அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் முதல் தவணையாக “பெரியார் உலகத்திற்கு” ரூ.10,45,000 நிதி அளிப்பு!

9 Min Read

முதல் தவணை நிதியைப் பெற்றுக் கொண்டு கழகத் தலைவர் விழாப் பேருரை ஆற்றினார்!

அரியலூர்,அக்.16. பெரியாரை உலகமயமாக்கும் நோக்கில் திருச்சி- சிறுகனூரில் அமைய உள்ள “பெரியார் உலகத்திற்கு” அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக நிதியளிப்பு விழா நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

கழகத் தலைவர் வேண்டுகோளை உத்தரவாக ஏற்று, அரியலூர் மாவட்டக் கழகம் சார்பில், 15.10.2025, புதன்கிழமை அன்று, காலை 10:45 மணியளவில், அரியலூர் ராமஜெயம் லக்ஸ் அரங்கத்தில், பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்க, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் நிதிக்குழு தலைவர் தங்க.சிவ மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். அரியலூர் மாவட்டச் செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, அசோகன் காப்பாளர்கள் சி. காமராஜ் , சு.மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன். செந்தில்குமார், க.கார்த்திக்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன் இணைப்புரை வழங்கினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் நிதிக்குழு செயலாளர் இரத்தின. ராமச்சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். பேராசிரியர் ந.தங்கவேலன், வழக்குரைஞர் சா. பகுத்தறிவாளன்,  ஓய்வுபெற்ற கோட்டப் பொறியாளர் வீ. இராமச்சந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராஜா,திமுக சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலாளர் சுபா. சந்திரசேகர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அரியலூர் மாவட்ட பெரியார் உலக நிதிக் குழு சார்பாகவும், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் சார்பிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.  முன்னதாக, ”உலகத் தலைவர் பெரியார் – தொகுதி 12”, ”வைக்கம் – பெரியாரின் நூற்றாண்டு காட்சியும், மாட்சியும்”, ”தமிழ்ச் செம்மொழிச் சாதனை – கலைஞரின் செயல்திறன் வெற்றி” உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கிப் பயன்பெறுமாறு கழகச் சொற்பொழிவாளர் பிராட்லா என்னாரெசு அறிமுகம் செய்வித்தார்.  அதைத் தொடர்ந்து, தோழர் சிந்தனைச் செல்வன் நன்கொடையாளர்களின் பெயர்களை வாசிக்க, தோழர்கள் மேடைக்கு வந்து, கழகத் தலைவர் அவர்களிடம் நன்கொடைகளை காசோலைகள் மூலமாக வழங்கினர். நிதியளிப்பு விழாவில் பெரியார் உலகம் நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட தொகை ரூ.10 லட்சம். வழங்கியது ரூ.10,45,000/- ஆகும். அதைத் தொடர்ந்து அதே மேடையிலேயே கழகத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து நிதியளிப்பு விழாவின் நோக்கத்தை விவரித்தும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் பேசினார்.

இறுதியாக கழகத் தலைவர் விழா பேருரை ஆற்றினார். ”அன்பும், பாசமும் கலந்து நடைபெறும் கொள்கைக் குடும்ப நிகழ்ச்சி” என்று தொடங்கினார். டோக்கியோவுக்கு பணிக்குச் செல்வதை முன்னிட்டு, “பெரியார் உலகத்திற்கு” நன்கொடை வழங்கிய இளம் பெண்ணை நினைவூட்டி, ”நன்கொடை முக்கியமன்று, இந்த நன்றி உணர்ச்சி தான் முக்கியம்” என்று சொல்லிவிட்டு, “பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? அவரது கொள்கையை மட்டும் நாம் ஏற்றிருக்காவிட்டால்? அரியலூர் பெண், ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்குச் வேலைக்குச் சென்றிருக்க முடியுமா? என்று அழுத்தமாகச் சொன்னதும் பலமான கைதட்டல் எழுந்து அடங்கியது. தொடர்ந்து, ”இது யாரால் நடந்தது? தந்தை பெரியாரால் நடந்தது! அவர் மட்டும் பிறந்திருக்காவிட்டால், “இங்கும் மனுதர்மம் தான் கோலோச்சி இருக்கும். அப்படி இருந்திருந்தால் பெண்களின் கைகளில் கரண்டி தான் இருந்திருக்கும். கரண்டி கூட அன்று, ஆப்பை தான் இருந்திருக்கும். திராவிடம் தான் பெண்களுக்குக் கல்வியைக் கொடுத்தது.” என்று முடித்தார்.

மேலும் அவர், ”உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் திராவிடர் இயக்கக் கருத்துகளை இந்தப் பகுதியில் உள்ள மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததையும், அதேபோல தமிழ் மறவர் பொன்னம்பலனார் அரியலூரில் பலருக்கும் வழிகாட்டியாக இருந்ததையும் குறிப்பிட்டுவிட்டு, இவர்கள் எல்லாருக்கும் யார் வழிகாட்டி? தந்தை பெரியார் ஒருவர்தான் எல்லாருக்கும் வழிகாட்டி!” என்று சொன்னதும் பார்வையாளர் உணர்ச்சி மிகுதியில் கைதட்டினர். தொடர்ந்து, தான் 12 வயதில்; 1945 இல் அரியலூரில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு பேச வந்ததை நினைவூட்டி, ”மின்சார விளக்கு கிடையாது; கேஸ் விளக்கு தான், ஒலிபெருக்கி கிடையாது” அன்றைக்கு அரியலூர் எவ்வாறு இருந்தது என்பதை படம் பிடித்துக் காட்டி விட்டு, அப்படியெல்லாம் இங்கு பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது என்று அன்றைய சூழலை விவரித்தார். பல எதிர்ப்புகளையும் எதிர் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

திராவிட மாடல் முதல்வர் மறுபடியும் கோட்டைக்குள் Entry. அதற்கு நாங்கள் Sentry
திராவிட மாடல் ஆட்சியை 2026 இல் மீண்டும் அமர வைக்க வேண்டும் என்பதைக் கூறி வரும் போது, ஒரு புதிய சொற்றொடரை அண்மைக்காலத்தில் பயன்படுத்தி வருகிறார். மதசார்பற்ற கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.விடம் தங்களுக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்று கேட்பார்கள். நாங்கள் அப்படி கேட்க மாட்டோம். ஏனென்றால், எல்லா இடங்களும் எங்களுடையதுதான். ஆகவே எல்லா இடங்களிலும் நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என்று கூற வரும் போது, “திராவிட மாடல் முதலமைச்சர் மறுபடியும் கோட்டைக்குள் Entry. அதற்கு நாங்கள் Sentry என்று கூறி வருகிறார். கடந்த அக்டோபர் 4ஆம் நாள் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற, “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக மாநில மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையிலும் இந்த சொற்றொடரைப் பயன்படுத்திப் பேசினார். மாண்புமிகு முதலமைச்சரும் அதை ரசித்துக் கேட்டார்.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் சார்பில், மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களால் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு, ஓடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தை பெரியார் ஒரு திருமண வீட்டில் பேசிய உரை, அறிஞர் அண்ணாவால் தொகுக்கப்பட்ட, ”இனி வரும் உலகம்” என்று ஒரு சிறு வெளியீடாக வெளியிடப்பட்ட இருப்பதை நினைவூட்டி, வருங்காலத்தில் வாகனங்கள் பேட்டரியில் ஓடும் என்று கூறியிருக்கும் தந்தை பெரியாரின் தொலைநோக்கு எத்தகையது என்பதற்கு ஒரு சான்றாகக் கூறினார். இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மீது ஒரு ஸநாதன வழக்குரைஞர் செருப்பு வீசியதன் பின்னணியை விளக்கினார். அதே ஸநாதனம் பெரியார் மீது செருப்பை வீசிய போது பெரியார் என்ன செய்தார் என்பதையும் சேர்த்துச் சொன்னார். காந்தியை படுகொலை செய்த கோட்சேவையும் நினைவூட்டினார். ”அப்படிப்பட்ட ஸநாதனம் தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்றால், மீண்டும் வருகிற 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சிதான் ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும். அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றும், பெரியார் உலகம் நன்கொடையை குறுகிய காலத்திற்குள் திரட்டி வழங்கிய தோழர்களையும், குறிப்பாக உடனிருந்து வழிகாட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டி, தமதுரையை நிறைவு செய்தார். தொடர் நிகழ்ச்சி இருப்பதை முன்னிட்டு, தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) நோக்கிப் புறப்பட்டார்.

”தந்தை பெரியார் கருத்துகளுடன் உடன் படாதவர்கள் இருக்கலாம். ஆனால், கடன் படாதவர்கள் உண்டா? பார்ப்பனர்கள் உட்பட”
அண்மைக் காலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியாரால் பயன்பெறாத வீடு தமிழ்நாட்டில் ஒன்றாவது உண்டா? என்ற கேள்வியைக் கேட்கும் போது, ஒரு புதிய சொற்றொடரை முன் வைத்து மேலே கேட்கப்பட்ட கேள்வியின் ஆழத்தையும் அவசியத்தையும் எளிமையாக பளிச்சென்று மக்களுக்கு கடத்தி வருகிறார். அந்த சொற்றொடர், ”தந்தை பெரியார் கருத்துகளுடன் உடன் படாதவர்கள் இருக்கலாம். ஆனால், கடன் படாதவர்கள் உண்டா? பார்ப்பனர்கள் உட்பட” என்பதுதான். இந்த சொற்றொடருக்குப் பின், கேட்பாளர்களுக்கு விளக்கவுரையே தேவைப்படவில்லை. சொன்னவுடன், “அடடே…” என்ற வியப்புணர்ச்சியுடன் கைதட்டி வருகின்றனர்.

“சீனியாரிட்டி முக்கியம் இல்லை. சின்சியாரிட்டி தான் முக்கியம்”
அரியலூரில் 15.10.2025 அன்று, பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவில் பேசும்போது, அறிஞர் அண்ணா காலமான பிறகு, கலைஞர் தான் முதலமைச்சர் பொறுப்பை கட்டாயம் ஏற்க வேண்டும் என்று பெரியார் சொன்னதை, ஆசிரியர் அவர்கள் தான், கலைஞரிடம் அன்றைக்கு நேரில் சென்று சொல்லியிருக்கிறார். அப்போது நாவலர் போன்றவர்கள் கலைஞருக்கு மூத்தவர்கள் போட்டியாக இருந்த போது, பெரியார் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததை குறிப்பிடும் போது, “சீனியாரிட்டி முக்கியம் இல்லை. சின்சியாரிட்டி தான் முக்கியம்” என்ற கருத்துப்பட பெரியார் சொன்ன கருத்தை குறிப்பிட்டார். விளக்கமாக அந்த வரலாற்றை சொல்ல வேண்டியதை இந்த ”சீனியாரிட்டி – சின்சியாரிட்டி” என்ற இந்த இரண்டு சொற்கள் பளிச்சென்று எளிமையாக புரிய வைத்துவிடுகின்றது. 

 

நிதி மட்டுமன்று நிதி வழங்கிய பையும் பத்திரமாக இருக்கிறது!

பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா என்று மாவட்டம் தோறும் கழகத் தோழர்கள் போட்டி போட்டுக்கொண்டு, 10 லட்சம், 25 லட்சம் என்று நிதி திரட்டி பெரியார் உலகம் வளர்ச்சிப் பணிகளுக்கு தந்து கொண்டிருக்கின்றனர். அப்படி 15.10.2025 அன்று அரியலூரில் நடைபெற்ற நிதியளிப்பு விழாவில் 10,45,000/- ரூபாய் வழங்கப்பட்டது. நிதியைப் பெற்றுக் கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசும் போது, ஒரு அரிய வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசி அதற்கு சான்றையும் கையோடு மக்களுக்குக் காட்டி வியக்க வைத்தார்.

80 ஆண்டுகளுக்கும் முன்பு அதாவது, 1938 – 1940 கால கட்டத்தில் தந்தை பெரியார், இதே போன்று நிதி திரட்டியிருந்திருக்கிறார். இப்போது போலவே அப்போதும் மக்கள் நிதி திரட்டி தந்திருக்கின்றனர் என்பதைச் சொல்லிவிட்டு, அதற்கு ஒரு ஆதாரத்தை எடுத்து காண்பித்தார். அது, திரட்டிய அந்த நிதியைப் போட்டுத் தந்த பை! மேல் பக்கம் கிழிந்திருந்தது. அதில், பெரியார் பணமுடிப்பு – 1001 அணா – வாடிப்பட்டி – மதுரை – 28.01.1940 என்று சிவப்புத் துணியில் வெள்ளை நூலில் எம்பிராய்டரி மூலம் எழுதப்பட்ட பையைக் காட்டினார்.

மக்கள் மிகுந்த வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஆசிரியர் அய்யா அவர்கள், “கொடுக்கின்ற நிதி மட்டுமன்று, அதன் பையையும் பெரியாருக்குப் பிறகு அன்னை மணியம்மையார்; அவருக்குப் பிறகு நான் இதை பத்திரமாக வைத்திருக்கிறோம். ஆகவே, நீங்கள் அளித்த நிதி உரிய முறையில் செலவிடப்படும். முதல் தவணை என்று தெரிவித்திருக்கிறீர்கள். அடுத்து நீங்கள் தேதி கேட்டால் நான் வரத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்ததும், வெடிச்சிரிப்பும்,  கைதட்டலும் ஒருங்கே எழுந்து அடங்கின.

அரியலூர் நிகழ்ச்சியின் நிதிக்குழு உறுப்பினர்களான அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் த.செந்தில் ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் அ.சேக்கிழார்  தா.பழூர் ஒன்றிய பொறுப்பாளர் சி. தமிழ் சேகரன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ் செல்வன் செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் மு.ராஜா மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெ இளவரசன், மாவட்ட இ.அ.தலைவர் லெ. தமிழரசன், சிவசக்தி, மாவட்ட ப.க செயலாளர் மு.ஜெயராஜ் மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர் ,விவசாய அணி செயலாளர் ஆ.இளவழகன், செந்துறை தா.மதியழகன், மகளிரணி பொறுப்பாளர் இந்திரா காந்தி , பொறியாளர் இலக்கியா ,மருத்துவர் தமிழ்மணி, அன்பரசன், ஆண்டிமடம் ஜானகி, செந்துறை நீல. இந்துமதி, ஆட்டோ தர்மா ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே அண்ணாமலை, செந்துறை மணிவண்ணன் – ஜெயலட்சுமி ஆகியோரது மகன் ஆகாஷ், மகள் ஆர்த்தி வெண்மணி பச்சைமுத்து, குழுமூர் சுப்பராயன், வேளாண் அலுவலர் ஆத்தூர் பகுத்தறிவாளன், அரியலூர் மு. மருதமுத்து, மனோன்மணி, உடையார்பாளையம் ஆசிரியர் ரவி, ஆசிரியர் நல்லப்பன், மாவட்ட இ.அ.செயலாளர் வி.ஜி. மணிகண்டன், விக்னேஷ் குமார், விஜய் ,தமிழர் தேசிய முன்னணியை சேர்ந்த பாரிவள்ளல், மறவனூர் மதியழகன் ஆசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இறுதியாக நிதிக்குழு பொருளாளர் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *