நாவலர் – செழியன் அறக்கட்டளை – பாவேந்தர் தமிழ் இலக்கிய மன்றம்   இணைந்து நடத்திய நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!

6 Min Read

ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி நமக்குக் கல்வியை மறுத்தார்கள்
தந்தை பெரியார் ஏற்படுத்திய தலைகீழ் புரட்சியின் விளைச்சல் தான்
உலகப் புகழ்பெற்ற வி.அய்.டி. பல்கலைக்கழகம் எனும் கல்வி ஆலமரம்!

வேலூர், அக்.24 சூத்திரன் கல்வியைக் கற்கக் கூடாது என்றுதான் மகாபாரதத்தில் ஏகலைவனின் வலது கை கட்டை விரலை வெட்டி வாங்கினார்கள். அப்படி இருந்த நமது சமுதாயத்தில் தான், கல்விக்கோ முனைவர் கோ.விஸ்வநாதன் ஆலமரத்தைப் போல் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி யிருக்கிறார். அதற்குக் காரணம் தந்தை பெரியார்; திராவிடர் இயக்கம் என்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். நிகழ்வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

தமிழ்நாடு

சிறப்புச் சொற்பொழிவாளர்கள்

நாவலர் – செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவு 22.10.2025 அன்று வேலூர் வி.அய்.டி. பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. மரிய செபாஸ்டியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வி.அய்.டி.யின் துணைத் தலைவர் முனைவர் கோ.வி.செல்வம் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி உரையாற்றினார். சங்கர் விஸ்வநாதன், மூத்த வழக்குரைஞர் ஜி.அன்புமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் சிறப்புச் சொற்பொழிவாளர்களாக திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் அழைக்கப்பட்டு வருகை தந்து உரையாற்றினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

கழகத் தலைவர் எல்லையற்ற மகிழ்ச்சியும், பூரிப்பும் பெற்றவராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிப்பதைச் சுட்டிக்காட்ட, ‘‘பெரியாரும், திராவிடர் இயக்கமும் என்ன செய்தது என்று கேட்கிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். அதற்குப் பதில் தான், இந்த அண்ணா அரங்கமும்,
வி.அய்.டி. பல்கலைக்கழகமும் ஆகும்” என்றே தொடங்கினார். பலமான கைதட்டல்கள் அவரைத் தொடர்ந்தன. மேலும் அவர், ‘‘நாம் படிக்கக் கூடாது என்பது மனுநீதி; எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே என்றார்கள். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் படிக்கக் கூடாது. மீறிப் படித்தால் தண்டனை?” என்று கூறி நிறுத்தி, ‘‘பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், திராவிடர் இயக்கமும் இல்லை என்றால் நம்மால் படித்திருக்க முடியுமா? வாய்ப்பு கிடைப்பது என்பது இரண்டாவது. உரிமை கிடைத்திருக்குமா?” என்று ஆழமான ஒரு கேள்வியைக் கேட்டார்.

தமிழ்நாடு

அந்தக் கேள்விக்கு ஒரு கதை மூலமாக பதிலும் சொன்னார். அதாவது மகாபாரதக் கதையில். ‘‘அர்ஜுனன் தான் வில்வித்தையில் முதன்மையானவன் – வில்வித்தை என்பதுதான் அந்தக் காலத்தில் கல்வி. ‘வில்லுக்கு விஜயன்’ என்றே சொல்வார்கள். வேட்டுவக் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன், அர்ஜுனனை விட வில்வித்தையில் கெட்டிக்காரன் என்றும், அவன் தன்னையே குருவாக வரித்து அந்த வில்வித்தையை சுயமாகக் கற்றுக் கொண்டவன் என்றும் தெரிந்து கொண்ட பார்ப்பன குருவான துரோணாச்சாரியார், கீழ் ஜாதிக்காரன் வில்வித்தைக் கற்கக் கூடாதே என்று ஏகலவனின் வலது கை கட்டை விரலை வெட்டிக் கேட்டார். வெகுளியான ஏகலைவனும், ‘‘ஆகட்டும் குருவே” என்று வெட்டிக் கொடுத்தான். அதன் பிறகு ஏகலைவன் வில்லைத் தொடவில்லை” என்று புராணக்கதையைக் சுருக்கமாகக் கூறி, அதன் தத்துவத்தை – கல்வி கற்க விடாமல் தடுத்து வைத்திருந்ததை விளக்கி,  ‘‘அப்படி இருந்த நமது சமுதாயத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்கள் தான் தந்தை பெரியார்! அண்ணா! கலைஞர்! இன்றைய  நமது முதலமைச்சர்! அந்த வழியில்தான் இந்த இயக்கத்திலிருந்து வந்த ஆற்றலாளர் ஒருவர் ஓர் ஆலமரத்தைப் போல் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருக்கிறார். உலகப் பல்கலைக்கழகங்களால் பாராட்டப்படுகின்றார்” என்று அடுக்கினார்.  மக்கள் அனிச்சையாக உணர்ச்சி வசப்பட்டு கைதட்டினர்.

தந்தை பெரியார் கொள்கைக்குக்
கிடைத்த வெற்றி!

தொடர்ந்து ஆசிரியர், “விஸ்வநாதன் அவர்களின் சிறப்பை இங்கே வந்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வர ஒப்புக் கொண்டேன் என்று நிகழ்ச்சிக்கு வந்ததற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு, ‘‘இது தனி ஒரு மனிதனின் வெற்றி என்பது அல்ல, தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்’’ என்று சொல்லி, கருத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக்கினார்.

தொடர்ந்து, பதவிக்காக வந்த இயக்கம் அல்ல இந்த இயக்கம் என்று கூறிய கழகத் தலைவர் அதற்கு, ‘‘என் வாழ்வின் வசந்தம் பெரியாருடன் சுற்றுப்பயணத்தில் பிரச்சாரம் சென்றதுதான். இப்போதும் நான் பெரியாரின் பின்னே வரத் தயாராக இருக்கின்றேன்” என்று முதலமைச்சர் ஆன பிறகும் அண்ணா பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரை பக்கத்தில் வைத்துக் கொண்டு சொன்னதைச் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இன்றைய இளைய சமூகம் சில மின்மினிகளைக் கண்டு ஏமாறக்கூடாது. உண்மையை உணர வேண்டும் என்று நடப்பு அரசியலை நினைவூட்டி அறிவுறுத்தினார். பெரியாரைப் பற்றி, “மூலபலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர் முறை” என்று அண்ணா கூறியதை எடுத்துரைத்து, தந்தை பெரியாரின் தத்துவம் பெற்ற வெற்றியின் விளைச்சல் தான் இந்தப் பல்கலைக்கழகம் என்று கூறி, வி.அய்.டி. பல்கலைகழகமும், திராவிட இயக்கமும் செய்த கல்விப் புரட்சியை பளிச்சென்று புரியும்படி செய்தார்.

வி.அய்.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் உரை

முன்னதாக கழகத் தலைவரை, வி.அய்.டி.வேந்தர், ‘‘10 வயதில் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியிருக்கிறார். 12 வயதில் கடலூரில் பேசியிருக்கிறார். 14 வயதுக்குள்ளாக 277 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.  60 ஆண்டுகளுக்கும் மேலாக ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்று உலக சாதனை  படைத்து வருகிறார். தமிழ்நாடு அரசால் ‘தகைசால் தமிழராக’ சிறப்புப் பெற்றிருக்கிறார். 75 புத்தகங்களுக்கு மேலே புத்தகங்கள் எழுதியிருக்கிறார்” என்று வி.அய்.டி.வேந்தர் ஆசிரியரை அறிமுகப்படுத்திப் பேசினார்.

அதே போல, செழியன் – நாவலர் இருவருக்குமான சுவையான வேறுபாடுகளை சுட்டிக்காட்டினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
வைகோ உரை

நிறைவாக  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும் போது தன்னை, “‘திராவிடர் இயக்கத்தின் போர்வாள்’ என்ற பட்டத்தை தனக்கு அளித்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு, தான் என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்றும், தன் வாழ்நாள் முழுவதும் திராவிடர் இயக்கத்தின் காப்பரணாக இருப்பேன் என்றும், “பெரியார் கனவு கண்டதை; அண்ணா கூறியதை; முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார். அடுத்து வந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை சட்டமாகக் கொண்டு வந்தார். பெரியாரின் நூற்றாண்டு விழாவை நாடெங்கிலும் நடத்தினார். அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் ஹிந்துத்துவா எனும் பெயரில் ஸநாதனத்தை நிலைநாட்டி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சிலையை உடைப்பேன் என்கிறார்கள். அன்றைக்கு நான் சொன்னேன், ‘நாள் குறித்து நேரம் குறித்து இந்த ஊரில்; இந்த இடத்தில் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன்’ என்று அறிவித்து விட்டு வா, கை துண்டாக்கப்படும் என்று இந்த வைகோ தெரிவித்தேன். செய்யவும் செய்வேன்’’ என்று உரத்த குரலில் பேசினார். அரங்கம் அதிர மக்கள் கைதட்டல்களை எழுப்பினர். தொடர்ந்து வி.அய்.டி.வேந்தர் பற்றியும், அவர் உருவாக்கியிருக்கும் கல்வி நிறுவனத்தைப் பற்றியும் பாராட்டிப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப் பண்ணும் பல்கலைக்கழக மாணவர்களால் பாடப்பட்டது.

பங்கேற்றோர்

கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், கு.எல்லப்பன், வேலூர் மாவட்டத் தோழர்கள் கழகக் காப்பாளர் வி.சடகோபன், மகளிரணித் தோழர் ச.ஈஸ்வரி, மாவட்டத் தலைவர் வி.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் உ.விஸ்வநாதன், மேனாள் மாவட்டச் செயலாளர் கு.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் ச.கலைமணி, மாவட்டத் துணைத் தலைவர் மு.சீனிவாசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் இ.தமிழ் தரணி, மாநகரச் செயலாளர் அ.மோ.வீரமணி, மாவட்ட ப.க.அமைப்பாளர் பா.அழகிரிதாசன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் பி.தனபால், மேனாள் மாநகர அமைப்பாளர் எம்.கி.சுப்பிரமணியன், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார் மற்றும்  திருப்பத்தூர், செய்யாறு ஆகிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெருமக்கள், ம.தி.மு.க. தோழர்கள், பல்கலைக்கழக இருபால் மாணவர்கள் ஆகியோர் அரங்கம் நிறையும் படியாக, இறுதி வரையிலும் கலைந்து செல்லாமல் இருந்து கருத்துகளை செவிமடுத்துச் சென்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *