சூத்திரர்களை – அசுரர்களைக் கொல்லாத ஹிந்து மதப் பண்டிகை ஒன்று உண்டா?
‘‘தமிழர்களே, சூத்திர, பஞ்சம இழிவு ஒழிய, ஹிந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர்!’’
தந்தை பெரியாரும், அவரது இயக்கமும் கூறுவதை ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்!
‘‘தமிழர்களே, சூத்திர, பஞ்சம இழிவு ஒழிய, ஹிந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர்!’’
தந்தை பெரியாரும், அவரது இயக்கமும் கூறுவதை ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
சூத்திரர்களை – அசுரர்களைக் கொல்லாத ஹிந்து மதப் பண்டிகை ஒன்று உண்டா? ‘‘தமிழர்களே, சூத்திர, பஞ்சம இழிவு ஒழிய, ஹிந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர்’’ என்று அறிவுறுத்திய மானுட நேயராம் தந்தை பெரியார் அவர்களும், அவரது இயக்கமும் கூறுவதை, ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
- சூத்திரர்களை – அசுரர்களைக் கொல்லாத ஹிந்து மதப் பண்டிகை ஒன்று உண்டா? ‘‘தமிழர்களே, சூத்திர, பஞ்சம இழிவு ஒழிய, ஹிந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர்!’’ தந்தை பெரியாரும், அவரது இயக்கமும் கூறுவதை ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்!
- தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
- அறிவு விடுதலைக்கான சமத்துவ சமூகநீதி இயக்கம்!
- அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழிகளை அன்றாடம் குழிதோண்டிப் புதைக்கின்றனர்!
- ரகசிய இயக்கம் நடத்தியவர்களின் பெயரைத்தானே…
- தீபாவளி கதை என்ன?
- உண்மைகளைத் தலைகீழாகத் திரித்து ஊடுருவலில் வெற்றி பெற்று விட்டனர்!
- வேளாண்மைத் திருவிழா – அறிவு உழைப்பாளி திருவிழா!
அவரது விளக்க அறிக்கை வருமாறு:
அறிவு விடுதலைக்கான
சமத்துவ சமூகநீதி இயக்கம்!
சமத்துவ சமூகநீதி இயக்கம்!
ஆரிய மதமான ஹிந்து மதத்தில் பிறந்த ஒரே கார ணத்தால், வருண தர்மம், படிக்கட்டு ஜாதிப் பிரிவு என்னும் கொடுமை, சூத்திர இழிவு, தீண்டாமை, நெருங்கக்கூடாமை, பார்க்கக் கூடாமை ஆகிய பிறவி நோய்களில், செத்துச் சுடுகாட்டிற்குப் போன பின்னரும், ‘இவன் செத்தாலும், இவனது ஜாதி சாகாது’ என்ற மனிதத் தன்மையற்ற ஒரு பெரும் பேத இழிவை எதிர்த்துப் பிறந்த இயக்கம்தான் நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம் என்ற அறிவு விடுதலைக்கான சமத்துவ சமூகநீதி இயக்கமான சுயமரியாதை இயக்கம்.
அந்தப் பிறவி இழிவை ஒடுக்கப்பட்ட ‘கீழ்ஜாதி’ என்ற முத்திரை குத்தி, அவர்களது படிப்புரிமை, பணி உரிமை, மான வாழ்வுரிமை எல்லாவற்றையும் பறித்துள்ள கொடுமை, சுமார் 3,000 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் அநியாயக் கொடுமை!
அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழிகளை அன்றாடம் குழிதோண்டிப் புதைக்கின்றனர்!
இதனை 20, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடரச் செய்து, காப்பாற்றி வருவதற்கும், சுயமரியாதை இயக்கம் பிறந்த பிறகு, அதன் கொள்கைத் தாக்குதல்களுக்கு எதிர் வினையாற்றவும் ஆரியத்தால், தொண்டு முகமூடியுடன் தொடங்கப் பெற்றதுதான் ஆர்.எஸ்.எஸ்.! பல்வேறு சூழ்ச்சி, தந்திரங்கள், இரட்டை வேடம், இரட்டை நாக்குமூலம் நம் நாட்டு கோடான கோடி உழைக்கும் ‘சூத்திர, பஞ்சமர்’களின் வாக்கு வங்கியை, நடவாத மெகா தேர்தல் வாக்குறுதிகள் என்னும் மயக்க பிஸ்கெட்டுகளைத் தந்து, ‘கூட்டணி’ என்ற ஒரு ‘மோசக்’ கயிறு மூலம் ஆட்சியைப் பிடித்து, தங்களது இலக்குகளான ‘நாடு முழுவதற்கும் ஹிந்துத்துவா, ஹிந்துராஷ்டிரம்,’ ‘ஒரே மதம் ஹிந்து மதம்’, ‘ஒரே மொழி மக்களிடம் வழக்கொழிந்த சமஸ்கிருதம் என்ற ஆரிய மொழி’, ‘சமஸ்கிருதக் கலாச்சாரம்’ என்று மாற்ற முயலும் அமைப்பே ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவ மான பா.ஜ.க.! அவர்கள்தான், டாக்டர் அம்பேத்கர், தன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுடன், தாமே போராடிப் போராடி உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில், ‘முகப்புரை’ (Preamble)யில் தந்துள்ள உயரிய கோட்பாடுகளான இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றைக் காக்க, பதவியேற்குமுன் எடுத்த அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழிகளை அன்றாடம் குழிதோண்டிப் புதைக்கின்றனர்.
பன் மதங்கள், பன்மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்த உபகண்டம் போன்ற இந்திய நாட்டில், பகிரங்கமாகவே ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி ஆட்சியிலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் பட்டாங்கமாகவே சமதர்மத்தின் முழு விரோதியான மனுதர்ம ராஜ்ஜியத்தினையே நடத்தி வருகிறார்கள். சிறிதும் கூச்சநாச்சமின்றி ஒன்றிய, மாநில அரசுகளின் இயந்திரங்களையும் தங்களது கொள்கையைப் பரப்பும் அல்லது பாதுகாக்கும் கருவிகளாகவே பயன்படுத்தி, ஜனநாயகத்திற்குச் சவப்பெட்டியை உருவாக்கி வருகிறார்கள்!
அயோத்தி இராமர் கோவில் தீர்ப்பு தொடங்கி, ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்புகளைக்கூட, ஹிந்து மதப் பண்டிகைகளான ஆயுத பூஜை, சரசுவதி பூஜை, தீபாவளி என்ற பண்டிகைகள், விழாக்களை முன்னிறுத்தி சூத்திர, பஞ்சம முத்திரை குத்தப்பட்டு, நாளும் மிதிபட்டு வாழும் கோடான கோடி மக்களையும் பக்திப் போதையிலிருந்து மீளாத வண்ணம் கவனித்துக் கொண்டு, தாங்கள் நினைத்ததைச் செய்து முடிப்போம் என்ற தணியாத மதவெறி, ஜாதி வெறியை வைத்து அரசியல், சமூக, பண்பாட்டுத் துறையில் சதிராடி வருகின்றனர்!
ரகசிய இயக்கம் நடத்தியவர்களின் பெயரைத்தானே…
முன்பு அரசுத் திட்டங்களுக்கு காங்கிரஸ் பெயர் வைத்ததைப்பற்றி கடும் விமர்சனம் செய்த இந்த ‘அரசியல் அட்டைகள்’, மக்கள் அறியாது ரகசிய இயக்கம் நடத்தியவர்களின் பெயர்களைத்தானே இப்போது திட்டங்களுக்கு வைக்கிறார்கள்!
காந்தி கரன்சி நோட்டு, அம்பேத்கர் நாமாவளி என்று மட்டும் செய்து, பாடமாக வேண்டியவர்களை வெறும் படமாகவே ஆக்கி, காலம் வரவர அவர்களது புகழையும் மங்கச் செய்ய மறைமுகமான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
போதை ஏறியவர்களுக்கு ‘நிர்வாணம் – அசிங்கம்’ எப்படித் தெரியாதோ, அதுபோல, பெரும்பாலான உழைக்கும், நம் சகோதரர்கள் விழிப்புணர்வற்று விழாக்கோலம் கொண்டு, மயங்கிய நிலையிலேயே ஆடுகிறார்கள்.
நிர்வாண நிலையைச் சுட்டிக்காட்டுகின்றவர்கள்மீது ஸநாதன அம்புகளை வீசி அழித்துவிட முயலுகின்றனர். செருப்பு மூலமும் வருகிறது!
புத்தர், அம்பேத்கர் ஆகியோரை அரவணைத்து ஹிந்து மத அமைப்பின் தலைவர்களாகவே சித்தரித்தனர்.
தீபாவளி கதை என்ன?
தீபாவளி கதை என்ன? அதில் வரும் பாத்திரங்கள் இரண்யாட்சதன், நரகாசுரன் என்ற அசுரர்கள் யார்? திராவிட – சூத்திரர்கள்தானே!
ஆரியப் பண்பாட்டினை நுழைக்க முயன்ற பார்ப்பனீயத்தின் கருவியான யாகத்தை எதிர்த்த வர்களைத்தானே அசுரர்கள். அவர்களை அரக்கர்கள் என்று தூற்றி, அழித்துக் கொன்றதற்காக விழாக் கொண்டாடும் மத போதையில் சிக்கியுள்ள மக்களைத் தங்கள் இனத்தை அழிக்கும் கோடரிக் காம்புகளாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
உண்மைகளைத் தலைகீழாகத் திரித்து ஊடுருவலில் வெற்றி பெற்று விட்டனர்!
பகுத்தறிவுக்கு விரோதமான கதையில் – கொல்லப்பட்டவனே ‘‘தனது மரணத்தைக் கொண்டா டுங்கள்’’ என்று வேண்டிக் கொண்டதாகக் கதைக்கட்டி, உண்மைகளைத் தலைகீழாகத் திரித்து ஊடுருவலில் வெற்றியும் பெற்று விட்டனர்.
அசுரர்கள் என்றால், ஆரியர்களின் ‘சுரா பானம்’ ‘சோம பானம்’ என்ற வீரியம் மிக்க மதுவைக் குடிக்காதவர்கள்.
குடித்தவர்கள் ‘‘சுரர்கள்’’ – உயர்ஜாதியினர் – இந்த பூமியில் உள்ள பூசுரர்கள்! குடிக்காதவர்கள் ‘அசுரர்கள்’!
இதைப் புரிய வைக்கும் அறிவுத் துணிவைத் தான், தந்தை பெரியாரும், அவர் கொள்கை பரப்பும் திராவிட இயக்கமும், மக்களிடம் ெகாண்டு சென்றனர்.
சூத்திரர்களை – அசுரர்களைக் கொல்லாத ஹிந்து மதப் பண்டிகை ஒன்று உண்டா? எண்ணிப் பாருங்கள்!
வேளாண்மைத் திருவிழா –
அறிவு உழைப்பாளி திருவிழா!
அறிவு உழைப்பாளி திருவிழா!
‘திராவிடத் திருவிழா பொங்கல்’ என்ற வேளாண்மைத் திருவிழா – அறிவு உழைப்பாளித் திருவிழா ஒன்றுதான் மனிதநேய விழா!
மற்றவை கதைகள் – கற்பனைகள் என்றாலும், அவை நம்மை இழிவு செய்யும் கதைகள்தானே! சற்றே சிந்தியுங்கள்!
‘‘சூத்திர, பஞ்சம இழிவு ஒழிய, ஹிந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்’’ என்று அறிவுறுத்திய மானுட நேயராம் தந்தை பெரியார் அவர்களும், அவரது இயக்கமும் கூறுவதை, ஆத்திரப்படாமல், அறிவு கொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.10.2025
