‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ மத போதகர். இவர் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காகத் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு. கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், தமது 30ஆவது அகவையில், அதாவது 1710ஆம் ஆண்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார்.
வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு, சுப்ரதீபக் கவிராயர் என்பவரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தார். தம் இயற்பெயரின் பொருள்படத் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றும், பின்னாளில் வீரமாமுனிவர் என்றும் மாற்றிக் கொண்டார்.
இலக்கியம்: தேம்பாவணி: இயேசு கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றைத் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப இயற்றிய பெருங்காவியம். இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
‘திருக்காவலூர்க் கலம்பகம்’, ‘அடைக்கல மாலை’, ‘கித்தேரியம்மாள் அம்மானை’ உள்ளிட்ட சிற்றிலக்கியங்களை இயற்றினார்.
அகராதி: இவர் உருவாக்கிய சதுரகராதி (பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி) நிகண்டுகளுக்கு மாற்றாக அமைந்தது. இவரை “தமிழ் அகராதியின் தந்தை” என்று போற்றுவர்.
தமிழ்–லத்தீன் அகராதி மற்றும் 4400 சொற்களைக் கொண்ட தமிழ்போத்துக்கீய அகராதியையும் உருவாக்கினார்.
இலக்கணம்: தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய அய்ந்து இலக்கணங்களையும் தொகுத்தார்.
உரைநடை: பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை இலக்கியத்தை எழுதினார். இதுவே தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியமாகக் கருதப்படுகிறது.
எழுத்துச் சீர்திருத்தம்: உயிர் எழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களில் நெடில் ஓசையைக் குறிப்பதற்காக ‘ஆ, ஏ’ எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ‘கே, பே’ வழக்கத்தையும் உண்டாக்கினார். இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
மொழிபெயர்ப்பு: திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்து, தமிழின் சிறப்பை மேல்நாட்டார் உணரச் செய்தார். தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 8 ஆம் நாளைத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
