மது அருந்துவதால் உடலில் ஒவ்வோர் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் உடலில் உள்ள பொருள்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து மது அருந்துவதால் ஏற்படும் நச்சுப்பொருள்களை வெளியேற்ற முடியாமல் போவதால் மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கணையம், நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புப் பொருட்களை செரிமானம் செய்கிறது. மதுவால் கணையம் பாதிக்கப்பட்டுக் கணைய அழற்சி ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, கணையத்தில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
கணையமும், கல்லீரலும் சரிவர இயங்காமல் போவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.
மூளை பாதிக்கப்படுவதால் சிந்திக்கும் திறன், செயல்படும் திறன், பேச்சில் மாற்றம், மறதிநிலை மனக்கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
தொடர்ச்சியாக மது அருந்தும் போது, வாயில் புண், உணவுக்குழாயில் புண், வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல், உடல் எடைக்குறைவு, ரத்த சோகை, புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மது அருந்துவதால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதயத்துடிப்பில் மாற்றம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், பெண்களுக்கு மாதவிடாய் சரிவர இல்லாமல் இருப்பதும், குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாகும்.
