நாகப்பட்டினம், நவ.4- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
நாகை நம்பியார் நகரைச் சேர்ந்தவர் பாரி (வயது 40). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 10 பேரும் கடந்த 30ஆம் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று (3.11.2025) அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மேற்கண்ட 10 மீனவர்களை சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
மற்றொரு விசைப்படகு
இதைப்போல கடந்த 31ஆம் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தராஜா (54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராஜா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்த போது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.
31 பேர்
மேலும் கடந்த 30ஆம் தேதி நாகை பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆனந்தகுமார் (42) விஜயகுமார் (35), உள்பட 11 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்தபோது அவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துசென்றனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 31 பேரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ரூ.3 கோடி மதிப்பிலான 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து 31 மீனவர்களை சிறைபிடித்து சென்ற சம்பவம் நாகை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்
மாவட்ட மீனவர்கள்
இதைப்போல ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதாளை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் 4 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
