சென்னை, அக்.30 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியது.
முதுநிலை மருத்துவ படிப்பு
நாடுமுழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் ‘நீட்’ தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
தமிழ்நாட்டில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள், நீட் தேர்வை கடந்த ஆக.3-ஆம் தேதி எழுதினர். தேர்வு முடிவுகள் ஆக.19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், எம்டி எம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ 2025-2026-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியது. அதன்படி, https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் நவ.5-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். அன்றைய பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். நவ.5-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களைத் தேர்வு செய்யலாம். நவ.6, 7-ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 8-ஆம் தேதி அதன் விவரம் வெளியிடப்படும்.
மேலும் 9-ம் தேதி முதல் 15-ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். 16-ஆம் தேதி முதல்18-ம் தேதிக்குள் மாணவர்களின் விவ ரங்களை கல்வி நிறுவனங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு நவ.19-ஆம் தேதியும், 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வு டிச.8-ஆம் தேதியும், இறுதியாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிச.30-ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக,மீதமுள்ள 50 சதவீத அரசு இடங்கள், தனியார் கல்லூரிகளின் மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. எம்டி,எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான 2025-2026-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான மாநில கலந்தாய்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பது நவ.6-இல் தொடங்குகிறது.
வழக்கத்தைவிட காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறப்பு
தமிழ்நாட்டுடன் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது
கருநாடக அரசு தகவல்

பெங்களூரு, அக்.30 இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டிற்கு 273 டி.எம். சி. காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டுடன் காவிரி நீர் பிரச்சினை ஏற்படாது என்றும் கருநாடக அரசு கூறியுள்ளது.
காவிரி நதிநீர்
தமிழ்நாடு – கருநாடகம் இடையே அடிக்கடி காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை நீடித்து வருகிறது. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க கருநாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கருநாடகத்தில் மழை பொழிவு குறைவாக இருக்கும் சமயத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை பூதாகரமாக கிளம்பி வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணையம் இரு மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து கருநாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக கருநாடக அணைகள் நிரம்பின. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருநாடக நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
2 மடங்கு தமிழ்நாட்டுக்கு திறப்பு
நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு வழக்கமாக வழங்க வேண்டிய நீரை விட 2 மடங்கு தண்ணீரை திறந்து விட்டுள்ளோம். அதனால் தமிழ்நாட்டுடன் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. தற்போது காவிரி படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் 115 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. திறக்க வேண்டும். கடந்த ஜூன் முதல் இதுவரை தமிழ்நாட்டிற்கு 135 டி.எம்.சி. நீர் திறந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வரை தமிழ்நாட்டிற்கு 273.426 டி.எம்.சி. நீர் திறந்து விட்டுள்ளோம். அதாவது 135.412 டி.எம்.சி. நீர் அதாவது 135,412 டி.எம்.சி. நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
