தி.சிகாமணி
நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் மாநில அரசுகளின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு அத்துமீறி நுழையும் போக்கு அதிகரித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் ஒன்றிய அதிகாரம், மாநில அதிகாரம், பொதுப்பட்டியல் எனப்படும் ஒத்திசைவு பட்டியல் என மூன்று வகையாக அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள மாநில அரசுகளின் அதிகாரம் மூர்க்கத்தனமான தாக்குதலை சந்தித்து வருகிறது. அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. இதன்பின் ஒன்றிய அரசுக்கு மேலதிக அதிகாரங்கள் தேவை என்ற முடிவுக்கு தலைவர்கள் வந்தார்கள். அண்ணல் அம்பேத்கர் வேண்டுமென்றே தான் அரசமைப்பு சட்டத்தில் ஒன்றியம் (union of states) என்ற வார்த்தையை சேர்த்து இருக்கிறோம். இந்தியா ஒரு கூட்டாட்சியாக இருந்த போதிலும் அது மாநிலங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் உருவாகவில்லை. அதனால் எந்த மாநிலத்திற்கும் பிரிந்து போகும் உரிமை கிடையாது என்று தெளிவுபடுத்துகிறோம் என்று விளக்கியுள்ளார். மாநில அரசுக்கு என்று சட்டமியற்றும் அதிகாரம் வரையறுக்கப்பட்டது என்றாலும் அந்தச் சட்டங்கள் ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா இந்த நிலையை நமது சட்டம் இரட்டை ஆட்சி தன்மை கொண்டது என்று விமர்சித்தார்.
குடியுரிமைச் சட்டத்திருத்தம், ஜிஎஸ்டி, தேசிய கல்விக் கொள்கை, வேளாண் சட்ட முயற்சி போன்றவை மாநில அரசுகளின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் நடவடிக்கைகள். ஆளுநர்கள் மட்டுமின்றி அய்ஏஎஸ் அதிகாரிகள். நீதிபதிகள் நியமனம் மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தில் இருப்பதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. வருமானவரித் துறை, சிபிஅய். அமலாக்கத்துறை, என்அய்ஏ ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கான ஏவல் கருவியாக மாறிவிட்டன, மதுபானக் கொள்கையில் ஊழல் என்று கூறி டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு சிபிஅய் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்துள்ளார்கள். மேற்குவங்க முதல்வர் மம்தாவின் இரண்டு அமைச்சர்களை ஊழல் புகாரில் கைது செய்தார்கள். இதே ஊழல் புகாரில் தொடர்புடைய சுவேந்து அதிகாரி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டுள்ளது. அவர்தான் இப்போது மேற்குவங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர். ஊழல் புகாரில் நடவடிக்கை தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் தாமதமாகிறது? விசாரணை அமைப்புகளின் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதே போடப்பட்டுள்ளன என்பது பழிவாங்கல் இல்லாமல் வேறு என்ன?
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு எந்த ஒரு. மாநிலமும் இல்லாமல் ஆக்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டு அதன் தகுதி குறைக்கப்பட்டு விட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார்கள். 2018ஆம் ஆண்டு அங்குள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க போட்டியிட்ட. நிலையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாய்ப்பு தராமல் அம்மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் சட்டமன்றத்தைக் கலைத்து விட்டார். இதன்பின் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத நிலையில் அம் மாநிலக் கட்சிகளை கலந்து பேசாமல் ஜம்மு காஷ்மீரின் 370 வது பிரிவை நீக்கிவிட்டார்கள். பரூக அப்துல்லா உமர் அப்துல்லா, மெஹ்பூபா. ஆகியோரை தடுப்பு காவல் சட்டத்தின்படி வீட்டுச் சிறையில் வைத்து விட்டார். ஓராண்டுக்குப் பின் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அங்கு தேர்தல் நடத்துவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீரில் அப்படி என்றால். இரண்டு தேர்தல்களில் டில்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியாத பாரதிய ஜனதா கட்சி அம்மாநில சட்ட மன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை குறைக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். 356 சட்டப்பிரிவு மூலம் மாநில ஆட்சிகளை கலைக்கும் அதிகாரத்திற்கு எஸ். ஆர். பொம்மை வழக்கு மூலம் கடிவாளம் போட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி புதிய வழியில் ஒட்டு மொத்தமாக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை மாற்றுகிறது.. கவிழ்க்கிறது. அரசமைப்புச் சட்டமே உயர்ந்தது என்கிறார்கள். ஆனால் அதன்படி அமைக்கப்பட்ட எந்த அமைப்பும் சுதந்திரமாக செயல்படவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநில தகுதி பறிக்கப்பட்டது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்னும். விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்தையும் நடத்த முடியவில்லை. ஆளும் கட்சியினரே ரகளையில் ஈடுபட்டு அதன் செயல்பாட்டை முடக்குகிறார்கள்.
மாநில அளவில் உள்ள அய்ஏஎஸ் அதிகாரிகளை ஆளுநர்கள் மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாவட்ட வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தினார். ஆளுநராக் நியமிக்கப்படுவார்கள் கண்ணியமிக்கவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நமது தலைவர்களுக்கு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு வீணாகிப் போனது. அரசமைப்புச் சட்டத்தை விட சனாதன தர்மமே சிறந்தது என்று தமிழ்நாட்டுக்கு வந்து ஆளுநர் ரவி துணிச்சலாகப் பேசுகிறார். ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதற்கு ஒன்றிய காவல் படையை பயன்படுத்தினார்கள். தலைமைச் செயலகத்தில் அப்போது முதல்வராக ஓ பன்னீர்செல்வம் ஓர் அறையில் இருந்த போது தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அதேபோல் மேற்குவங்க தலைமைச் செயலரை இடமாற்றம் என்ற உத்தரவு மூலம் ஒன்றிய அரசு மிரட்டியது. இவையெல்லாம் கூட்டாட்டுக்கு விடப்பட்ட சவால்கள் ஒற்றைப் பேரதிகாரம் என்ற சர்வாதிகாரப் பாதையில் தடை ஏதுமின்றி முன்னேறுகிறார்கள்.
அதிகாரப் பறிப்பு உச்ச நிலைக்கு வரும் என்பதை முன்பே தீர்க்கதரிசனத்துடன் அறிந்ததால் தமிழ்நாட்டில் கூட்டாட்சிக்கான முன்கூட்டியே ஒலித்தன. ஒன்றிய அதிகாரங்களை பிரித்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
பி.வி.ராஜமன்னார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தெரிவித்த பரிந்துரைகளின் அடிப்படையில் 1974 ஏப்ரலில் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார். அதன்பின் இந்திரா காந்தி அமைத்த சர்க்காரியா ஆணையம், வாஜ்பாய் அமைத்த எம்.என். வெங்கடாச்சலயா ஆணையம், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மதன்மோகன் பூஞ்சி ஆணையம் போன்றவைகள் பரிந்துரை அளித்த போதிலும் அதிகாரப் பகிர்வில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. அதற்கு மாறாக மக்களுக்கு பணியாற்றும் நெருக்கமான இடத்தில் மாநில அரசுகள் இருந்தபோதிலும் அதற்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு எதிராக வஞ்சனைகள் நடக்கின்றன. இந்தப் பின்னணியில் அதிகாரப் பகிர்வு குரல்கள் வேறு மாநிலங்களில் இருந்தும் எழுந்துள்ளன. வருகிற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதிகாரப் பகிர்வு குறித்தும் ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தயாரிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அது குறித்து தீர்மானம் நிறைவேற்ற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்த வழியில் எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்புகள் தொடர வேண்டும்.
கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்
நன்றி: காக்கைச் சிறகினிலே,
மே 2023,பக்கம் 26-27