உலகச் செய்திகள்

3 Min Read

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த

ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி
ஒரு கிலோ விலை ரூபாய் 12,500

டோக்கியோ, நவ. 10- உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.12,500 ஆகும்.

ஆடம்பர அரிசி

தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் இருந்தாலும், இந்த நாடுகளிடையேயான பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக்கூடிய விலையிலேயே கிடைக்கின்றன.

இருப்பினும், ஜப்பானின் கின்மைமே பிரீமியம் அரிசி ஓர் ஆடம்பரப் பொருளாக விளங்குகிறது. டோயோ ரைஸ் கார்ப்பரேஷன் (Toyo Rice Corporation) நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உற்பத்தி செய்கிறது. இந்த அரிசி 6 மாதங்கள் பதப்படுத்தப்பட்டு சுவை கூட்டப்படுகிறது.

கின்னஸ் சாதனை

கடந்த 2016-இல், மிகவும் விலை உயர்ந்த அரிசியாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இந்த அரிசி இடம்பிடித்துள்ளது.

இந்த அரிசி இணையற்ற ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது, வழக்கமான அரிசியைவிட 6 மடங்கு அதிக லிப்போ பாலிசாக்கரைடுகளை (LPS) கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் உடல் நோய்களை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது. இந்த அரிசி ஜப்பானின் கோஷிஹிகாரி (Koshihikari) பகுதியில் விளைவிக்கப்படுகிறது. மலைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதியின் வெப்பநிலை இந்த அரிசி உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது.

அணு ஆயுத சோதனை
நடத்தும் திட்டம் இல்லை

டிரம்புக்கு ரஷ்யா பதில்

மாஸ்கோ: நவ. 10- அமெரிக்கா மீண்டும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ள போதிலும், அணு ஆயுத சோதனை தடைக்கான தனது உறுதிப் பாட்டை ரஷ்யா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: பன்னாட்டு அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைப்பிடிக்கிறது. அணுஆயுதச் சோதனை நடத்தும் திட்டம் இல்லை. சோதனை நடத்துமாறு அதிபர் புடின் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அணு ஆயுத சோதனைகள் மீதான நீண்ட கால தடைக்கு ரஷ்யா உறுதிபூண்டுள்ளது. மூன்று தசாப்த கால இடைநிறுத்தத்தை அமெரிக்கா மீறினால், அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம். அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்றைய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பிற்கு அணுசக்தி சமநிலை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

அமெரிக்க அணு ஆயுதங்களை பரிசோதிக்க தொடங்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். அவர், ”வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன.

ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது” என கூறியிருந்தார். தற்போது, அணு ஆயுத சோனையை மீண்டும் தொடங்குமாறு டிரம்பின் உத்தரவுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது.

பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி

பிரேசிலியா, நவ. 10- பரானா மாகாணத்தை சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டடங்களில் கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 432 பேர் காயமடைந்தனர். காவல்துறையினா, தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மலேசியா கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி – 290 பேரை காணவில்லை

கோலாலம்பூர், நவ. 10- மியான்மரில் இருந்து 300 புலம்பெயர்ந்தோருடன் மலேசியா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில் 289 பேர் காணாமல் போயினர்:

கடலில் மிதந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டது; 10 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து, 300 பேர் அடங்கிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று மலேசியா நோக்கி சென்றது.

மலேசியாவின் பினாங்கு மாகாணம் அருகே சென்றபோது, அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த மலேசிய கடற்படை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியை துவக்கியது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *