* ஆஸ்திரேலியா – மெல்போர்னில் (நவ. 1,2) நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு
* தமிழ்நாட்டிலிருந்து 24 பேராளர்கள், பன்னாடுகளிலிருந்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் பங்கேற்பு
* தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி – ஆ.இராசா எம்.பி. நேரில் பங்கேற்பு
*பெரியார் உலகத்தையும், அதன் பணிச் சுமைகளையும் சற்றுச் சுமக்க முன்வாருங்கள் தோழர்களே!
பெரியார்-அம்பேத்கர் தத்துவ ஏவுகணை
பூமிப்பந்தில் இடைவெளி இன்றி எங்கும் பாயும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் அறிக்கை!
கடந்த நவம்பர் 1,2 ஆகிய நாள்களில் ஆஸ்திரேலியா – மெல்போர்னில் பெரியார் பன்னாட்டமைப்பும், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டமும் இணைந்து நடத்திய பன்னாட்டு மாநாட்டின் சிறப்புகளைப் பாராட்டியும், மாநாடு சிறக்க ஒத்துழைத்தவர்களைப் பாராட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பு (‘Periyar International’) தொடங்கி வெள்ளி விழாவைத் தாண்டி, சுமார் 30 ஆண்டுகளாக – மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.
டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் திருமதி சரோஜா இளங்கோவன் இணையரின் தந்தை பெரியார் பற்றிய அயலகப் பணிகள்
அமெரிக்காவில் குடியேறிய டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் திருமதி சரோஜா இளங்கோவன் ஆகியோர் தங்களது டாக்டர் பணியிலிருந்து – ஓய்வு வயதை நிறைவு செய்யும் முன்பே, இதற்கெனவே விருப்ப ஓய்வு பெற்று, முழு நேரமும் பெரியார் பணி தொடர்வதையே தமது தொண்டறமாகத் தொடருகின்றனர்.
பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் போன்ற கொள்கை உறவுகள் பலரும் இத்தொண்டில் திளைத்து, கடமையாற்றுவதில் தனி இன்பம் கண்டு, சலிப்போ, சோர்வோ இன்றி அவ்வமைப்புச் செயல்படுவதைத் தங்களது அறப்பணியாகக் கருதி, பேராதரவு தந்து, நாளும் இப்பெரும் அறிவுத் திருப்பணி – அறப்பணி தொடரத் துணை நிற்கின்றனர்.



எண்ணற்ற பலரும் குடும்பம் குடும்பமாகப் பணிப் பகிர்வு செய்து, தொண்டற இலக்கண, இலக்கியங்களாகி, ‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்று உழைக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம்
இதுபோலவே, சுமார் 4, 5 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் (‘PATCA’) தொடங்கப்பட்டது.
அங்கும் ஜாதி, வர்ண பேதம், மனிதநேயத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் ஜாதி வெறித்தனம், சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது, பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் புகுத்தி, இதற்குக் கலாச்சாரப் போர்வை போர்த்தி – அங்குள்ள ஆஸ்திரேலியர்களை ஏமாற்றி நிலைக்கும் திட்டத்தை எதிர்த்துப் பிறந்ததுதான் ‘‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம்.’’

ஆஸ்திரேலியாவில் பதிவு பெற்றது
பெர்த் நகரில் குடியிருக்கும் தானே பதவி (விருப்ப) ஓய்வு பெற்ற, சிறந்த பாரம்பரிய பெரியாரிஸ்ட் ஆன முனைவர் மகிழ்நன் அண்ணாமலை, அதுபோல சிட்னி வாழ் டாக்டர் முகம்மது ஹாரூண் காசிம் மற்றும் அவர்களது கொள்கைக் கூட்டாளிகள் எல்லாம் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கி, உழைத்து ஆஸ்திரேலியாவில் கேன்பெர்ரோ, கோல்டுகோஸ்ட், பிரிஸ்பேன், மெல்போர்ன் போன்ற பகுதிகளில் வசிக்கும் பல பெரியார் – அம்பேத்கர் கொள்கைப் பற்றாளர்களான குடும்பங்களை ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இது பதிவு பெற்றது.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில், அவர்களையெல்லாம் சந்தித்து, கலந்துரையாடி கொள்கை மகிழ்ச்சியைத் தந்திட, என்னுடன் நமது கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களும் பயணித்து, முளைத்த செடிக்கு நீர்ப் பாய்ச்சி பாதுகாத்திடுவதற்குரிய வாய்ப்பளித்த மெல்போர்ன் நிகழ்ச்சி, அன்றைய எங்களது கொள்கைப் பயணத்தின் கடைசி நாள் நிகழ்ச்சியாகும்.
மெல்போர்ன் தோழர்கள் அரங்க.மூர்த்தி, தாயுமானவர், சுரேஷ் குடும்பத்தின் போன்ற பலரின் குடும்பத்தினர் அவர்களில் சிலர் எனது தலைமையில், தங்களது வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்திக் கொண்டவர்கள்.
பெரியார் பன்னாட்டு மாநாடுகள்
இதுவரை 4 நாடுகளில்!
அப்போதுதான், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் பெருமுயற்சியால், முதல் மாநாடு ஜெர்மனி, இரண்டாவது மாநாடு அமெரிக்கா, மூன்றாவது மாநாடு குறித்து தெரிவித்தார். கனடா என்ற வரிசையில், நான்காவது மாநாட்டினை ஆஸ்திரேலியாவில் நடத்த முன்பே திட்டமிட்டதை, மெல்போர்ன் தோழர் அரங்க மூர்த்தி தலைமையிலான கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் திருமதி ராதிகா சரவணன், இளமதி போன்றோர் பலரும் கடும் உழைப்பைத் தந்தனர். எவ்வித தயக்கமும் இன்றி அங்கே பன்னாட்டு மாநாட்டை நடத்திட முன்வந்தனர்.
அமைப்பின் செயல்மிகு தலைவர் முனைவர் அண்ணா.மகிழ்நன், முகம்மது ஹாரூண் காசிம் ஹாரூண், கேன்பெர்ரோ வாழ் தோழர் சுரேஷ், திருமதி சுமதி விஜயகுமார் போன்ற பலரும் உற்சாகத்துடன் மாநாட்டை நடத்தினர்.
மெல்போர்னில் சீரும் சிறப்புடனும் நடைபெற்ற இரண்டு நாள் மாநாடுகள்
மாநாட்டில் கலந்து, அதன் வெற்றியை பூரிப்புடன் நேரில் அனுபவிக்க ஆயத்தமான நிலையில், இங்குள்ள இயக்கப் பணிகளின் அவசரத்தினாலும், உடல்நிலையைக் கருதியும், அவ்வாய்ப்பை நான் இறுதியில் இழக்க வேண்டி வந்தாலும், காணொலிமூலம் அவர்களுடன் கலந்தே மகிழ்ந்தேன் – இணையத்தின்மூலம் இன்பத்தைப் பெற்றேன் – பெற்றோம்!

ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த இரண்டு நாள் மாநாட்டிற்கு (நவம்பர் 1, 2) வாழ்த்தியருளிய ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும், துணை முதலமைச்சரும், தி.மு.க.வின் பகுத்தறிவுப் பாசறையின் இளைய தளபதியுமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வாழ்த்துரைகளும் நிகழ்ச்சித் தொடக்கத்திலேயே சிறப்பான முத்திரை பதித்தன.
தமிழ்நாட்டிலிருந்து 24 பேராளர்கள் பங்கேற்பு!
தமிழ்நாட்டிலிருந்து சுமார் 24 பேர் கொண்ட அறிவார்ந்த இருபால் கொள்கை உறவுகள், கழகப் பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களது தலைமையில் சென்று, பேராளர்களாக (Delegates) கலந்து பயனாளிகள் ஆயினர்.
இவ்விழாவிற்கு சிங்கப்பூர், கத்தார், இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்கள், கருத்தாளர்களாகவே கலந்து பங்களித்தது மாநாட்டிற்கு மேலும் சிறப்பைக் கூட்டியது.
நிகழ்ச்சியில், நமது கொள்கை வீரர், நாடாளுமன்றத்தில் பெரியார் குரலாக, திராவிடர் குரலாக விளங்கும் மானமிகு ஆ.இராசா, பாரம்பரிய ‘திராவிடக் கொள்கை முத்து’ தமிழ்நாடு சமூகநீதி கண்காணிப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பெரியார் மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் இரா.கவுதமன், கருத்தியலாளர்களான வழக்குரைஞர் அ.அருள்மொழி, போராளி ஓவியா, நாடாளுமன்ற உறுப்பினர், புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர் கவிஞர் ராஜாத்தி சல்மா, தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, அர்கேஷ் கவுடா, கருநாடக சட்ட வல்லுநர் நண்பர் பேராசிரியர் ரவிவர்ம குமார், கோகுல் கிருபா சங்கர், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர், டாக்டர் ஆதித்ய சோந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தன.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பேராசிரியர்கள் – பெருமக்கள் பங்கேற்பு
அதையும் தாண்டி, ஆஸ்திரேலிய முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஆஸ்திரேலியா விக்டோரியா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கரீனா கார்லேண்ட், செனேடர் – நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா டேவிட் ஷு பிரிட்ஜ், மெல்போர்ன் பல்கலைக் கழகம், ஆஸ்திரேலியா பேராசிரியர் ஹரி பாபுஜி, ஆஸ்திரேலியா டாக்டர் மிஷேல் ஆனந்தராஜா, ஆஸ்திரேலியா டாக்டர் முகம்மது ஹாரூண் காஸிம், ஆஸ்திரேலியா டாக்டர் கார்த்திக் தங்கராஜ், ஆஸ்திரேலியா தினகரன் செல்லையா, மனிதநேய அமைப்பின் முதன்மை அதிகாரி, ஆஸ்திரேலியா மேரி அனி, ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் தங்கமணி, மொனாஷ் பல்கலைக் கழகப் பேராசிரியர் பால் லாங், சட்டக் கல்வி மாணவி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் இனியா பிரபு வசுமதி, சிங்கப்பூர் கவிஞர் மா.அன்பழகன், கத்தார் மோகித் பலகிரி, நாட்டிங்கம் நிங்போ பல்கலைக் கழகம், சீனா – பேராசிரியர் விக்ரந்த் கிஷோர், மேனாள் மூத்த அரசியல் அதிகாரி, அய்க்கியநாட்டுச் சபை டாக்டர் ஆர்.கண்ணன், ஜப்பான் எஸ்.கமலக்கண்ணன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசிய தலைவர் டாக்டர் எம்.கோவிந்தசாமி, மிஷிகன் பல்கலைக் கழகம், அமெரிக்கா பேராசிரியர் ராம் மகாலிங்கம், கிளஸ்டர், இங்கிலாந்து பேராசிரியர் செந்தில்குமார், இங்கிலாந்து ஹரிஷ் மாரிமுத்து ஆகியோரின் கருத்தாழமிக்க உரைகள்பற்றி என்னிடம் தோழர்கள் உரைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, மற்றொருபுறம் அவற்றையெல்லாம் கேட்டிருந்தால், நம் வயது இன்னும் குறைந்து, மேலும் உழைக்கின்ற உறுதியைப் பெற்றிருக்கலாமே என்றே எண்ணத் தோன்றியது.
மாநாட்டு வெற்றிக்கு உழைத்த
அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த சல்யூட்!
மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அத்துணைத் தோழர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும், நன்றியும்!
சிலரது பெயர் விடுபட்டிருந்தாலும், அனைவரையும் உள்ளடக்கிய வரவேற்புக் குழு என்ற பொருளில் மகிழுங்கள் தோழர்களே!
பெரியார் உலகத்தையும், அதன் பணிகளின் சுமையையும் சற்று சுமக்க முன்வாருங்கள் தோழர்களே!
மெல்போர்ன் மாநாட்டிற்கு மேலும் விளம்பரம் செய்யும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து வரும் ‘இனமலர்’ நாளேடு சில வர்ணாசிரமிகளை – சங்கிகளை அலற வைத்திருப்பதே இம்மாநாட்டின் வெற்றிக்கான சரியான அடையாளம் ஆகும்!
‘‘நிறைய எழுதுங்கள்’’, அப்போதுதான் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் மேலும் விளம்பரம் பெற்று, ஆழமாக, வேரோடு விழுதுகளும் முளைக்க உதவிடும் – அவர்களுக்கும் நமது மறவாத நன்றி!
பெரியார் பன்னாட்டு அமைப்பு இணைந்து நடத்தும் அடுத்த மாநாடு ஜப்பான் அல்லது தென்னாப்பிரிக்காவில் இருக்கலாம்!
பெரியார் – அம்பேத்கர் தத்துவ ஏவுகணை பூமிப்பந்தில் இடைவெளி இன்றி எங்கும் பாயும்!
உழைத்த தோழர்களுக்கு கைகளைக் குலுக்கி, கூப்பி மகிழ்ந்து, அவர்களுக்கு நமது ‘சல்யூட்’, ‘சல்யூட்’, ‘சல்யூட்!’
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
5.11.2025
