திருவனந்தபுரம், அக். 23- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் கிருஷ்ணன் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பாத்திரங்கள், தந்தம் போன்றவை அதிக அளவில் உள்ளன. குருவாயூர் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை. தங்கம், வெள்ளி பொருட்களில் முறைகேடு நடந்து உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
விலை மதிப்பற்ற பொருட் களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், முறைகேடு நடந்து இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று குருவாயூர் கோவில் தேவஸ்தானத்தின் 2019-2020ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:- குருவாயூர் தேவஸ்தான புன்னத்தூர் யானைகள் முகாமில் கடந்த 2019-2020ஆம் ஆண்டு 522.86 கிலோ தந்தம் மற்றும் பொருட்கள் சட்டப்படி வனத்துறையிடம் ஒப் படைக்கப்படாமலும், கோவிலுக்குள் இருக்கும் தங்கக் கிரீடம், வெள்ளி ஆபரணமாகவும், 2.65 கிலோ வெள்ளிப் பாத்திரத்துக்கு பதிலாக 750 கிராம் எடையுள்ள வெள்ளி பாத்திரமாகவும் மாற்றப்பட்டுள்ளது. குருவாயூர் தேவஸ்தான சட்ட விதிமுறைகள் படி, கோவிலில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களை கோவில் நிர்வாகி ஆண்டுதோறும் நேரடியாக சரிபார்க்க வேண்டியது கட்டாயம்.
ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை. அதோடு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்திற்கான ரசீதுகள் முறையாக வழங்கப்படவில்லை.
குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் காணாமல் போயுள்ளன. ரூ.1½ லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ குறித்த கணக்குகளும் சரிவர நிர்வகிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.சமீபத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க கவச முறைகேடு சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குருவாயூர் கோவிலில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
