பிந்துனுவேவா படுகொலைகள்: தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் உறைந்த சோக நிகழ்வு (25.10.2000)
இலங்கை, பிந்துனுவேவா: இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பிந்துனுவேவா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள், 2000, அக்டோபர் 25 அன்று சிங்கள சமூகவிரோதிகள் கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிகழ்வு, தமிழின வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகப் பதிவாகியுள்ளது. உலக வரலாற்றில் அரச அமைப்புகளின் தடுப்புக்காவலில் இருந்த அரசியல் கைதிகளை சமூகவிரோதக் கும்பலிடம் ஒப்படைத்துக் கொலை செய்யக் கூறிய இத்தகையதொரு கொடுமை, மிகச் சில கொடுங்கோல் ஆட்சிபுரியும் நாடுகளில் கூட நிகழாத ஒரு சோக நிகழ்வாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ், 18 முதல் 24 வயதுடைய தமிழ் இளைஞர்கள் – இவர்களில் பெரும்பாலானோர் திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் – கைது செய்யப்பட்டு, கொழும்பிற்குக் கிழக்கே சுமார் 200 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த மிகவும் பாதுகாப்புக் குறைவான பிந்துனுவேவா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் இளைஞர்களை சமூகவிரோதக் கும்பலிடம் ஒப்படைத்த ராணுவம்
2000, அக்டோபர் 25 அதிகாலையில், நூற்றுக்கணக்கான சிங்கள சமூக விரோதிகள் கத்திகள், வாள், சம்மட்டி போன்ற ஆயுதங்களுடன் முகாமிற்குள் அத்துமீறி நுழைந்து, உறக்கத்தில் ஆழ்ந்திருந்த தமிழ் இளைஞர்களை வெட்டிக் கொன்றனர். சிலர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இதில் 27 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்; மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
இந்தப் படுகொலைகள் நடந்ததற்கு முதல் நாளே, முகாமில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் எந்தவிதக் காரணமும் இன்றி முகாமில் இருந்து அகற்றப்பட்டிருந்தனர். அத்துடன், படுகொலைகள் நடந்தபோது முகாமைக் காக்க வேண்டிய காவலர்களும் அங்கு இல்லை.
படுகொலைகள் தொடர்பான நீதி விசாரணை அமைக்கப்பட்டபோதும், அதன் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. குற்றவாளிகள் என்று ஆரம்பத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சிலர், பின்னர் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதனால், நீதி விசாரணை அறிக்கை வெறும் ‘கண் துடைப்பான ஒன்றாக’ அமைந்து விட்டது. இச்சம்பவம், அரசியல் கைதிகள் அரச அமைப்புகளால் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசி யத்தை உணர்த்தும் ஒரு மோசமான கோர நிகழ்வாக, தமிழர்களின் நெஞ்சில் அழியாத சோகமாகப் பதிவாகி உள்ளது.
