திராவிடர் இயக்கத்தின் பயணம் – கொட்டும் மழையிலும்,
கொளுத்தும் வெயிலிலும் தொடரும்; அதைத் தடுத்து நிறுத்த முடியாது
கொளுத்தும் வெயிலிலும் தொடரும்; அதைத் தடுத்து நிறுத்த முடியாது
வெறும் தேர்தல் வெற்றிக்காக நாம் போராடவில்லை! தமிழ்நாட்டு மக்களின் மான, உரிமை வாழ்வுக்காகப் போராடுகிறோம்!!
தென்காசி, நவ.4 திராவிடர் இயக்கத் தின் பயணம் – கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் ெதாடரும். அதை தடுத்து நிறுத்த முடியாது. வெறும் தேர்தல் வெற்றிக்காக நாம் போராடவில்லை. தமிழ்நாட்டு மக்களின் மான, உரிமை வாழ்வுக்காகப் போராடு கிறோம். மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி வருவதற்கு நாம் உழைக்க வேண்டும் என்று தென்காசி பரப்புரைப் பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரையாற்றினார்.
- திராவிடர் இயக்கத்தின் பயணம் – கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் தொடரும்; அதைத் தடுத்து நிறுத்த முடியாது
- வெறும் தேர்தல் வெற்றிக்காக நாம் போராடவில்லை! தமிழ்நாட்டு மக்களின் மான, உரிமை வாழ்வுக்காகப் போராடுகிறோம்!!
- 90 நாட்கள் பரப்புரைக் கூட்டம்
- திராவிடர் இயக்கத்தின் பயணம் தொடரும்
- தமிழர்களின் மான வாழ்வு
- மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி
90 நாட்கள் பரப்புரைக் கூட்டம்
2026இல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் 90 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள பரப்புரைப் பயணத்தின் இரண்டாவது கூட்டம் 30.10.2025 அன்று தென்காசியில் உள்ள, ரயில்வே சாலையில் அமைந்துள்ள, “கலைஞர் அறிவாலயம்” அரங்கில் எழுச்சி யுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த,வீரன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
மாவட்ட கழகக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாவட்டச் செயலாளர் சண்முகம், ப.க. மாநில அமைப்பாளர் ஆலடி எழில்வாணன், ப.க. மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜபாளையம் திருப்பதி, கழகச் சொற்பொழிவாளர் பெரியார் செல்வம், அறங்காவல் குழு தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
கழகச் சொற்பொழிவாளர் பெரியார் செல்வம் நிகழ்ச்சிக்கான நோக்கத்தை எடுத்துரைத்தார். சுயமரியாதைச் சுடரொளிகள் மேலமெஞ்ஞானபுரம் சீ.தங்கதுரை, கீழப்பாவூர் பொன்ராஜ், வடகரை பாப்பா அம்மாள் ஆகிய மூவரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
தொடக்க உரையாக, ”பா.ஜ.க.வை எதிர்க்கிறோம் என்பதைவிட, அதிகமாக ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்க்கிறோம் ஏன்?” எனும் பொருளில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன் உரையாற்றினார். அவர் தனது உரையில், “திராவிடக் கொள்கை தமிழ்நாட்டில் இருக்கும் வரை பா.ஜ.க.வின் பாசிசத்திற்கு இடமே இல்லை. பாசிசத்தை வீழ்த்துகின்ற சக்தி திராவிடத்திற்கு தான் உண்டு” என்று குறிப்பிட்டார். முன்னதாக அவர், ஆசிரியருக்கு கருப்பு, சிவப்பு வண்ண செயற்கை மலர்கள் கோர்த்த மாலையை அணிவித்து மரியாதை செய்தும், தி.மு.க. சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையும் வழங்கினார். மேலமெஞ்ஞானபுரம் மகளிர், பெரியார் பிஞ்சுகள் மூலம் பெரியார் உலகம் நன் கொடைகளை ஆசிரியரிடம் வழங்கினர்.
திராவிடர் இயக்கத்தின் பயணம் தொடரும்
இறுதியாக கழகத் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரையாற்றினார். அவரது உரை விவரம் வருமாறு:
“பயணம் காரணமாக வரும் போது, சோர்வாக இருந்தேன். உங்கள் ஆதரவைக் கண்டதும் சோர்வு நீங்கிவிட்டது” என்று கூறி தோழர்களை உற்சாகமடைய செய்தார். தொடர்ந்து அவர் தனது உரை யில் “திராவிடர் இயக்கத்தின் பயணம் கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் தொடரும். அதை தடுத்து நிறுத்த முடியாது” என்று முழக்கமிட தொண்டர்கள் எழுப்பிய கரவொலி விண்ணதிர அதிர்ந்தது.
மேலும் ஆசிரியர் அவர்கள் திராவிடர் இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். ’80 ஆண்டுகளுக்கு முன்னால், தானும், கலைஞரும் மாணவர் பருவத்தில் திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரத்திற்கு வந்து கொசுக்கடியில் திண்ணையில் தூங்கியதையும், மாட்டு வண்டியில் தூங்கியபடியே பயணம் செய்ததையும்’ எடுத்துரைத்தார். மேலும் தன்னைப் பற்றிப் பேசும் போதெல்லாம் வயதைக் குறிப்பிட்டுப் பேசுவதை சுட்டிக்காட்டி, “95 வயது வரையில் மூத்திர சட்டியைத் தூக்கிக்கொண்டு இந்த மக்களுக்காக உழைத்த தந்தை பெரியார் தான் நமது வழிகாட்டி” என்பதைக் குறிப்பிட்டு தான் பெரியார் வழியில் சென்று கொண்டிருப்பதை நினைவுபடுத்தினார்.
தமிழர்களின் மான வாழ்வு
கழகத் தலைவர் தொடர்ந்து பேசுகை யில், தி.க. மற்றும் தி.மு.க. இரண்டிற்கான கொள்கை உறவை விவரித்தார். அதற்காக ஆத்தூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையின், “தி.க.வும், தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்” என்று பேசிய உன்னதமாக உரையை சுட்டிக்காட்டினார். ஆகவே, 2026 இல் திராவிட மாடல் அரசு மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்று சொல்வது, வெறும் தேர்தல் வெற்றிக்காக அல்ல; தமிழர்களின் மான வாழ்வு வீழ்ந்து விட கூடாது என்பதற்காகத்தான்” என்று குறிப்பிட்டார்.
மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி
திராவிடர் இயக்கத்தின் மதச்சார்பற்ற கொள்கையைச் சுட்டிக்காட்ட, 1967 இல் இதே தென்காசியில் இடைத்தேர்தல் வந்தபோது, கதிரவன் என்ற பெயரு டைய ஒரு இசுலாமியரை அண்ணா நிறுத்தியதை எடுத்துரைத்து, இதற்கு நேர் எதிரான கொள்கை உடைய ஆரியத்தில், “நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக்கூடாது” என்று சங்கராச்சாரியார் சொன்னதை ஒப்பிட்டுக் கூறி, எது நமக்கான தத்துவம் என்பதை மக்களுக் குப் புரிய வைத்தார். தேர்தலைப் பற்றிப் பேசிவிட்டதால், அதையொட்டி சில கருத்துகளை முன்வைத்தார். அதாவது, சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சம்ப வத்தை நினைவு கூர்ந்து, “ஓட்டுத் திருட்டு நடைபெறுகிறது. அதுவும் வேலியே பயிரை மேய்கிறது. எச்சரிக்கையுடன் செயலாற்றி, உங்கள் சந்ததிகள் நலம் பெற, 2026 இல் மறுபடியும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமர வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள், அமைப்புகள் என வரிசையாக வந்து பெரியார் உலகத் திற்கு மொத்தம் ரூபாய் 15,64,000/- நன்கொடைகளை வழங்கினர்.
இறுதியாக தென்காசி நகரச் துணைச் செயலாளர் தோழர் சவுந்திரபாண்டியன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு தென்காசி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தோழர்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி சார்பாகவும் மக்கள் வந்திருந்து ஆசிரியரின் உரையை செவிமடுத்துச் சென்றனர்.
காலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்கிருந்து திருநெல்வேலி களக்காட்டில் நடைபெற்ற மூன்றாம் கூட்டத்திற்கு, தனது கருஞ்சட்டை வீரர்களுடன் புறப்பட்டார். நிகழ்ச்சி தொடங்கி நிறைவு பெறும் வரையில் ரயில்வே சாலையில் அமைந்திருக்கும் கலைஞர் அறிவாலயம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
