பொய்ச் செய்தி பரப்பிய பா.ஜ.க. தலைவர்கள்!

2 Min Read

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெதர்லாந்து அரசு அஞ்சல் தலை வெளியிட்டதாக ஓர் ஒளிப்படத்தை பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் என தற்போது அம்பலமாகியுள்ளது. இந்துத்துவா மதவாதக் கருத்துகளை பரப்பி வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூறாண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கவுரவித்து “100 ஆண்டுகள் தன்னலமற்ற சேவை” என்ற வாசகத்துடன் நெதர்லாந்து அரசு அஞ்சல் தலையை வெளியிட்டதாக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் எக்ஸ் கணக்கில் ஒரு படம் வெளியிடப்பட்டது.

அதேபோல பாஜகவின் சமூக ஊடகப்  பிரிவின் தலைவர் அமித் மாள்வியா, மேனாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ப்ரீத்தி காந்தி, ரமேஷ் நாயுடு நாகோத்து போன்ற பல பா.ஜ.க. தலைவர்கள் இதே படத்தை பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து எந்த உண்மை சரிபார்ப்பும் இன்றி பாஜக ஆதரவு ஊடகங்களும் நெதர்லாந்து அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக அஞ்சல் தலைகளை வெளியிட்டதாகத் தவறான செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில் உண்மை சரி பார்ப்புத் தளமான ஆல்ட் நியூஸ் செய்த ஆய்வில், நெதர்லாந்து அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக அஞ்சல் தலைகளை வெளியிட்டதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ செய்தியோ இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.

அவர்களே உருவாக்கிய அஞ்சல் தலை

பாஜக மற்றும் பாஜக ஆதரவு ஊடகங்கள் பரப்பிய ஒளிப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில் ஆர்எஸ்எஸ்-இன் பன்னாட்டுப் பிரிவான இந்து ஸ்வயம்சேவக் சங் அறக்கட்டளை என்பதை டச்சு  மற்றும் ஆங்கில வார்த்தைகளில் (“Stichting Hindu Swayam sevak Sangh”) ஒரு வங்கிக்  கணக்குப் பெயரைக் குறிப்பிடப் பட்டிருந்தது. தங்களுக்கு வேண்டிய அஞ்சல் தலைகளை எப்படி ஆர்டர் செய்வது, கப்பல் கட்டணம் பற்றிய விவரங்கள் மற்றும் அதற்கான மின்னஞ்சல்  முகவரியும் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.

நெதர்லாந்தின் அஞ்சல் சேவை நிறுவனமான போஸ்ட்என்எல் (PostNL), மக்கள் தாங்கள் விரும்பும் எந்தப் படத்தையும் பதிவேற்றி,  தனிப்பயனாக்கப்பட்ட (Personalised) அஞ்சல் தலைகளை உருவாக்கும் வசதியை வைத்துள்ளது. இதன் மூலம் அஞ்சல் தலையை நெதர்லாந்து அரசு வெளியிடவில்லை. மாறாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நெதர்லாந்து நாட்டின் பன்னாட்டு பிரிவான இந்து ஸ்வயம்சேவக் சங் அறக்கட்டளையே அஞ்சல் தலையை உருவாக்கி வெளியிட்டுவிட்டு, நெதர்லாந்து அரசு வெளியிட்டதாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்பது அம்பலமானது.

நன்றி: ‘தீக்கதிர்’, 23.10.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *