சென்னை, அக்.28- கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். இதையடுத்து அந்த கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்பிணை கேட்டு புஸ்சி ஆனந்த் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் கிளை ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இதையடுத்து 2-ஆவது முறையாக புஸ்சி ஆனந்த் முன்பிணை கேட்டு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று (27.10.2025) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
அப்போது கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் சி.பி.அய்.யிடம் ஒப்படைத்துள்ளது. எனவே, கரூர் காவல்துறை ஆய்வாளர் எதிர்மனுதாரராக சேர்த்து தாக்கல் செய்துள்ள இந்த முன்பிணை மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று புஸ்சி ஆனந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.அறிவழகன் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேபோல, கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.அய். விசாரணை கேட்டு சென்னை மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் உமா ஆனந்த் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், “கரூர் வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்கனவே சி.பி.அய். விசாரணைக்கு மாற்றியுள்ளதால், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கை முடித்து வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
திருவள்ளூர் அருகே அறிவுசார் நகரம்
சுற்றுச்சூழல் அனுமதி கோரி
சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்
சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்
சென்னை, அக்.28 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அறிவுசார் நகர கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
அறிவுசார் நகரம் என்பது திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே செங்காத்தக்குளத்தில் அமைக்கப்படும் ஒரு திட்டமாகும். இது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்தால் (TIDCO) உருவாக்கப்படுகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே அறிவுசார் நகர கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த அறிவுசார் நகரம் ஊத்துக்கோட்டை அருகே செங்காத்தக்குளத்தில் 167 ஹெக்டேரில் ரூ.853 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. 69.89 ஹெக்டேரில் கல்வி நிறுவனங்கள், 10ஹெக்டேரில் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. 5 ஹெக்டேரில் மருத்துவ வசதிகள், 7 ஹெக்டேரில் பல்வேறு வசதிகள், 3.6ஹெக்டேரில் குடியிருப்பு வசதிகள் அமைகிறது. 39.672 ஹெக்டேரில் பசுமைப் பரப்பளவு, 3.044 ஹெக்டேரில் விளையாட்டு வளாகம், 15.839 ஹெக்டேரில் சாலை வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
‘மோந்தா’ புயல்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட
9 மாவட்டங்களில் கன மழை பெய்யும்
9 மாவட்டங்களில் கன மழை பெய்யும்
வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, அக்.28 வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (28.10.2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மோந்தா புயல்
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 520 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 570 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாக இன்று இரவில் கரையைக்கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
9 மாவட்டங்களில் மழை
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழையும் சென்னை, செங்கை, காஞ்சி,ராணிப் பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி கடலோ ரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை செய்துள்ளது.
