வாசிங்டன், நவ.3- அமெரிக்காவில் பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 1975ஆம் ஆண்டு கூட்டாட்சி துணை ஊட்டச்சத்து உதவி திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி உணவு வாங்குவதற்காக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறன. இந்த திட்டத்தால் சுமார் 4 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர்.
ஆனால் இந்த திட்டத்துக்கான மானியத்தை நிறுத்துவதாக அமெரிக்க வேளாண் துறை சமீபத்தில் அறிவித்தது. இதனால் ஏழை மக்கள் பலரும் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே இலவசஉணவுகள் வழங்கப்படுகின்றன. அதனை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்லும் நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
ராணுவத்தில் இருந்து
மூன்றாம் பாலினத்தவர்களை வெளியேற்ற புதிய கொள்கை
பென்டகன் அறிவிப்பு
வாஷிங்டன், நவ. 3- ராணுவத்தில் இருந்து மூன்றாம் பாலினத்தவர்களை வெளியேற்றும் புதிய கொள்கையை பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் 2ஆவது முறையாக பதவியேற்ற பிறகு அறிவித்த பல அதிரடி அறிவிப்புகளில், ‘மூன்றாம் பாலினத்தவர்கள்’ என்ற இனமே இல்லை என்பதும் ஒன்று. ராணுவத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களை வெளியேற்றும் விதமாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து சேவையில் நீடிக்கலாமா என்பது குறித்து ராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் ராணுவ பிரிப்பு வாரியங்கள் முடிவு செய்தாலும், ராணுவ தளபதிகள் அந்த முடிவை மீறலாம் என பென்டகனின் பணியாளர்கள் மற்றும் தயார்நிலைக்கான துணை செயலாளர் ஆன்டனி டாடா தெரிவித்துள்ளார். இது வாரியங்கள் சுதந்திரமாக செயல்படும் நீண்டகால கொள்கையுடன் முரண்படான முடிவாகும். கடந்த 8ஆம் தேதி அனைத்து படைபிரிவுகளுக்கும் இந்த ஆணை அனுப்பப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
