நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி 05.11.2025 அன்று அதாவது பீகார் தேர்தல் வாக்குப் பதிவிற்கு ஒரு நாள் முன்னதாக, தானே ஊடகவியலாளராக மாறி தேர்தல் முறைகேடுகள் குறித்து பல்வேறு குற்றச் சாட்டுகளை சான்றுகளோடு அடுக்கிக்கொண்டே போனார்.
நேரடிக் குற்றச்சாட்டு!
இது தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகள் வெளிப்படுத்தும் நான்காவது மக்கள் (சந்திப்பு) மன்ற நிகழ்ச்சி ஆகும். மூன்று சந்திப்புகளில் தேர்தல் முறைகேடுகளில் தேர்தல் ஆணையத்தின் மீது நேரடியாக குற்றச்சாட்டுக் கூறவில்லை.

ஆனால், இம்முறை நேரடியாக தேர்தல் ஆணையத்தில் இயக்குநர்கள் பெயரைக்கூறி இவர்கள் மோடி அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றனர் என்றார்.
காரணம், அவர் கையில் முழுமையான சான்றுகளுடன் கூடிய முறைகேடு ஆவணங்கள் இருந்தன.
எப்போதும் போலவே இதற்கு தேர்தல் ஆணையம் நேரடியாக பதில் கூறாமல் பெயர் வெளியிட விரும்பாத தேர்தல் ஆணைய உயரதிகாரிகளில் ஒருவர் ‘ராகுல்காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!’ என்று எழுதிய அறிக்கை ஒன்று மட்டுமே ஆங்கில ஊடகங்களில் வந்தது.
ராகுல் கூறிய குற்றச்சாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று, லட்சக்கணக்கில் பிற மாநிலங்களில் இருந்து பாஜகவினர் அரியானா வாக்காளர்களாக வந்துள்ளனர்.
மோசமான மோசடி
அதாவது உத்தரப்பிரதேசம், டில்லி, மத்தியப் பிரதேசத்தினர் அரியானாவில் வாக்காளர்களாக வந்து வாக்களித்துள்ளனர். இது மிகப் பெரிய மோசடியும் தேர்தல் தொடர்பான சட்டப்பிரிவுகளில் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய பெரும் குற்றம் ஆகும். கள்ள வாக்குகளை விட மோசமான இந்த மோசடி குறித்து அவர் சான்றுகளோடு கூறினார். அதாவது டில்லி, அரியானா எல்லையில் உள்ள பல்வல் என்ற மாவட்டத்தின் பாஜக தலைவர் ஒருவரது வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்கள் இருந்துள்ளனர்.

மேலும் அவரது உறவினர் ஒருவரது முகவரியில் 500 போலி வாக்காளர்கள் பதியப்பட்டு இருந்தனர்.
இவர்கள் அனைவருமே மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதைப் படங்களோடு ராகுல்காந்தி கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டிற்கும் இதுவரை தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் மறுநாள் 6.11.2025 அன்று மாலை அதிர்ச்சியூட்டும் தகவல் சமூக வலைதளத்தில் பரவியது.
மேனாள் நாடாளுமன்ற பா.ஜ.க. உறுப்பினரும் தற்போது டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ராகேஷ் சின்ஹா பீகாரில் உள்ள தொகுதி ஒன்றில் வாக்களித்துவிட்டு தான் எனது வாக்காளர் கடமையைச் செய்துவிட்டேன் என்று கூறி படம் வெளியிட்டிருந்தார்.
ராகேஷ் சின்ஹா இதே ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி டில்லியில் உள்ள துவாரகாவில் வாக்களித்தபோது அவர் படம் வெளியிட்டிருந்தார். இப்போது அவர் பீகார் பேகுசராயிலும் வாக்களிக்கிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ள ஓட்டு
இது ராகேஷ் சின்ஹாவிடம் மட்டுமல்ல, டில்லி பாஜகவின் மற்றொரு தலைவர் சந்தோஷ் ஓஜா டில்லியில் வாக்களித்த பின்னர், பீகாரின் பக்ஸர் பகுதியில் வாக்களித்ததற்கான படத்தை வெளியிட்டுள்ளார். டில்லி பாஜகவின் மற்றொரு பிரமுகரான நாகேந்திர குமார் சிவானில் வாக்களித்ததற்கான படத்தை வெளியிட்டார். இவர்கள் அனைவரும் டில்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் மாற்றம்: பீகார் அரசியலில் தனது தீவிர ஈடுபாடு காரணமாக, டில்லி வாக்காளர் பட்டியலில் இருந்த தனது பெயரை நீக்கிவிட்டு, பீகாரில் உள்ள பேகுசராயில் (Begusarai) இருக்கும் தனது பூர்வீக கிராமமான மன்சீர்பூரில் (Manseerpur) உள்ள வாக்காளர் பட்டியலில் தனது பெயரை மாற்றிவிட்டதாக ராகேஷ் சின்ஹா கூறியுள்ளார்.
முகவரி: டில்லி பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாகப் பேராசிரியராகப் பணிபுரிந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபடியால் இவரது முகவரியில் டில்லி என்றுதான் உள்ளது.
ஆதார், ஓட்டுநர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்துமே டில்லி முகவரியில் உள்ளதாக அவரது சமூக வலைதளத்தில் உள்ளது.
அப்படி இருக்க இவர் எஸ்.அய்.ஆர் விண்ணப்பத்தில் எந்த அடையாள அட்டையைக் கொடுத்திருப்பார்.
எஸ்.அய்.ஆர். எப்படி இவரது பீகார் வாக்காளர் விண்ணப்பத்தை ஏற்று இவருக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுத்திருக்கும்?
காங்கிரஸ் கட்சி (Congress) தலைவர்கள் ராகேஷ் சின்ஹா மீது “வாக்காளர் மோசடி” செய்ததாக குற்றம் சாட்டினர்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் (Saurabh Bharadwaj), சின்ஹா 5.2.2025 அன்று டில்லி துவாரகாவில் வாக்களித்துவிட்டு, பீகாரில் சிவானில் மீண்டும் வாக்களித்ததாகக் குற்றம் சாட்டினார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) மீறல்: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 19(b)இன்படி, ஒருவரின் வாக்களிக்கும் தகுதி அவர் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இடத்துடன் தொடர்புடையது என்று பரத்வாஜ் சுட்டிக்காட்டினார்.
ஒருவரது பூர்வீக கிராமத்தில் அல்லாமல், அவர் வேலை செய்யும் மற்றும் வாழும் இடத்திலேயே அவரது வாக்கு இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுவதாகவும் பரத்வாஜ் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் (Supriya Shrinate), பிப்ரவரி 2025இல் டில்லியிலும், நவம்பர் 5இல் பீகாரிலும் பாஜக தலைவர் ராகேஷ் சின்ஹா வாக்களித்தது எந்தத் திட்டத்தின் கீழ் நடந்தது என்று கேள்வி எழுப்பினார்.
இந்தச் நிகழ்வு, இரட்டை வாக்குரிமை குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதால், ஒரு அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
“பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா செப்டம்பர் 4, 2025 அன்று, டில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்காக அவர் வாக்களித்துள்ளார். அதாவது கல்லூரிப் பேராசிரியர்கள் மட்டுமே வாக்களிக்கும் இந்தத் தேர்தலில் அவர் வாக்களித்திருப்பது அவர் இன்றளவும் டில்லியில் வசிக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
இந்தியாவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ஆகியவை இரட்டை வாக்குரிமை (Dual Voting Rights) என்ற கருத்தை அல்லாமல், ஒரு நபர் இரட்டைப் பதிவு (Double Registration) அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் பதிவு செய்வதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 (Representation of the People Act, 1950)
இந்தச் சட்டம் முக்கியமாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது மற்றும் தொகுதிகளை வரையறுப்பது பற்றி கூறுகிறது.
வாக்காளர் தகுதிகள்: வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான தகுதிகளை வரையறுக்கிறது.
இரட்டைப் பதிவுக்கான தடை (பிரிவு 17): ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படுவதற்கு இந்த சட்டம் தடை விதிக்கிறது.
ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்வதற்கான தடை (பிரிவு 18): ஒரு நபர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்படுவதற்கும் இந்த சட்டம் தடை விதிக்கிறது.
குடியுரிமை: இந்தியாவில் குடியுரிமை இல்லாதவர்கள் வாக்காளராகப் பதிவு செய்ய முடியாது (பிரிவு 16).
இந்தச் சட்ட விதிகளை மீறி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் பதிவு செய்திருந்தால், அது சட்டவிரோதமானது மற்றும் அவர் வாக்களிக்க தகுதியற்றவர் ஆவார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951)
இந்தச் சட்டம் முக்கியமாகத் தேர்தல்களை நடத்துவது, வேட்பாளர்களுக்கான தகுதிகள் மற்றும் தகுதியிழப்புகள், மற்றும் தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்து கூறுகிறது.
வாக்களிக்கும் உரிமை (பிரிவு 62): வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு.
சட்டம் 1950இன் படி ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால், ஒருவர் ஒரு வாக்கை மட்டுமே செலுத்த முடியும் என்பதை இது உறுதி செய்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் 1951 ஆகியவை, அடிப்படையில் இந்தியாவில் ஒரு நபர் இரட்டை வாக்குரிமையை (இரண்டு வாக்குகள் போடுவது) தடை செய்கின்றன.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தொகுதியில் ஒரு பதிவு மற்றும் ஒரு தேர்தலில் ஒரு வாக்கு என்பதே அடிப்படை விதி ஆகும்.
இந்தச் சட்டங்களின் கீழ் இரட்டைப் பதிவு அல்லது இரட்டை வாக்கு செலுத்துதல் ஒரு தேர்தல் குற்றமாகக் கருதப்படுகிறது.
இரட்டை வாக்குரிமை சர்ச்சை: கேள்விகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பங்கு
ஏற்கெனவே ராகுல்காந்தி கூறியது இங்கு உண்மையாகி விட்டது அரியானாவில் 12.7 விழுக்காடு வாக்களர்கள் போலி வாக்களர்கள் என்று உறுதி செய்யப்பட்டது இதன் படி பார்த்தால் 7 கோடி வாக்களர்களில் கிட்டத்தட்ட 8 வாக்காளர்களில் ஒருவர் போலி வாக்காளர் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி மிகவும் நுணுக்காமக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட இந்த மோசடியை கண்டுபிடிக்கவே 3 ஆண்டுகள் உழைப்பு தேவைப்பட்டுள்ளது
இதன்படி பீகாரின் சிறப்பு வாக்காளர் பதிவில் எத்தனை வாக்காளர்கள், டில்லி, உ.பி., மகாராட்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே வாக்களித்துவிட்டு வந்துள்ளனர் என்று கண்டறிவதற்கு இன்னும் சில மாதம் தேவைப்படும்.
தேர்தல் ஆணையம், ஒரு வாக்காளருக்கு ஒரே ஆண்டில் இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் வாக்களிக்கும் வசதியை SIR பெயரில் எப்படி வழங்க முடியும்?
உண்மையில், SIR தொடங்கப்பட்டது, நீங்கள் உ.பி., அரியானா, டில்லியில் வசிக்கிறீர்கள் என்றால், பீகாரில் வாக்களிக்க முடியாது என்பதற்காகத்தான்.
வெளிவந்தது சொற்பமே. அதிலும் இவர்களே பெருமையோடு வாக்களித்தோம் என்று பதிவிட்டதால் இந்த மோசடி வெளியானது
கேலிக்கூத்து
இதன் படி எஸ் அய் ஆர் என்பது ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டது.
பாஜக தலைவர்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்று பீகாரில் வாக்களிக்கின்றனர். அவர்களின் வாக்கு உத்தரப் பிரதேசத்திலும் உள்ளது, ஹரியானாவிலும் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் உத்தரப் பிரதேசத்தில் வாக்களித்து, அதே மக்கள் ஹரியானாவுக்குச் சென்று வாக்களிக்கின்றனர்.
இவ்வளவு மோசடிகள் வெளிவந்து கொண்டு இருக்கும் போது தென் ஆப்பிரிக்காவின் தேர்தல் ஆணையத் தலைவர் மோசோ மவெபியா (Moso Mvepia) பீகார் தேர்தலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும், அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா வந்து உலகின் மிகவும் வெளிப்படையான தேர்தல் நடைமுறைகள் பற்றி ஆய்வு செய்ய விரும்புவதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமூகவலைதளம் செய்தி வெளியிடுகிறது. அது நாளிதழ்களிலும் வெளியாகிறது
மோசடி உறுதி
எத்தனை சின்ஹாக்கள், எத்தனை ஓஜாக்கள் வாக்காளர்களாக மாறி நாடாளுமன்ற தேர்தல், டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் அரியானா தேர்தலில் வாக்களிக்கிறார்கள் என்று ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது. இப்போது பிகாரிலும் இந்த மோசடி உறுதிசெய்யப்பட்டுவிட்டது
மற்றோரு அதிர்ச்சி 2019ஆம் ஆண்டு அரியானாவைச் சேர்ந்த 35 லட்சம் பேர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர்.
அவர்கள் 2024 அக்டோபரில் நடந்த அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. அதே நேரத்தில் 25 லட்சம் வாக்காளர்கள் வெளியிருந்து அதாவது டில்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் வாக்காளர்கள் ஆகி உள்ளனர்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போன, ஆனால் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த 35 லட்சம் வாக்காளர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது ஊடகங்களின் கடமையாகும்.
இவர்கள் போன்ற எத்தனை பேர் டில்லியில் வாக்களித்த பின்னர் பீகாரில் வாக்களித்து, அந்தப் பகுதியின் வாக்குப் பதிவு சதவீதத்தில் பெரும் உயர்வை ஏற்படுத்தி இருப்பார்களோ?
எஸ்.அய்.ஆர். பாஜகவினரை வேறு மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் மோசடி நடவடிக்கை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
