சென்னை, நவ. 8- ‘சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.அய். பதவி உயர்வு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
எஸ்.அய். பதவி உயர்வு
தமிழ்நாடு காவல் துறையில், காவல் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப் படுகின்றன. நேரடி எஸ்.அய். பணிக்கான தேர்வை 1991 முதல் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் எஸ்.அய்.க்களுக்கு (உதவி ஆய்வாளர்) காவலர் பயிற்சி கல்லூரியில் ஓர் ஆண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகி்ன்றன. இங்கு வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே பதவி உயர்வுக்கான பட்டியலில் காவல்துறை உதவி ஆய்வாளர்களின் பணி மூப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், காவலர் பயிற்சி கல்லூரியில் சில நேரங்களில் பாரபட்சமாக மதிப்பெண் வழங்கப்படுவதாகவும், எனவே, சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி (பதவி உயர்வுக்கான பணி மூப்பு) வைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் மதிப்பெண்களை பதவி உயர்வு பணிமூப்புக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த மே மாதம் இறுதியில் உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 1996 முதல் 2024ஆம் ஆண்டு வரை நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வுக்கான பணிமூப்பையும் இவ்வாறே பின்பற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசாணை வெளியீடு
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் வழங்கப்படும்மதிப்பெண்களை மட்டுமே காவல்துறை உதவி ஆய்வாளர் பதவி உயர்வுக்கான பணிமூப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு காவல் துறையில் 34 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் பதவி உயர்வில் எந்த குழப்பமும் இருக்காது என காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
