுமன்’ சென்றார் என அறிவியலைத் தவறாகச் சொல்லும் இதுபோன்றவர்களுக்கு தற்போது அறிவு தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏமாற்ற முடியாது!
இந்தியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவித்திருக்கிறார்கள். 15 நாள் தான் நாடாளுமன்றம் என்று தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசுக்கு எந்த விவாதமும் பிடிக்காது, ஒரு மாதம் நடத்தவேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் பதினைந்து நாட்கள் தான் நடைபெற இருக்கிறது. ஏனென்றால் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதது ஒன்றிய பாஜக அரசு. அவர்களுக்கு எதிராக மறுபடியும் நாம் கையில் அறிவு என்ற ஆயுதத்தை எடுக்க வேண்டும். அதற்கான விவாதங்கள் இப்படிப்பட்ட மேடைகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.
பீகாரில் ஏமாற்றலாம்.. அரியானாவில் ஏமாற்றலாம், மகாராட்டிராவில் ஏமாற்ற லாம், தமிழ்நாட்டில் அது நடக்காது. எங்களுக்கு களத்தில் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல், எஸ். அய். ஆர். என ஒரு புறம் இருந்தாலும், நாங்கள் அறிவை வளர்க்கிறோம் என இந்தத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க. இளைஞர் அணி, உதயநிதி அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துகள்.”
இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி உரையாற்றினார்.
