சுயமரியாதை இயக்கத்திற்கு எப்போதும் மழை ஒரு பொருட்டல்ல!
வானம் எப்படி இருந்தாலும், மானம் மிகவும் முக்கியம்! வானத்தைப் பார்க்காதீர்கள், மானத்தைப் பாருங்கள்!
‘‘வைப்பாட்டி பிள்ளைகள்’’ என்ற இழிவை மாற்றிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்!
‘‘தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லாம், பெரியாரின் புகழின் சிதறல்கள்’’ என்றார் அண்ணா
சென்னை, அக்.19 சுயமரியாதை இயக்கத்திற்கு எப்போதும் மழை ஒரு பொருட்டல்ல! வானம் எப்படி இருந்தாலும், மானம் மிகவும் முக்கியம்! வானத்தைப் பார்க்காதீர்கள், மானத்தைப் பாருங்கள்! ‘‘வைப்பாட்டி பிள்ளைகள்’’ என்ற இழிவை மாற்றிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்! ‘‘தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லாம், பெரியாரின் புகழின் சிதறல்கள்’’ என்று சொன்னார் அண்ணா என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கடந்த 4.10.2025 அன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஆழ்வார் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை!
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
உணவுக்கு உப்பு தேவை, ருசிக்காக.
வாழ்க்கைக்குக் கேளிக்கை தேவையானதே!
ஆனால், உப்பையே உணவாகக் கொண்டு உட்கொள்ளச் சொன்னால், உங்கள் கதி என்னாகும்?
அதுதான், இன்றைக்குத் தமிழ்நாட்டில் எச்சரிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.
80 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை என்ன?
80 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் அன்றைய நிலை நன்றாகத் தெரியும்.
குலக்கல்வித் திட்டம் என்றால் என்ன?
இளந்தோழா, இளந்தலைமுறையினரே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.
குலக்கல்வித் திட்டம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
அரை நேரம் படிக்கவேண்டும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்யவேண்டும்.
சிரைப்பவன் பிள்ளை சிரைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மலம் எடுப்பவன் பிள்ளை, மலம் எடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வீதி கூட்டுகின்றவன் பிள்ளை, வீதி கூட்ட கற்றுக்கொள்ளவேண்டும்.
‘அவாள்’ மட்டும் படிக்கவேண்டும்.
இதுதானே ஆரியம்!
குலக்கல்வியை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம்!
இதைக் கொண்டு வந்ததுதானே இராஜகோபாலாச்சாரி யார் ஆட்சி.
அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே தலைவர் தந்தை பெரியார் – அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம் – முற்போக்குவாதிகள்.
அன்றைக்கு அதை எதிர்க்கவில்லையென்றால், இன்றைக்கு நாமெல்லாம் படித்து பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? என்பதை எண்ணிப் பாருங்கள்.
அறிவுத் திறனால்
ஆராயவேண்டாமா?
இன்றைக்கு நீங்களெல்லாம் படித்து உத்தியோ கத்திற்குச் சென்றிருக்கிறீர்கள். சினிமா பார்க்கிறீர்கள். கேளிக்கை தேவைதான். அதனை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், பிரித்துப் பார்க்க வேண்டாமா?
எது விஷம்? எது மருந்து? என்று பார்க்கவேண்டாமா?
யார் எதிரி? யார் நண்பன்? என்று சரியாக அடையாளம் காணவேண்டாமா?
யாரால், எவரால், எதனை முடிக்க முடியும் என்ற அறிவுத் திறனால் ஆராயவேண்டாமா?
பொதுவாழ்க்கையில் அனுபவம் உள்ளவன் என்று நான் மார்தட்டிக் கொள்ளமாட்டேன்
நம்முடைய சகோதரிகளே, தாய்மார்களே, நடிகர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் போய் பாருங்கள். ஆனால், தயவு செய்து இந்த இயக்கமான திராவிட இயக்கம் இல்லாவிட்டால், என்னுடைய சகோதரிகளே, வெட்கத்தோடு சொல்லுகிறேன், உணர்ந்து சொல்கி றேன் – 92 வயது என்று காட்டுவதல்ல – அதில், 82 வயது (ஆண்டுகள்) பொதுவாழ்க்கையில் காய்ச்சப்பட்டவன். பொதுவாழ்க்கையில் அனுபவம் உள்ளவன் என்று நான் மார்தட்டிக் கொள்ளமாட்டேன்.
பெரியார், சுயமரியாதை இயக்கம் என்ற களமான ஒரு பட்டறையில், இரும்பை எப்படி அடித்து அடித்துக் உருவமாகக் கொண்டு வருகிறார்களோ, அதுபோல, நெருக்கடி நிலை காலகட்டத்தில் சிறைச்சாலையைப் பார்த்தவர்கள் நாங்கள்.
பெரியார் யாருக்காகப் பாடுபட்டார்? சுயமரியாதை இயக்கம் என்பது யாருக்காக?
அது எங்களுக்காகவா? என்றால் இல்லை நண்பர்களே, பெரியார் யாருக்காகப் பாடுபட்டார்? சுயமரியாதை இயக்கம் என்பது யாருக்காக? இவர்கள் யாருக்காக? வெறும் பதவிக்காகவா? பதவிக்காக கூட்டணி என்றால், இவர்கள் எத்தனையோ இடத்திற்கு மாறி மாறிப் போயிருப்பார்களே!
இது மணல் வீடல்ல – இரும்பு அரண்!
என்னென்னவோ செய்து பார்க்கிறார்களே, வித்தைகள் காட்டுகிறார்களே, அவர்களையெல்லாம் ‘தூ’ என்று தூக்கி எறியக்கூடிய உணர்வோடு இந்தக் கூட்டணித் தோழர்கள் இருக்கிறார்கள் என்றால், இது பதவிக் கூட்டணி அல்ல நண்பர்களே! இது கொள்கைக் கூட்டணி – இது மணல் வீடல்ல – இரும்பு அரண் – என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் – தேவதாசி முறை என்ற ஒன்று இருந்ததே, தெரியுமா?
நம்முடைய இளம் பிள்ளைகளையெல்லாம் இன்றைக்குக் கல்லூரிகளிலே, பல்கலைக் கழகங்களிலே போய்ப் படித்து பட்டதாரிகளாகி, பிஎச்.டி., படித்தவர்களாக, டாக்டர்களாக, அய்.பி.எஸ்.,களாக, அய்.ஏ.எஸ்.களாக வருகின்ற எங்கள் சகோதரிகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்கள் பிள்ளைகள், எங்கள் பேரப் பிள்ளைகள், எங்களை வாழ வைக்கின்றன- செம்மாந்து நிற்கிறோம் – செங்கல்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு நினைக்கின்றோம்.
ஆனால், அந்தப் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் இன்றைக்கு உணரவில்லை. அதில் தவறில்லை. ஏனென்றால், அவர்களுக்குப் பழைய தடம் எப்படி இருந்தது என்று தெரியாது. அவர்களுக்குக் கஷ்டம் தெரியாது. அவர்களுக்கு அதையெல்லாம் உணர்த்துங்கள்.
தேவதாசி முறையை ஒழித்த இயக்கம்!
‘பொட்டுக் கட்டுதல்’ என்றால் என்ன தெரியுமா?
ஒரு பெண் பிள்ளையைக் கொண்டு போய், கோவிலுக்கு நேர்ந்து விடுவதுதான். அதனை அழித்த இயக்கம், திராவிட இயக்கமாகும்.
மீண்டும் மனுதர்மம் வந்தால்,
மீண்டும் ஸநாதனம் வந்தால்,
மீண்டும் மனுதர்ம, ஸநாதன ஆட்சி வந்தால், மீண்டும் பொட்டுக் கட்டுதல் வரும்; மீண்டும் தேவதாசி முறை வரும்; மீண்டும் குலக்கல்வித் திட்டம் வரும்.
வரும் என்பதற்கு என்ன அடையாளம்? என்று கேட்கலாம்.அதற்கு அடையாளம் உண்டு.
ஒன்றிய பா.ஜ.க. மோடி ஆட்சியின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம்!
பழைய குலக்கல்வித் திட்டத்தை இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. மோடி ஆட்சி ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தின்மூலம் நாக்கில் தேன் தடவிப் புகுத்துகிறது. அதனைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கே ஒரு பெரியார் நுண்ணாடி தேவை. அதை முதலில் கண்டுபிடித்து நாங்கள் அல்லவா சொன்னோம்.
இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது. தமிழ்நாடுதான் பெரியார் மண்.
எனவேதான், சுயமரியாதை இயக்கம் செய்திருக்கின்ற சாதனை என்பது சாதரணமானதல்ல நண்பர்களே!
பெண்களுக்குச் சொத்துரிமை
வேண்டும்: அம்பேத்கர்!
பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரையறை செய்தவர். அவர், ‘இந்து கோட் பில்’ என்று சொல்லி, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்றார். அதில் என்ன தவறு இருக்கிறது?
எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அது பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும், உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்றார்.
மகனுக்கு என்ன உரிமையோ, அதை உரிமை மகளுக்கு இருக்கவேண்டும். அதில் என்ன தவறு?
‘திராவிட மாடல்’ அரசின்
சமூகநீதி நாள் – சமத்துவ நாள்!
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்றார் தந்தை பெரியார் அவர்கள். பெரியாருடைய பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்து அனைவரையும் உறுதிமொழி எடுக்கச் சொன்னார் ‘திராவிட மாடல்’ அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
பாபா சாகேப் அம்பேத்கர், சமத்துவத்தைச் சொன்னார். அவருடைய பிறந்த நாளை, ‘சமத்துவ நாளாக’ அறிவித்து, அனைவரையும் உறுதிமொழி எடுக்கச் செய்தார்.
இந்த சமத்துவத்தைத் தலைகீழாக மாற்றுவ தற்குத்தானே , மீண்டும் ஆட்சிக்கு வருவோம், நுகத்தடியே கட்டுவோம் என்று சொல்கிறார்கள், அதைத் தடுப்பதற்காக நூறாண்டு காணக் கூடிய இந்த சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், இந்தக் தி.மு.க. கூட்டணி பாதுகாக்கப்பட வேண்டாமா?
அறிவார்ந்த உணர்வை மக்களுக்கு உருவாக்கிக் காட்டவேண்டும்!
எனவே, தேர்தலில் ஓட்டுப் போடுகிறோம் என்று நினைக்காதீர்கள்; உங்கள் தலையெழுத்தை நீங்கள் நிர்ணயிக்கிறீர்கள் என்று நினைக்கவேண்டும். அறிவார்ந்த உணர்வை மக்களுக்கு உருவாக்கிக் காட்டவேண்டும்.
நம்முடைய உரிமைகளைப் பறித்தது மட்டுமல்ல நண்பர்களே, நம்மை எப்படி அவமானப்படுத்தினார்கள் என்று தெரியுமா?
மனுதர்மத்தை ஏன் இந்திய அரசியலமைப்புச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகி றார்கள் என்றால், இரண்டு விஷயம்தான்.
இங்கே உரையாற்றிய தோழர் வீரபாண்டியன் சொன்னார், நகைமுரண் என்று.
நகைமுரண் அல்ல, இந்த நாட்டைப் பொறுத்த வரையில் வருணம்தான் இந்து மதத்தால் பாதுகாக்கப்படு கிறது. மனுதர்மத்தில் சொல்கிறார்கள்,
‘‘சூத்திரன் பொருள் சம்பாதித்தாலும், அவன் சொத்து எங்களையே சாரும்.’’ ‘‘அடித்துக்கூட நாங்கள் பிடுங்கிக் கொள்ளலாம்’’ என்று.
கற்பனையாக இதை நான் சொல்லவில்லை நண்பர்களே, மனுதர்மத்தில் இருப்பதைத்தான் சொல்கிறேன்.
வீதிதோறும் சொல்லுங்கள் நண்பர்களே!
நண்பர்களே, ‘‘மானமும் அறிவும்தான் மனிதர்க்கு அழகு’’ என்று சொன்னாரே தந்தை பெரியார், அதில் எவ்வளவு கருத்தாழம் இருக்கிறது என்பதை இளைஞர்களுக்குச் சொல்லுங்கள். இதை வீதிதோறும் சொல்லுங்கள், வீதிதோறும் சொல்லுங்கள் நண்பர்களே!
ஆரியக் கொடுமை, பார்ப்பனக் கொடுமை என்ன வென்றால், படிக்காதே என்று சொல்லித் தடுத்ததோடு, அதை மீறி படித்தால் தண்டனை என்று சொன்னார்கள்.
மனுதர்மம் என்ன சொல்லுகிறது!
மனுதர்மம் பக்கம் 78, அத்தியாயம் 3, சுலோகம் 241
‘‘பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றி னாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுத லாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.’’
இது எவ்வளவு கொடுமை பார்த்தீர்களா? இந்த நிலை இன்றைக்கு உண்டா? என்றால், இல்லை.
மனுதர்மப்படி நாம் எல்லாம் பள்ளிக்கூடம் போகாமல் இருக்கிறோமா, படிக்காமல் இருக்கிறோமா? என்று கேட்கலாம்.
ஆமாம், இன்றைக்கு எல்லோரும் படிக்கிறீர்களே, எதனால்?
நாங்கள் இருக்கிறோம், அதனால்.
சுயமரியாதை இயக்கம் இருப்பதினால்.
பெரியார் இருப்பதினால்.
அம்பேத்கர் இயக்கம் இருப்பதினால்.
கலைஞர் இருப்பதினால்.
ஸ்டாலின் இருப்பதினால்,
திருமாவளவன் இருப்பதினால்.
ஜவாஹிருல்லா இருப்பதினால்
திராவிட இயக்கம் இருப்பதினால்.
இது மாறினால், ஜனநாயகத்தில் நீங்கள் ஏமாந்தால் என்னாகும்? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை நீங்கள் சொரிந்து கொள்ளப் போகிறீர்களா?
எனவேதான் தோழர்களே, நாங்கள் வாக்குக் கேட்கவில்லை. உங்கள் மானத்தை மீட்பதற்காகத்தான், உங்கள் உரிமைகளைத் திருப்புவதற்காகத்தான் இந்தப் பணிகளைச் செய்கின்றோம்.
அண்ணா சொன்னார், ‘‘ஓர் இயக்கம், அதனுடைய கொள்கை, அதனுடைய தொண்டர்கள் – அவர்களே ஆட்சிக்கு வந்து சட்டம் நிறைவேற்றியது என்பது ஒரு பெரிய வரலாறாகும்’’ என்றார். .
ஓராண்டிற்குள் முப்பெரும் சாதனைகளைச் செய்தவர் அண்ணா!
அண்ணா அவர்கள் இயற்கையின் கொடுமையால் ஓராண்டுதான் முதலமைச்சராக இருந்தார். அந்த ஓராண்டிற்கும் முப்பெரும் சாதனைகளைச் செய்தார்.
- 1967 இல் அறிஞர் அண்ணா முதலமைச்சரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.
- தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற அரசாணையை கொண்டுவந்தார்.
- தமிழ்நாட்டு மக்களின், மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமலில் இருந்தபோது, தமிழில் இரு மொழித் திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு ஹிந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தபொழுது ஒன்றைச் சொன்னார், அது இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது.
‘‘தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லாம், பெரியாரின் புகழின் சிதறல்கள்’’ – அண்ணா!
அண்ணா அவர்கள், ஜீவாவினுடைய மகளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றும்போது, ‘‘ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளும் வெளிநாட்டில் இருப்பார்கள். பல பதவிகளில் இருப்பார்கள். அந்தப் பிள்ளைகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது, ‘இவன் என் பிள்ளை, எஞ்ஜினியராக இருக்கிறான், இவன் டாக்டராக இருக்கிறான், ஜப்பானில் இருக்கிறான், லண்டனில் இருக்கிறான், இவன் இந்தப் பதவியில் இருக்கிறான்’ என்று பூரித்துச் சொல்வார்கள். அதுபோல, ‘‘தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லாம், பெரியாரின் புகழின் சிதறல்கள்’’ என்ற வார்த்தையைச் சொன்னார்.
எனவேதான், எல்லோரும் ஒரு குடும்பம். ஒரு திராவிடக் குடும்பம். மானக் குடும்பம். மான மீட்புக் குடும்பம். உரிமை மீட்புக் குடும்பம்.
சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்தனர்.
செல்லாது என்று சொன்னதோடு முடிந்துவிட்டது என்றுதான் சட்ட வல்லுநர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அது ஒரு தீர்ப்பு – சுயமரியாதைத் திருமணச் சட்டம் வந்தவுடன், அந்தத் தீர்ப்பை மாற்றியாகிவிட்டது.
ஆனால், அது வெறும் சட்டமல்ல நண்பர்களே, அதை நுண்ணாடி போட்டுப் பாருங்கள்.
மான மீட்பு. ஆயிரக்கணக்கான நமது தோழர்கள், சகோதரிகள், பெண்களுடைய மான மீட்பு, நம்முடைய உரிமை மீட்பு.
‘‘வைப்பாட்டி பிள்ளைகள்’’ என்ற இழிவை மாற்றிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்!
எப்படி என்று சொன்னால், வழக்கு விசாரணை நடக்கும்போது, ‘‘பெரியார் இந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தார். அந்தப் பெண்ணுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இரண்டு பெண், இரண்டு ஆண். நான்கு பிள்ளைகளுக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். நியாயமாகப் பிறந்த பிள்ளைகளுக்குத்தான் சொத்துரிமை உண்டே தவிர, குறுக்கு வழியில் பிறந்த பிள்ளைகளுக்குச் சொத்துரிமை கிடையாது. இந்தப் பிள்ளைகள் எல்லாம் வைப்பாட்டிக்குப் பிறந்தவர்கள். சுயமரியாதைத் திருமணம் செய்த எல்லாப் பெண்களும் வைப்பாட்டிகள்தான் என்று சொல்லிவிட்டு, பரவாயில்லை, இந்து லாவில், ‘‘வைப்பாட்டிக்குப் பிறந்த பிள்ளைக்குக்கூட சொத்துரிமை உண்டு கொடுக்கலாம். அதனால், அவர்கள் சொத்துரிமையை மட்டும் அனுபவிக்கலாம்’’ என்று தீர்ப்பில் எழுதினார்கள்.
நம்முடைய பெண்கள், சொத்துரிமையைப் பெற்றால்கூட, வைப்பாட்டி பிள்ளைகள் என்ற அவமானத்தைத் தாங்கிக் கொண்டிருந்ததை, மாற்றிக் காட்டிய மாபெரும் சக்திதான் சுயமரியாதைத் திருமணம் என்பது.
அதுதான் அண்ணாவின் சாதனை!
அதுதான் திராவிட இயக்கத்தினுடைய மான மீட்பு!
எனவே, அன்றும் சுயமரியாதை இயக்கம் தேவைப்பட்டது!
இன்றும் சுயமரியாதை இயக்கம் சாதனை செய்கிறது!
நாளைக்கும் நம் மானமும், உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், தேவை சுயமரியாதை இயக்கம்!
வெறும் அரசியல் பார்க்காதீர்கள். வெளித்தோற்றத்தைப் பார்க்காதீர்கள். உள்ளே இருக்கின்ற தத்துவத்தைப் பாருங்கள்.
மானம் பெறுவோம்! உரிமை வாழ்வு பெறுவோம்!
வருக, வருக! மாலை வரையில் இருங்கள் – அடாது மழை பெய்தாலும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை நடத்தியே தீருவோம்!
வானத்தைப் பார்க்காதீர்கள்,
மானத்தைப் பாருங்கள்!
நம்முடைய இயக்கத்திற்கும், மழைக்கும் சம்பந்தம் உண்டு! தி.மு.க. பிறந்ததே மழையில்தான்! எனவே, சுயமரியாதை இயக்கத்திற்கு எப்போதும் மழை ஒரு பொருட்டல்ல!
மானம் மிக முக்கியம்!
வானம் எப்படி இருந்தாலும், மானம் மிகவும் முக்கியம்!
எனவே, வானத்தைப் பார்க்காதீர்கள், மானத்தைப் பாருங்கள்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்..
