பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி!

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர்
பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி!
தவறான தகவல் பரப்பும் ‘விஷமச் செடியை’ முளையிலேயே கெல்லி எறியவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

மற்றவை

Contents

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர் பாபா சாகேப் டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி – தவறான தகவல் பரப்பும் விஷமச் செடியை முளையிலேயே கெல்லி எறியவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

புரட்சியாளர் பி.ஆர்.அம்பேத்கரின் ஆற்றல் உலகப் புகழ் பெற்றதாகும்!

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக பிரபல சட்ட மேதை, புரட்சியாளர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது ஒப்புவமையற்ற ஒத்து ழைப்பிலும், சட்ட அறிவாலும், குழுவில் உள்ள பலரது கருத்துகளை அலட்சியம் செய்யாமலும், அவற்ைற உள்வாங்கியும், தனது லட்சியங்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வண்ணமும், ஒரு சர்க்கஸ் வித்தை வித்தகர் புலி வாயில் தலையை விட்டு மீளுதல், கூண்டுக்குள் விரைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் மூலம் மக்களை வியக்க வைக்கும் திறனாளியாக இருப்பதுபோன்று செயல்பட்டு, அவருக்கு வரைவுக் குழுவில் இருந்த உயர்ஜாதி உணர்வாளர்கள் முதல் பல் வகையாளர்களின் எதிர்ப்பு இருந்த நிலையிலும், அவர் ஆற்றிய பணியின் சிறப்பு, ஆற்றல் உலகப் புகழ் பெற்றதாகும்!

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் புகழ் உலகளாவி, வரலாற்றில் வைர வரிகளாக ஓளிவீசுகின்ற நிலையில், பொறுக்குமா ஆரியம்?

‘அணைத்து அழிக்கும்’ மகா வித்தையாளர்களின் ‘விதைக்காது விளையும் கழனி’ அல்லவா ஆரியம் – அண்ணா சொன்னதுபோல!

பி.என்.ராவ் அய்.சி.எஸ்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்பற்றிய விளக்கக் குறிப்புரையாளர் (Commentators) என்ற பெயரில், வியாக்கியானம் செய்வோர் சிலர், புதுவகைப் பிரச்சா ரத்தினைச் செய்து அம்பேத்கர் புகழை மறைக்க, ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை அவர் எழுதி முடிக்கவில்லை. அதற்கு முன்பே, பி.என்.ராவ்
அய்.சி.எஸ். (இவர் கொங்கணி மொழி பேசும் சரஸ்வதி பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது) என்ற சட்ட நிபுணர்; அரசியலமைப்புச் சட்ட வரைவு ஆலோசகராக பிரிட்டிஷ் அரசுக் காலத்திலேயே 1946 இல் நியமிக்கப்பட்டு, அதனைத் தயாரிக்கும் பணியை ஏற்றுச் செய்தார்’’ என்று தொடங்கி, இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு சன்னமான முறையில் தொடக்கம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சட்ட நிபுணர் பி.என்.ராவ் (பெனகல் நரசிங் ராவ்) அவர்கள் சிவில் அதிகாரியாகத்தான் இந்திய அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்.

அவரிடம் அப்போது இந்தப் பணியை அந்நாளைய பிரிட்டிஷ் அரசு விட்டதற்கு முக்கிய காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னோடியான 1935 சட்டம் (India Act of 1935) எழுதுவதற்கு அமைக்கப்பட்ட அலுவலகத்தில் அந்நாளில், உதவிய வர் என்பதால்தான்!

நாம் மறைக்கவோ,
மறுக்கவோ இல்லை!

அந்த அடிப்படையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு 1946 இல் அரசியல் நிர்ணய சபை மூலம் உருவாகும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்கு மூளையாகப் பயன்படும் ஒரு வரைவை (Working Draft) தயாரித்துக் கொடுத்தார் என்பதை நாம் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை. அது ஒரு பொதுக் குறிப்பான வரைவு (Rough Draft).

ஆனால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அதற்கு தமது ஆளுமை, ஆற்றல்மூலம் சதை, ரத்தம் எல்லாம் தந்து, அதில் அரசியல் உரிமைகளை மக்கள் தங்களுக்குத் தாங்களே தந்து, நாட்டின் மக்களாட்சி, இறையாண்மை மக்களிடையே உள்ளது என்பதையும், சமதர்ம ஆட்சி யாக, ஜனநாயகக் குடியரசாகவே நீடிக்கும் என்றும் பதிவு செய்து, பீடிகை என்ற முகப்புரையைச் (Preamble) சிறந்த அடிக்கட்டுமானமாக்கிவிட்டார்!

நாடாளுமன்றத்தில்
பதிவும் செய்துள்ளார்!

அவர் முழுச் சுதந்திரத்துடன் இயங்க முடியாதபோது, இவற்றைச் சாதித்ததுபற்றியும், பலவற்றை அவர் செய்ய எண்ணியபோதும், முழுமையாக இயற்ற முடியாத நிலை இருந்ததைக் குறித்தும், நாடாளுமன்றத்திலேயே பிறகு 1954 இல் பதிவும் செய்துள்ளார்!

அவர் பி.என்.ராவ் அவர்களது பங்களிப்பைக் குறைக்கவோ, மறக்கவோ இல்லை. உரிய முறையில் அதனைக் குறிப்பிட்டு, அவரது உதவிக்குப் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஒரு புதுவகை விஷமப் பிரச்சாரத்தைத்
தொடங்கி உள்ளனர்

ஆனால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை, ஏதோ அரசியலமைப்புச் சட்ட வரைவுப் பணியின் இடையில் வந்துவிட்டுச் செல்லும் ஒரு கதாபாத்தி ரம்போல சித்தரித்து, எல்லாமே பி.என்.ராவ்தான் செய்தார் என்று இப்போது ஒரு புதுவகை விஷமப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.

இந்த விஷமச் செடியைச் (Disinformation), திட்ட மிட்டே பரப்பப்படும் பொய்த் தகவல் பரிமாற்றத்தினை முளையிலேயே கெல்லி எறிந்து, உண்மை வர லாற்றை உலகத்தாருக்கு எடுத்துரைப்பது முக்கிய பெருங்கட மையாகும்!

இதற்கு முக்கிய காரணி யார் என்பதை எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படும்போது
ஓர் அம்பேத்கர் தேவைப்படுகிறார்

ஒருமுறை, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரித்து முடித்த பிறகு, எப்படி ‘அரசியல் கறிவேப்பிலை’யாக்கப்படும் வேதனைப்படும் நிலை தனக்கு ஏற்பட்டது என்பதை மிகுந்த விரக்தி கலந்த வருத்தத்துடன்,

‘‘இந்த நாட்டில் ஒரே ஒரு கூட்டம் அறவே தங்களது ஏகபோகத்தைக் காட்டினாலும்கூட, அவர்களுக்கு ஒரு பாரதம் தேவைப்படும்போது, வியாசர்தான் (அவர்களால் கீழ்ஜாதி என்று கூறப்பட்ட) தேவைப்பட்டார். அதே போல, இராமாயணம் தேவைப்பட்டது. வால்மீகி என்ற வேடர் தேவைப்பட்டார். அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படும்போது ஓர் அம்பேத்கர் தேவைப்படுகிறார்’’ என்றார்.

‘‘என்றாலும், அறிவுடைமை தங்களுக்குத்தான் என்று கூறுகிறார்களே’’ என மனம் நொந்து, வெந்து கூறியதை மறக்க முடியுமா?

பாதுகாப்பு அரணைப் பலப்படுத்த முன்வரவேண்டும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணியில் மிகக் கடுமையாக உழைப்பை வழங்கியதன் காரணமாகத் தன் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு உழைத்தவரைத்தான், இன்று குறைத்து மதிப்பிடத் துணிகிறார்கள். அதுதானே ஆரியத்தின் வழமை!

உலகப் புகழ் பெறுகிறார் – ஆனால், உள்ளூரில் ஆரிய இருட்டடிப்புக்கு ஆளாகினார். ஒப்புக்கு முக படாம் காட்டி, வாக்கு வங்கிக்கான ஒரு தலை என்பது போலக் காட்டினார்கள். அவரது புகழை, பெருமையை மெதுவாகப் பெயர்த்தெடுக்கத் தொடங்கி விட்டனர் என்பதை அனைவரும் புரிந்து, பாதுகாப்பு அரணைப் பலப்படுத்த முன்வரவேண்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

20.10.2025  

குறிப்பு: இதுகுறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சஞ்சய் ெஹக்டே அவர்கள் விரிவான விளக்கங்களுடன் ‘ஹிந்து’ ஆங்கில  நாளேட்டின் (17.10.2025) நடுப்பக்கத்தில் எழுதிய ஓர் அருமையான கட்டுரையின் தமிழாக்கத்தை, 3 ஆம் பக்கத்தில் படிக்கவும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *