1948ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24
திராவிடர் கழகத்தின் ஸ்பெஷல் மாநாடு
திராவிடர் கழகத்தின் ஸ்பெஷல் மாநாடு
பெரியாரின் விருப்பத்திற்கு இணங்க, அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தின் ‘சிறப்பு’ மாநாட்டிற்குத் (ஸ்பெஷல் மாநாடு) தலைமை தாங்கினார்.
ஈரோட்டில் நடந்த இந்த மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்கியது, திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
தந்தை பெரியார் அவர்களுக்குச் சொந்தமான ஈரோடு பழைய ரயில்வே நிலையத் திடலில் பந்தல் போட்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.
1948 அக்டோபர் 23 மற்றும் 24 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகச் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங் களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு
மாநாட்டின் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, ஹிந்தி மொழியைத் திணிப்பதைத் தீவிரமாக எதிர்ப்பதாகும். இது, திராவிடர் கழகத்தின் மொழி சார்ந்த கொள்கைகளை மீண்டும் வலியுறுத்தும் ஒரு தீர்மானமாக அமைந்தது.
திராவிட இனத்தின் தனித்துவத்தையும், அதன் அடையாளத்தையும் நிலைநிறுத்தும் வகையில், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, திராவிட நாடு பிரிவினையை வலி யுறுத்தும் தீர்மானம் ஒன்று இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது.
சமூக நீதி
ஜாதி ஒழிப்பு, சமூகச் சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு போன்ற சமூக நீதிக் கருத்துகளை வலியுறுத்தும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பெரியாரின் பெண்ணியக் கொள்கைகளுக்கு ஏற்ப, பெண்களுக்குச் சம உரிமை, குழந்தைத் திருமணத்தை ஒழித்தல், சுயமரியாதைத் திருமணங் களை ஊக்குவித்தல் போன்ற தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
அப்போது ஓமந்தூரார் தலைமையிலான அரசு, திராவிடர் கழகத்தின் ‘கருஞ்சட்டைப் படை’க்குத் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை எதிர்த்து, அந்த அடக்குமுறையைக் கண்டித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணாவிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்
பெரியாரின் விருப்பத்திற்கு இணங்க, அண்ணா இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். பெரியார் அண்ணாவைச் சாரட் வண்டியில் ஏற்றிவிட்டு, தான் நடந்தே வந்த காட்சி, திராவிட இயக்கத் தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாநாட்டில் ஏறத்தாழ 50,000 பேர் திரண்டனர்.
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி கலந்து கொண்ட இறுதி மாநாடும் இதுவே!

