கேள்வி 1: இன்னும் அய்ந்து மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (2026) வர இருக்கின்ற நிலையில், தற்போது அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற வேண்டிய அவசியம் என்ன?
– ப.யுவராணி, படப்பை.
பதில் 1: இதே கேள்வியைத்தான் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. கூட்டணித் தலைவர், முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (2.11.2025) நாம் உள்பட அனைவரும் கேட்டோம். உச்சநீதிமன்றத்திலும் கேட்கிறோம்.
(வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிய கொடுமை மற்றொரு பீகாரைப் போன்று தமிழ்நாட்டிலும் நடந்துவிடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை – மற்றொரு புறம், ‘இது அரசியலமைப்புச் சட்ட விரோத நடவடிக்கை’ என்று நாட்டு மக்களுக்கும், படித்த – பாமர மக்களுக்கும் தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும்)
கேள்வி 2: பெண்கள் பங்கேற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்று சாதனைப் படைத்ததற்கு முக்கியத்துவம் தராத ஊடகங்கள், கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடப்பது ஏன்?
– சகுந்தலா ரவி, மேற்கு தாம்பரம்.
பதில் 2: இதிலும் கபடி ‘சூத்திர – பஞ்சம’ விளையாட்டு; அது மேல்ஜாதி, உயர் வர்க்க விளையாட்டு என்ற பாகுபாடு. என்றாலும், மகளிர் வெற்றியை நாம் ஒருபுறம் பாராட்டினாலும், மறுபுறம் விளையாட்டிலும் மனுதர்மம் கோலோச்சலாமா என்பதே கேள்வி!
கேள்வி 3: தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு உரிய பலன் கிட்டுமா?
– ரேவதி சுதாகர், புதுச்சேரி.
பதில் 3: நம்பிக்கைதானே வாழ்க்கையில் முக்கியம்.

கேள்வி 4: ஒன்றிய அரசின் புதிய மின்சார சட்டத் திருத்தத்தின் மூலம் வீட்டு உபயோக மின்சாரக் கட்டணம் 80 சதவீதம் உயரும் என மின்துறை பொறியாளர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஏழை – எளிய மக்கள் தலையில் விழுந்த இடி அல்லவா? மக்களுக்குப் பெரும் சுமையான இந்தக் கட்டண உயர்வினைத் தடுப்பது எப்படி?
– மு.ரோஸ்லின், இராமநாதபுரம்.
பதில் 4: மக்களைப் பார்த்து ஒன்றிய அரசு திணிக்கின்ற இக்கட்டண உயர்வுக் கொடுமையை விளக்கும் பரப்புரைப் பணியை பொறுப்புடைய நாம் அனைவரும் செய்ய முன்வர வேண்டும்.
கேள்வி 5: இளைஞர்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக, அவர்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமை ஆவதை பிரதமர் மோடி ஊக்குவிப்பது இளைஞர்களை எங்கே கொண்டு போய் நிறுத்தும்?
– ச.சண்முகம், மணிமங்கலம்.
பதில் 5: சந்தியில்…! ஒரு புது வகைப் போதையில் கொண்டுபோய் நிறுத்தி அதிலேயே மூழ்கிடச் செய்து இளைஞர்களை நாசமாக்கும்.
கேள்வி 6: “குடும்பத் தகராறு, பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு போன்ற பிரச்சினைகளில் ‘போக்சோ’ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று உச்ச நீதிமன்றம் ஏன், எதனால் இப்படி கவலை தெரிவித்துள்ளது?
– க.கன்னிமேரி, கண்டிகை.
பதில் 6: ‘போக்சோ’ சட்டம் என்ன? இதுபோல பல சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன. கவலை தெரிவித்தால் போதுமா? அதன் Follow-up நடவடிக்கைக்கு ஆணையிட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டாமா?
கேள்வி 7: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, மகாராட்டிர மாநிலம் மும்பையில் ஜனவரி (2026) 03, 04 ஆகிய இருநாட்கள் நடைபெறுவதை அறிந்த கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியார் பற்றாளர்கள் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள், இளைஞர்கள்-மாணவர்கள், மகளிர் உள்ளிட்டோர் மத்தியில் இப்போதே மகிழ்ச்சிப் பெருக்கு கரைபுரண்டோடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– மு.கவுதமன், மும்பை.

பதில் 7: மகிழ்ச்சியோடு பார்க்கிறோம். ஜோதிபாபுலே, சாவித்திரிபாய் புலே, சாகு மன்னர், டாக்டர் அம்பேத்கரின் சமூக நீதி மண் அல்லவா அது!
நாசிக்கில் அப்போதே (1929-1930) சுயமரியாதை இயக்க மாநாடு நடைபெற்று, பாபாசாகேப் வாழ்த்தியது மராத்திய ஏடுகளில் வந்த செய்தி. அங்கே கூடி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடத்துவது வரலாற்றில் திருப்பத்தை உருவாக்கும் அடித்தளமாகும்.
கேள்வி 8: “அழகு குறைந்துவிடும் என்று 40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவதில்லை” என்று ஓர் ஆய்வின் அதிர்ச்சித் தகவல் பற்றி…?
– க.தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில் 8: போதிய அளவுக்குக் கருத்தினை அவர்களுக்கு எடுத்துக் கூறி, அறிவுறுத்த வேண்டும். ‘அழகு என்பதே நிலையானது அல்ல’ மனித வாழ்வில்; ‘பாசமே நிரந்தரமானது’ என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கேள்வி 9: “பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேரோடு பிடுங்கப்படும்” என்று தேஜஸ்வி கூறியுள்ளாரே, அது சாத்தியமா?
– வா.அசோகன், லால்குடி.
பதில் 9: 14.11.2025 அன்று தெரிந்துவிடும். அவரது உழைப்பு, ‘இந்தியா கூட்டணிக்கு மக்கள் தரும் வரவேற்பை வைத்துக் கணித்துள்ளார்!
கேள்வி 10: 1960ஆம் ஆண்டில் முயற்சி எடுக்கப்பட்டு 1990ஆம் ஆண்டில் பெண்களுக்கான சொத்துரிமை (Coparcenary) உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் கலைஞர் பெற்றுத் தந்தது எவ்விதம் சாத்தியமானது?
– பா ஓவியன், அரும்பாக்கம்.
பதில் 10: அவரது கொள்கை உறுதி. மானமிகு சுயமரியாதைக்காரராகிய கலைஞர் முதலமைச்சர் ஆனதாலும், தி.க., தி.மு.க. என்பன இரட்டைக்குழல் துப்பாக்கி என்பதாலும் இது சாத்தியமானது. சட்டப்படி தமிழ்நாட்டில் 89ஆம் ஆண்டிலும், இந்திய அளவில் 2006இல் ஒன்றிய அரசிலும் பெண்களுக்குச் சொத்துரிமை கிடைப்பது உறுதியானது. அம்பேத்கரின் வெற்றியைத் தடுத்ததை மாற்றி, ஸநாதனம் மருவி, ஒன்றிய சட்டத்திலேயே பெண்களின் சொத்துரிமைச் சட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (W.P.A.) அரசு ஏற்பட்டபோது முதலமைச்சர் கலைஞர் வற்புறுத்திய உறுதியே காரணம் ஆகும்!‘பெரியார், அம்பேத்கர், திராவிட இயக்கம் ஆகியவற்றின் உழைப்பும், முயற்சிகளும் ஒருபோதும் தோற்றுப் போகாது’ என்பதற்கான நல்ல ஓர் எடுத்துக்காட்டு இது!
