சென்னை, அக். 27– வடகிழக்கு பருவமழை எதிரொலியாக 16 தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்ட றியப்பட்டுள்ள நிலையில் சென்னைக்கு 120 தீயணைப்பு வீரர்கள் 17 ரப்பர் படகுகளுடன் வந்து முகாமிட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகி வரும் சூறாவளி புயல் நாளை (28.10.2025) ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சுற்றி உள்ள மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை புறநகர் பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.
தீயணைப்புத் துறையிலும், பிற மாவட்டங்களில் இருந்து 120 தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஏற்கெனவே சென்னையில் 900 வீரர்கள் உள்ள நிலையில் இவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தாம்பரம், முடிச்சூர்
தாம்பரம் முடிச்சூர், வேளச்சேரி, சேலையூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பகுதி என கண்டறியப்பட்ட 16 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து 17 ரப்பர் படகுகளும் சென்னை கொண்டு வரப்பட்டு உள்ளன. இதுதவிர மீட்புப் பணிகளுக்கு தேவைப்படும் ரப்பர் மிதவைகள், கயிறு, மரம் வெட்டும் எந்திரங்கள் ஆகியவைகளும் தயாராக வைத்து உள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
