பக்தியிலும் பார்ப்பனர் தந்திரம் -மின்சாரம்

மின்சாரம்

‘தந்திர மூர்த்தியே போற்றி’ என்று ஆரிய மாயை நூலில் அறிஞர் அண்ணா அவர்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் கழுவிய மீனில் நழுவிய மீன் என்று சொல்லலாம்!

பக்தி என்று வந்தாலும் கூட தீமிதிப்பு, அலகுக்குத்துதல், தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வது போன்றவற்றிலிருந்து ஒதுங்கி விடுவார்கள்.

இதற்கெல்லாம் இந்த அப்பாவித் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் தான் கிடைப்பார்கள்.

ஏர் உழுவதைப் பாவத் தொழில் என்பார்கள்! பார்ப்பனர்கள்! ஏன் தெரியுமா? ஏர் உழுவது என்பது உடலுழைப்பைச் சார்ந்தது.

மனுதர்மம் என்ன கூறுகிறது?

‘பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் இதைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு புரட்டிப் பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்ேறா’ (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 84)

எவ்வளவு தளுக்கு, ஏமாற்றுத் தந்திரம்! இவர்கள் கூறும் விவாதப்படியே மற்றொரு கேள்வியை எழுப்பினால் இவர்கள் முகம் ஏழு கோணலாகும்.

இப்படி பூமியில் உள்ள உயிர்களை எல்லாம் வெட்டி செய்யப்படும் விவசாயத்தில் விளையும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாமல் வெறும் ஜலத்தை மட்டும்தான் குடித்து உயிர் வாழ்கிறார்களோ!

‘பிராமணா(ள்) போஜனப்பிரியா’ என்று சொல்கிறார்களே, அந்தப் போஜனம் அவாள் சொல்கிறப்படியே பார்த்தாலும் பூமியில் உள்ள உயிர்களை எல்லாம் வெட்டி விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களில் இருந்துதானே கிடைக்கிறது! வயிற்றில் சந்தனம் தடவிக் கொண்டு வயிறுமுட்ட சாப்பிடும்போது, ‘அந்தோ பாவம், பூமியில் வாழும் உயிரினங்களைப் பலி கொடுத்து அல்லவா இதெல்லாம் கிடைக்கிறது – இதைச் சாப்பிடலாமா’ என்று இந்த சாஸ்திரிகள் நினைத்ததுண்டா?

பூமியில் உள்ள உயிர்கள் பற்றி உருகு உருகு என்று உருகி, குடம் குடமாகக் கண்ணீர் வடிக்கிறார்களே – இவர்கள் தரையில் வெறுங்காலோடு, செருப்புக் காலோடு நடந்து செல்கிறார்களே, அப்பொழுது கூட மண்ணில் வாழும் கண்ணுக்குத் தெரியாத எத்தனை உயிர்கள் பலியாகின்றன – இனிமேல் தரையிலும் நடக்காமல் பறந்து செல்வார்களோ!

இவர்களுக்கெல்லாம் மகா பெரியவாள் என்றொருவர் உண்டு; அவர் ஜெகத்குரு! ஆமாம் இவர் ஆஸ்திரேலியா முதல் அண்டார்ட்டிகா வரை உள்ள (?) அனைத்திற்கும் குரு என்று நம்ப வேண்டும். சமுத்திரத்தைத் தாண்டி போகக்கூடாது – அதுதான் சாஸ்திரம்,  என்று சொல்லுபவர்களும் இவாள்தான்! இப்படி இருக்கும் போது சமுத்திரத்தைத் தாண்டியுள்ள மற்ற நாட்டவர்களுக்கெல்லலாம் எப்படிக் குருவாவார் என்று எல்லாம் கேட்கக் கூடாது! அபச்சாரம்! அபச்சாரம்! – அவர் மகா பெரியவாள்- இப்படியெல்லாம் இடக்கு முடக்காகக் கேட்கக் கூடாது!

அவர் சொல்கிறார் (பயப்) பக்தியோடு கேளுங்கள்! கேளுங்கள்!!

‘இப்பொழுது ஏற்பட்டிருக்கிறபடி ஒரு பெரிய தப்பபிப்பிராயம்  என்னவென்றால், சாஸ்திரோத்தமான வர்ணாசிரமத்தில், பிராமணனுக்குத்தான் சௌகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்ற எண்ணம், இது சுத்தப் பிசகு.

நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில் பிராமணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்கு குறைச்சலல்ல.

விரதானுஷ்டானங்களை உபவாசம் என்று எத்தனை  இவனுக்கு எத்தனை நாள் வயிற்றைக் காயப்போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்! இந்த சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும், வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுறது மாதிரிச் செய்ய பிராம்மணனுக்கு ‘ரைட்’ எது?’

(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் தெய்வத்தின் குரல் IIம் பாகம், பக்கம் 1013 – 1014)

எவ்வளவு நரித்தந்திரம்! இவாளைக் குடியானவர் மாதிரி காலையில் ஜில்லென்று பழையது சாப்பிடுவதை – யார் கையைப் பிடித்து இழுத்துத் தடுத்தார்களாம்!

உடம்பில் ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தாமல், அடுத்தவன் உழைப்பில் ஒட்டுண்ணியாக  இருந்து வயிறு வளர்க்கும் சுகஜீவனத்துக்கு, சாஸ்திரத்தை இழுத்துப் போட்டு மூடிக் கொள்வார்கள். சாஸ்திரப்படி என்றால் கடவுள் கட்டளைப்படி என்று அர்த்தம்.

கடவுள் கட்டளைப்படி என்று ஒரு வார்த்தையை சொல்லி, பக்தியைக் குழைத்துக் கொடுத்து விட்டால், நம் மக்கள் அட்டியின்றி, சாஷ்டாங்கமாக விழுந்து, கண்ணை மூடிக்கொண்டு அப்படியே நம்பித் தொலைப்பார்களே!

இந்த மோசடியை எடுத்துச் சொன்னால், ‘நாஸ்திகம் – துவேஷம் – ரௌரவாதி நரகத்துக்குப் போவாய்’ என்ற அச்சுறுத்தல் இன்னொரு பக்கம். நியாயத்தை எடுத்துச் சொன்னால் அவாள் அகராதியில் தப்பபிப்பிராயமாம்! எப்படி இருக்கு?

இந்த வக்கணைத் தண்டவாளத்தில் அவாள் சாம்பராஜ்ஜியம் ஜாம்ஜாமென்று ஓடுகிறது!

கடந்த வாரத்தில் ஒரு செய்தி… இதோ!

விழுந்தால் எலும்பு கூட முழுமையாக கிடைக்காது என்று பயத்தில் பாதுகாப்பிற்காக வடக்கயிற்றைக் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள். இதுதான் பகுத்தறிவு! மலைப்பகுதிகளில் உள்ள ஒரு பெரிய பாறைக்கு (தலைபோல் தெரியும்) மாலை சூட்டும் பாரம்பரியச் சடங்கு ஒன்று உள்ளது. இந்த மிகவும் ஆபத்தான பணியை, பார்ப்பனர்கள் செய்ய முன்வராமல், அதற்கென ஒரு ‘கதை’ கட்டி, மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

“சேவை செய்ய நாராயணனால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள்” என்று ஒரு கதையைப் பரப்பி, மலைவாழ் மக்களை நம்பவைத்து, பரம்பரையாக அவர்களையே இந்த ஆபத்தான வேலையைச் செய்ய வைக்கின்றனர்.

* பழங்குடியின மக்கள் உயிரைப் பணயம் வைத்துக் கயிறு கட்டி இறங்கி பாறைக்கு மாலை சூட்டிய பிறகு, பார்ப்பன அர்ச்சகர் எதிரே உள்ள மலையில் இருந்து  பூஜை செய்துவிட்டு கிளம்பிவிடுகிறார்.

* இந்த வேலை மிகவும் ஆபத்தானது. விழுந்தால் உடல் கூட முழுமையாகக் கிடைக்காது என்ற பயத்தின் காரணமாகவே, இப்போது கயிறு கட்டிக்கொண்டு இறங்குகிறார்கள். இதுவே சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் மாலை போடவந்த ஒருவர் கால்வழுக்கி கீழே விழுந்துவிட்டார். பாறை இடுக்கில் இருந்து அவரது உடலைத் தான் தீயணைப்புத்துறையினரால் மீட்க முடிந்தது.

இந்த விபத்துக்குப் பிறகுதான், பாதுகாப்பிற்காகக் கயிறு கட்டி இறங்கி மாலை சூட்டும் நிலைக்கு வந்துள்ளனர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தச் சடங்கிற்காக, உழைக்கும் மக்களின் உயிர் தொடர்ந்து பணயம் வைக்கப்படுவது வேதனைக்குரியது. பார்ப்பனர்கள் செய்ய மறுக்கும் ஆபத்தான இந்தச் சடங்கினை, எளிய மக்களை வைத்துச் செய்வது ஏன் என்றெல்லாம் கேட்டுவிடக்கூடாது! கேட்டால் அவாள் மனம் புண்பட்டு விடுமே! உயிரைப் பணயம் வைத்து நம் மக்கள் மலை உச்சியில் உள்ள பாறைக்குச் சென்று  மாலை சூட்ட வேண்டும்.

இதற்கெல்லாம் பழங்குடி மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் இந்தப் பார்ப்பனர்களோ எதிரே உள்ள மலையில் இருந்தபடியே பூஜை போட்டு, கிடைத்தவற்றைச் சுருட்டிக் கொண்டு நடையைக் கட்டுவார்கள்!

இன்னும் நடக்கிறது – இன்னும் எத்தனை நாளைக்குத் தான் ஏமாற்றுவார்களோ இந்த நாட்டிலே?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *