ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1:    தீபாவளி எனும் மூடப்பண்டிகை அன்று கொஞ்சமும் குற்ற உணர்வின்றி பட்டாசுக் கழிவுகளையும்-பிளாஸ்டிக் கழிவுகளையும் டன் கணக்கில் வீதிகளில் சிதறடிப்பதும், அவை வெளியேற்றும் நச்சுத் தன்மை மிகுந்த புகையை சுவாசிப்பதும் படித்த பண்பாளர்களிடையே கூட காணப்படுவது எதைக் காட்டுகிறது?

– எஸ். பூபாலன்,  பூந்தமல்லி.

பதில்: மூடத்தனத்தின் முடை நாற்றம் – ஒரு புறம், காசை கரியாக்கும் பொறுப்பற்ற அர்த்தமற்ற வெடிச்சத்தம். காது – ஒலி மாசு முதல் இதய மாசுப் பழுது வரை இன்னொருபுறம். தேர்தல் வாக்கு வங்கி அரசியல் நிர்பந்தத்தில், கொள்கை தெரிந்தும், அறிந்தும் மறுக்காமல் போதல் நிலை முதல் பலப் பல….அறிவு, அறிவியல் – அரசியலுக்குப் பின்னே தள்ளப்படும் அவலம்! இதனை எதிர்த்து சமூக விஞ்ஞான அறிவியலாளர், பகுத்தறிவாளர் முயற்சிகள் சிறியவைதான் என்றாலும் இதற்குரிய மருந்து தரும் மருத்துவம் போல இன்றியமையாததை சலிக்காது நாம் அறுவுறுத்தி வருகின்றோம். வரும் ஆண்டு – இதனால் ஏற்படும் தீங்கினைப் பற்றி முன்கூட்டியே ஒரு மாதம் அறிவியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு – ஒலி மாசு முதல் பலவற்றைப் பாடம் போல் மக்களுக்கு மாலை நேர வகுப்பினை மீண்டும் கற்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கடமையின் தேவையாகும்!

கேள்வி 2:   மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள புனே பேஷ்வா கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்தினர் என்பதற்காக, அவ்விடத்தை புனிதப்படுத்துவதாகக் கூறி இந்துத்துவாவினர் ஒன்று திரண்டு கோமியம் மற்றும் பசுஞ் சாணம் தெளித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மதவெறி மூடச் செயல்கள்  மாய்க்கப்பட என்னதான் தீர்வு?      

– பா. ஆகாஷ்,  புதுடெல்லி.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி மாற்றம் தான் ஒரே தீர்வு. அதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் முழு வீச்சில் நடைமுறையில் வர வேண்டும்.

கேள்வி 3:   ஆந்திராவில் சொத்துப் பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை மூன்று நாள்களாக அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகனால், வீட்டு வாசலிலேயே அந்த உடல் அனாதையாகக் கிடத்தப்பட்ட அவலம் குறித்துத்தாங்கள் கூறுவது என்ன?    

  – மு. கவுதமன்,  பெங்களூரு.

பதில்: ஆந்திராவில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இல்லாத குறையினால் ஏற்பட்ட அவலம்! அங்கு பகுத்தறிவாளர்கள் கடமையாற்றுவது தீவிரமாக வேண்டும்.      

கேள்வி 4: மனித செல்கள் ஆய்வுக்கு உதவும் நவீன கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது அறிவியல் உலகின் வியத்தகு சாதனை. இது ஆன்மிகவாதிகளுக்குத் தரவல்லப் படிப்பினை என்ன?  

 – த. அறிவழகன்,   பாலக்கோடு.  

பதில்: ஆன்மிகவாதிகளுக்கு அறிவியல் உலக சாதனை தெரியாது. பக்தி, மூடத்தன போதையினைப் பரப்ப அறிவியல் கருவிகளைப் ஆர்.எஸ்.எஸ். உள்பட அந்தப் பலரும் பயன்படுத்தி வருவதும் தெரிந்த ஒன்றே!

கேள்வி 5: கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்குவதிலும், ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்வதிலும் இரவு பகல் பாராமல்  செயல்பட்டு வருவது கண்டும் குறை கூறுபவர்கள் வாய்கள் ஓயவில்லையே – ஏன்?          

           – பா. ஆனந்தன்,  திருவொற்றியூர்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: உள்நோக்கத்தோடு, பதவியாசையில் குற்றம் சொல்லும் குறைமதியாளர்களின் குதர்க்கங்களை முறியடிக்க, ஒவ்வொரு பயனாளியும் திண்ணைப் பிரச்சாரம் முதல் தெருமுனைப் பிரச்சாரம் வரை அவரவர் பங்குக்கு சளைக்காமல் செய்வது முக்கியமானதாகும். 2026இலும் மீண்டும் வலுவோடும், பொலிவோடும் ‘திராவிட மாடல்’ ஆட்சி, ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதே இதற்குச் சரியான தீர்வாய் அமையும்.

கேள்வி 6:  ஏழை-எளிய மக்கள் கஞ்சிக்கு வழியின்றியும், தலைக்கு எண்ணெய் இன்றியும் அல்லல்படும் இந்தியாவில், தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 26.17 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைத்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்ளுகிறார்களே?

                   – ஆர். கார்த்தி,  டில்லி.

பதில்: உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் அவர்கள், ஒன்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அகல்விளக்குகளுக்கு எண்ணெய்யைத் திரட்டி நிரப்புவதற்கு செய்யப்பட்ட செலவையும், செல்வம் பாழாக்கப்படுகின்ற அவலம், வறுமையின் கொடுமைக்காட்சியையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவைகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.  – பா.ஜ.க. ஆதரவுக்கென்றும் – உ.பி. ஆட்சியின் அவலங்களை – குறைபாடுகளை மறைக்கவும், மக்கள் மறக்கவும் – திசை திருப்பவுமே! 

கேள்வி 7:   அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசின் நிர்வாகம் மற்றும் கொள்கைகளைக் கண்டித்து வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை எதிராக உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் அவருக்கு எதிராக 70 லட்சம் மக்கள் குவிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து?      

 – இராஜன் ஜேம்ஸ்,  கிழக்கு தாம்பரம்.

பதில்: முதலில் ஆச்சரியக்குறி, பிறகு கேள்விக்குறி! பிறகு காலத்தின் கட்டாயம் – முற்றுப்புள்ளி. பாசீச ஆட்சி நடத்தும் எந்த ஆட்சியினரும் படிப்பினையை, பாடத்தினை இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி 8: ஜாமின் கிடைத்தபோதிலும், அதற்கான தொகையை செலுத்த முடியாமல், சிறையிலேயே அவதிப்படும் ஏழை
விவசாய கைதிகள் நலனுக்காக தேசிய குற்ற ஆவணப்பிரிவு மூலம் நீதிமன்றங்களுக்கு ஜாமின் தொகை செலுத்தும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் கொண்டுவந்திருப்பது போன்று மேலும் பல திட்டங்களை அறிவிப்பதில் உள்ள தேக்க நிலைக்குக் காரணம் என்ன?   

   – பா. அக்சயா, ஆண்டிப்பட்டி.

பதில்: மனிதாபிமானமற்ற ஆணவ அதிகார வர்க்கமே!

கேள்வி 9:  ‘துரோகிகளின் வாக்கு எனக்குத் தேவையில்லை’ என்று சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா?

 – மல்லிகா,  மாங்காடு.

பதில்: அந்த ஒன்றிய அமைச்சரின் அரசியலமைப்புச் சட்ட விரோத, வெறுப்புப் பிரச்சாரத்திற்கு – நியாயப்படியும், சட்டப்படியும் நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும். சட்டமும் –  நிர்வாகமும் குறட்டை விட்டுத் தூங்குகிறதா-  அல்லது கேட்டுப் பரவசம் அடைகிறதா என்பதை மக்களும் புரிந்து கேட்டால் விழிப்பும் தானே ஏற்படவே செய்யும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *