சென்னை, நவ.6- அர்ச்சகர், ஓதுவார், தவில் பயிற்சி பள்ளிகளில் முழு மற்றும் பகுதி நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள்
இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், 6 ஒதுவார் பயிற்சி பள்ளிகள், 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிகள், 2 வேத ஆகம பாடசாலைகள், ஒரு திவ்ய பிரபந்த பாடசாலை என 18 பயிற்சி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்துடன் மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஊக்கத்தொகை
இந்தநிலையில், 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, அனைத்து பயிற்சி பள்ளிகளில் முழுநேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக இந்த ஆண்டு முதல் ரூ.10 ஆயிரமாகவும், பகுதி நேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம், பகுதி நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.
363 பேர் பலன்
இதன்மூலம் பயிற்சி பள்ளிகளில் முழுநேரமாக பயிற்சி பெறும் 297 மாணவர்கள், பகுதிநேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்கள் என மொத்தம் 363 மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் தா.முருகானந்தம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிறீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.
வேலூர் மினி டைடல் பூங்கா
வேலூரில் ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.11.2025) திறந்து வைத்தார்.
இந்த மினி டைடல் பூங்காவில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாமக்கல் மினி டைடல் பூங்காவுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியின் போது, வேலூர் மினி டைடல் பூங்காவை முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு தள ஒதுக்கீட்டு ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
