வாசிங்டன், அக். 29- அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காசா போா் நிறுத்த திட்டத்தின்கீழ் அங்கு அனுப்படவிருக்கும் பன் னாட்டு படையில் துருக்கி வீரர்கள் இடம் பெற அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு அமைதிப்படை
இது குறித்து ஹங்கேரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிடியூன் சார் நேற்று (28.12.2025) கூறியதாவது:
காசா விவகாரத்தில் துருக்கி அதிபா் எா்டோகன் நீண்ட காலமாகவே இஸ்ரேலுக்கு எதிராகச் செல்பட்டுவருகிறாா். எனவே, அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக அனுப்பப்படவிருக்கும் பன்னாட்டு படையில் துருக்கி இடம் பெறுவதை நாங்கள் எதிா்க்கிறோம்.
காசாவுக்குள் தங்களது படையினரை அனுப்ப விரும்பும் நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் நியாயமாகவாவது நடந்துகொண்டிருக்க வேண்டும் என்றாா் கிடியூன்.
எனினும், இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி அதிபா் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபட்டாா் என்பதை அவா் விளக்கவில்லை.
காசா போரின்போது, இஸ்ரேல் ராணுவத்தின் கடுமையான நடவடிக் கைகளை எா்டோகன் தொடா்ந்து கண்டித்துவந்தாா். இதனால் இரு நாட்டு அரசுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலுடன் மேற்கொண்டிருந்த வா்த்தக ஒப்பந்தங்கள் பலவற்றை எா்டோகன் நிறுத்திவைத்தாா்.
இந்தச் சூழலில், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் முன்வைத்த 20 அம்ச திட்டத்தில், இஸ்ரேல் ராணுவ வெளியேற்றத்துக்கு, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கைவிட்டதற்கும் பிறகு அங்கு அமைதியை நிலை நாட்ட பன்னாட்டு நாடுகளைச் சோ்ந்த படையினா் தற்காலிகமாக நிறுத்தப்படும் அம்சமும் இடம் பெற்றுள்ளது.
அந்தப் படையில் துருக்கி வீரா்களும் இடம் பெறுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளாா்.
