அண்டப் புளுகே, உன் பெயர்தான் ‘துக்ளக்’கா? – நமது பதிலடி-மின்சாரம்

7 Min Read

திப்புவின் ஆட்சியில் 3,000 பார்ப்பனர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனரா?

அண்டப் புளுகு, ஆகாயப் புளுகுகள் என்பார்கள்! அவை எல்லாம் இந்த ஆரியப் பார்ப்பனர் கூட்டத்திடம் பிச்சை வாங்க வேண்டும்.

ஏதோ இப்பொழுது தான் இந்தக் குருமூர்த்தி அய்யர் (5.11.2025, ‘துக்ளக்’, பக். 11) எழுதுகிறார் என்று நினைக்க வேண்டாம் – 16.11.2017 நாளிட்ட ‘துக்ளக்’கிலும் திப்பு சுல்தான் பற்றி பொய்யுரை புகன்றதற்கு ‘விடுதலை’ ஞாயிறு மலரில் (11.11.2017) பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் புத்திக் கொள்முதல் பெறவில்லை. அந்தப் பதிலடியை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

திப்பு சுல்தானைப் பற்றி அவதூறு பரப்புவது பார்ப்பனர்களின் – பாரதீய ஜனதாகாரர்களின் வாடிக் கையாகி விட்டது. ‘துக்ளக்’கில் கூட (16.11.2017) வந்த ஒரு கேள்வி பதிலைப் பாருங்கள்.

கே: கர்நாடக பா.ஜ.க.வினரின்  திப்புசுல்தான் எதிர்ப்புணர்வு சரியானதா? இது தேவையற்ற மத மோதலுக்கும், மனக்கசப்பிற்கும் வித்திடாதா?

பதில்: திப்புசுல்தான் கேரளாவில் செய்த அட்டூழியங்கள் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றன. நம் நாட்டில் காசி, மதுரா கோவில்களை இடித்த அவ்ரங்கசீப்புக்கு பின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவது கூட மத மோதலை ஏற்படுத்தும் என்று, அபத்தமாகப் பேசுவது மதச்சார்பற்ற அரசியலின் தத்துவமாகி விட்டது. சரித்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான உண்மை. அதை ஏற்க வேண்டும். அப்போதுதான் அது திரும்ப நடக்காது. சரித்திரம் தவறாக இருந்தால், அதைத் திருத்த வேண்டுமே தவிர, அதை மறைக்கவோ, மறுக்கவோ கூடாது.

– என்று பதில் எழுதினார் திருவாளர் குருமூர்த்தி அய்யர், ஆனால் உண்மை வரலாறு என்ன? இந்தக் கட்டுரையை படியுங்கள். உண்மை தெரியும்.

3,000 பார்ப்பனர்கள் தற்கொலையா?

இந்தியாவில் முஸ்லீம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் கூட – பார்ப்பனர்கள் தான் அவர்களை ஆட்டி படைத்திருக்கிறார்கள். திப்பு சுல்தான் காலத்திலும் இதுதான் நிலைமை. ஆனால் திப்பு சுல்தான், இஸ்லாம் மார்க்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று டாக்டர் ஹர்பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பன வரலாற்று ஆசிரியர் உண்மைக்கு மாறான தகவலை எழுதினார். எந்த ஆதாரமும் இல்லாத ஒரு புரட்டு என்பது – பிறகு ஆதாரத்துடன் தெரிய வந்தது.

திப்பு சுல்தான் என்ற முஸ்லீம் மன்னர் காலத்திலும் – பார்ப்பனர்களே ஆட்சியை ஆட்டிப்படைத்தார்கள் என்பதையும், அந்த ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வரலாற்றுப் புரட்டையும், பி.என்.பாண்டே எனும் வரலாற்று அறிஞர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இந்த சுவையான தகவல் ‘முஸ்லீம் இந்தியா’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

செய்தி விவரம்:

ஒரிசா மாநில கவர்னராக இருப்பவர் பி.என்.பாண்டே வரலாற்று அறிஞர் – நூலாசிரியர் – முன்னாள் எம்.பியும் கூட 1986 டிசம்பர் 19இல் ‘குதாபக் ஷ் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்த்தினார். முஸ்லீம் மன்னர்களைப் பற்றி அவதூறுகள், பொய்யுரைகள், கற்பனைகள், துவேஷக் கருத்துகள் எவ்வளவு எழுப்பப்படுகின்றன; திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார். அவரின் சொற்பொழிவில் ‘திப்பு சுல்தான்’ பற்றிய ஒரு வரலாற்றுப் புரட்டு விளக்கப்பட்டுள்ளது. அந்த சொற்பொழிவு வருமாறு:

வரலாற்றுப் புரட்டு

1928இல் அலகாபாத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். என் ஆய்வுக்குரிய பொருள் திப்பு சுல்தான்! ஆங்கிலோ -பெங்காளி மாணவர் பேரவையினர் என்னை அணுகி, சரித்திரப் பேரவை யைத் தொடங்கி வைத்து உரையாற்ற வேண்டுமென வேண்டினர். கல்லூரியில் இருந்து வந்த மாணவர்கள் வரலாற்றுப் புத்தகங்களுடன் இருந்தனர். அவர்களிடத்தில் உள்ள சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். திப்புசுல்தான் பற்றி அதில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அது என்னை மிகவும் கவர்ந்தது. படித்தேன்; என் மனம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.

“மக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மார்க்கத்தில் மத மாற்றம் செய்யப்பட்டதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டனர்” திப்பு சுல்தான் இதைச் செய்தார் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த சரித்திர பாடப்புத்தகத்தை எழுதியவர் மகா மஹோபாத்தியாயா டாக்டர் ஹர்பிரசாத் சாஸ்திரி – அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்துறைத் தலைவராக இருப்பவர்.

ஆதாரம் என்ன?

திப்புவைப் பற்றிய இந்தச் செய்தியைப் பார்த்த நான், சாஸ்திரிக்கு உடனே கடிதம் எழுதினேன். இந்த மதமாற்றம், தற்கொலை பற்றிய செய்திக்கு ஆதாரம் எங்கே கண்டீர்கள் என்று கேட்டு பலமுறை கடிதம் எழுதிய பிறகு பதில் வந்தது. அதில் மைசூர் கெஜட்டீயர் ஆதார நூல் என்று கூறப்பட்டது.

மைசூர் கெஜட்டீயரிலும்
ஆதாரம் இல்லை

மைசூர் கெஜட்டீயரை அலகாபாத்திலோ, கல்கத்தாவில் உள்ள இம்பீரியல் நூலகத்திலோ காண முடியவில்லை. மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர் பிரிஜ்ஜேந்திரநாத்சீல் அவர்களுக்கு எழுதி, சாஸ்திரியாரின் கூற்றுக்கு மைசூர் கெஜட்டீரியல் ஆதாரமிருக்கிறதா? எனக் கேட்டேன். துணைவேந்தர் அவர்கள் என் கடிதத்தை பேராசிரியர் சிறீகாந்தையா அவர்களிடம் அனுப்பினார். காரணம் அவர் தான் மைசூர் கெஜட்டீயரின் மறு பதிப்பு அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பேராசிரியர் சிறீகாந்தையா எனக்கு எழுதிய கடிதத்தில், 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெஜட்டீயரில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லையே என எழுதினார்.

அதோடு அவர் மைசூர் வரலாற்றில் ஆய்வு செய்தவரும் ஆவார். அப்படியொரு சம்பவம் மைசூர் வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை என்று தீர்க்கமாகக் கூற முடியும் என்றும் எழுதி இருந்தார்.

பார்ப்பனர்களை முழுமையாக நம்பினார்

அவர் மேலும் எழுதியிருந்ததாவது :

திப்பு சுல்தானின் பிரதம மந்திரி ஒரு பார்ப்பனர்தான். அவர் பெயர் பூர்ணியா. அவரின் சேனாதிபதியும் ஒரு பார்ப்பனரே. அவரின் பெயர் கிருஷ்ணாராவ். (இந்த இடத்தில் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்வது நல்லது. மைசூரில் வாழ்ந்த ராவ்களுக்கு ‘ஆலமென்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது திப்பு சுல்தான் ஆட்சியில், ‘அல் அமீல்’ என்ற அரபிப் பதத்தின் சிதைவானதே ‘ஆலமென்’ ஆகும். அதாவது திப்பு சுல்தானின் ‘நம்பிக்கைக்கு உரியவர்கள்’ ஆக கருதப்பட்டு, நம்பப்பட்டவர்கள் பார்ப்பனர்கள் ஆகும். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் வாழ்ந்து வரலாறு படைத்தார்களா என்பது கேள்விக்குறியாகும். இருப்பினும் திப்பு சுல்தான் பார்ப்பனர்களை முழுமையாக நம்பியிருந்தார் என்பது தான் உண்மை வரலாறு – ஆசிரியர் குறிப்பு)

அதோடு வேறு சில தகவல்களையும் எனக்கு அனுப்பி இருந்தார். ஆண்டுதோறும் மான்யங்கள் வழங்கப்பட்டு வந்த 156 கோயில்களின் பட்டியல் வந்தது. சிருங்கேரிநாத் ஜகத்குரு சங்கராச்சாரி அவர்களுடன் திப்புசுல்தான் மிக அணுக்கமான உறவு கொண்டிருந்தார். ஆச்சாரியாருக்கு சுல்தான் எழுதிய 30 கடிதங்களின் போட்டோ நகல்களும் வந்தன.

மைசூர் மன்னர்களிடையே ஒரு பழக்கமிருந்தது. ரங்கநாதர் கோவிலுக்கு காலை உணவுக்கு முன் சென்று பார்வையிட்டு வருவது ஒவ்வொரு அரசரின் வழக்கமாகும். அதே பழக்கத்தை திப்புவும் மேற்கொண்டிருந்தார்.

பள்ளிகளில் சரித்திரப் பாடமாக ஆன விந்தை

பேராசிரியர் சிறீகாந்தையா ஒரு அனுமானத்தையும் கூறி இருந்தார். கர்னல் மைல்ஸ் என்பவர் ‘ஹிஸ்டரி ஆஃப் மைசூர்’ என்னும் நூல் எழுதி இருக்கிறார். அதில் தப்பும், தவறும் ஏராளமுண்டு. ஒரு வேளை டாக்டர் சாஸ்திரி அந்தப் புத்தகத்தைப் பார்த்து எழுதி இருந்தாலும் இருக்கலாம்’ என்று எழுதி இருந்தார். கைல்ஸ் எழுதிய புத்தகம் திப்பு சுல்தான் வரலாறு என்னும் பாரசீக புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டதெனவும் அந்நூல் விக்டோரியா மகாராணி யின் சொந்த நூலகத்தில் உள்ளதென்றும் கூறப்பட்டது. அதையும் விசாரித்துப் பார்த்ததில் விக்டோரியா மகாராணி நூலகத்தில் அப்படியொரு நூலோ, அதன் கையேட்டுப் பிரதியோ கிடையாது என்று தெரிய வந்தது.

கேள்வி: உங்களுக்கு தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது எது?
பதில்: 1790 தீபாவளியின்போது, கர்நாடக மேல்கோட்டை நகரில் திப்பு சுல்தான், 800 மண்டயம் ஐயங்கார் பிராமணர்களைப் படுகொலை செய்ததால், இன்றும் மண்டயம் ஐயங்கார்கள் தீபாவளி கொண்டாடுதில்லை. என் நண்பர் Centre for Policy Studies அறங்காவலர் மண்டயம் ஸ்ரீனிவாஸ், தான் ஏன் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று நெடுநாட்களுக்கு முன் கூறினார். எவ்வளவு மறக்க முயன்றாலும் அவர் கூறியது, தீபாவளி என்றால் நினைவுக்கு வரவே செய்கிறது. – ‘துக்ளக்’, 5.11.2025

ஆனால் விந்தை என்னவென்றால், டாக்டர் சாஸ்திரி எழுதிய வரலாற்றுப் புத்தகம், வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நிலை பள்ளிக்கூடங்களில் சரித்திரப் பாடப் புத்தகமாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சர் அஷூகோஸ் சவுத்திரிக்கு, எல்லா விவரங்களையும் எழுதினேன். டாக்டர் சாஸ்திரி, மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர். பிரஜேந்திரநாத் சீல், பேராசிரியர் சிறீகாந்தையா ஆகியோருடன் கொண்ட கடிதத் தொடர்புகளின் நகல்களையும் அனுப்பி வைத்தேன். டாக்டர் சாஸ்திரியின் சரித்திரப் பாடப் புத்தகத்திலுள்ள சரித்திரப்புரட்டு நீக்கப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

பாட நூலாக போதிக்கத் தடை

சாஸ்திரியின் பாடப்புத்தகத்தை பாடநூலாக ஏற்றதை நீக்கி, அதைப் போதிக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டதாக சர் அஷூகோஷ் சவுத்திரி உடனே பதில் எழுதினார்.

ஆனால் இந்த பார்ப்பன தற்கொலை பொய்யுரை இன்றுங்கூட சில பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதைக் காணும் போது எனக்கு பேராச்சரியம் ஏற்படுகிறது!

இவ்வாறு பி.என்.பாண்டே தனது சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் பிரிட்டிஷார் வருகைக்கு முன் இந்தநாட்டில் நிலவியது ‘பார்ப்பன பொருள் உற்பத்தி முறை’ என்று நாம் கூறுகிறோம்!

உண்மை புரிகிறதா? பார்ப்பன உன்மத்தர்களின் புரட்டின் உயரமும் ஆழமும் எத்தகையது என்பது விளங்குகிறதா!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *