கட்சி நிர்வாகிகளை சந்திப்பதுகூட ஒரு செய்தியா? இழப்புக்கு ஆளானவர்களை தமது இடத்திற்கு அழைத்து இரங்கல் தெரிவிப்பதா? இரங்கல் தெரிவிப்பது என்பது ஏதோ ஒரு விநியோகமா? ஆலங்குடியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆலங்குடி, அக்.30 இரங்கல் என்பது, இழப்புக்கு ஆளானவர்களின் வீட்டிற்குச் சென்று தெரிவிப்பதே தவிர, இழப்புக்கு ஆளானவர்களைத் தம் இடத்திற்கு அழைத்து தெரிவிப்பதல்ல; இந்த நாகரிகம்கூடத் தெரியாதவர்கள் கட்சி நடத்துவதும், ஆட்சிக்கு வரத் துடிப்பதும் வேடிக்கையே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (29.10.2025) அறந்தாங்கி மாவட்டம் ஆலங்குடிக்குப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி – இதுதான் திராவிடம்  திராவிட மாடல் ஆட்சி’’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம் அந்தச் சுற்றுப்பயணம் இந்தப் பகுதியிலிருந்து தொடங்கப்படுகிறது. பல ஊர்களில் அது தொடங்கப்பட்டாலும்கூட, இன்றைக்கு அறந்தாங்கி மாவட்டம் ஆலங்குடியிலிருந்து தொடங்கி எல்லாப் பகுதிகளிலும் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கின்றோம்.

தமிழ்நாடு முழுக்க பிப்ரவரி மாதம் வரையில் இடைவெளி விட்டுவிட்டு இப்பிரச்சாரம் நடைபெறும்.

இன்றைக்குத் திராவிட மாடல் ஆட்சி ஏன் பாது காக்கப்படவேண்டும்? ஏன், தி.மு.க. கூட்டணி மீண்டும் வெற்றி பெறவேண்டும்? என்று சொன்னால், நம்முடைய சமுதாயம் அடைந்திருக்கின்ற வெற்றிகள் காப்பாற்றப்படவேண்டும்; நடைமுறைகள் காப்பாற் றப்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பய ணத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.

திருத்தணிமுதல் குமரி வரை பிரச்சாரப் பயணம்!

செய்தியாளர்: இந்தப் பயணம் எப்பொழுது முடியும்?

தமிழர் தலைவர்: பொதுவாக எங்கள் பயணம் முடிவதில்லை. ஆனாலும், இந்தப் பிரச்சாரப் பயணம் பிப்ரவரி மாதம் வரையில் நடைபெறும். திருத்தணிமுதல் குமரி வரையில் விட்டுவிட்டுப் பிரச்சாரம் நடைபெறும்.

திருச்சி சிறுகனூரில்  100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் அமையவுள்ள ‘பெரியார் உலகம்’ என்ற ஒரு சிறப்பான திட்டத்திற்கு, நம்முடைய முதலமைச்சர், சட்டப்பேரவை தி.மு.க. உறுப்பினர்கள், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், மாநக ராட்சித் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் நன்கொடை அளித்ததுபோன்று, மக்களும் அவர்களுடைய பங்க ளிப்பைச் செய்கிறார்கள் என்ற வகையில், 7 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை இங்கே நடைபெற்றக் கூட்டத்தில் அளித்தார்கள். அவர்களுக்கு நன்றி!

எனவே, எல்லாப் பகுதிகளிலும் இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்தப் பயணம் வெற்றிகரமாக, சிறப்பாக அமைந்திருக்கின்றது.

இரங்கல் சொல்லுவதுகூட
எப்படி என்று தெரியவில்லை!

செய்தியாளர்: பனையூரில் த.வெ.க. கட்சி நிர்வாகி களை விஜய் சந்திக்கவிருக்கிறாரே, அதுகுறித்து தங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: ஒரு கட்சியைத் தொடங்கியவர், கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதையே ஒரு பெரிய அதிசய சாதனை போல் சொல்கிறார்கள். இதுபோன்று எந்தக் கட்சியிலும் இல்லை.

நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டுத்தான் கட்சியைத் தொடங்குவார்கள். கொள்கையைச் சொல்லிவிட்டுத்தான் கட்சியைத் தொடங்குவார்கள்.

ஆனால், கொள்கை என்னவென்று தெரியாது; நிர்வாகிகள் யார் என்று தெரியாது.

ஒரே ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு, கட்சியை நடத்துகின்றார்.

இரங்கல் சொல்லவேண்டும் என்றால், இழப்பு நடந்த வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கவேண்டும். ஆனால், இரங்கல் சொல்வது என்றால், என்னவென்றே தெரியவில்லை. அந்த இரங்கலைக் கூட, இங்கே வந்து வாங்கிக் கொண்டு போங்கள் என்ற நிலைதான் அக்கட்சியில் இருக்கிறது. இந்த நாகரிகம்கூட தெரியாத வர்கள் கட்சி நடத்துவதும், ஆட்சிக்கு வரத் துடிப்பதும் வேடிக்கையே!

இரங்கலை, ஆறுதலைக்கூட ஒரு விநியோகம் போன்று வைத்துக்கொண்டு நடத்துகின்ற கட்சி எப்படி இருக்கும் என்பதை, மக்களின் அறிவுக்கே விட்டு விடுகிறோம். இதற்கு மேல் அதற்குப் பதில் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *