இந்திய தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு – ஆதிக்க ஸநாதன ஆணவ முகத்தின் வெளிப்பாடே!- வீ. குமரேசன்

10 Min Read

அண்மையில் ஒரு பயிற்சிப் பட்டறையில் பேசியபின் பயிற்சியாளர்களில் ஒருவர் எழுந்து வினா எழுப்பினார்.

அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளாகிறது! இதுவரை ஏற்பட்ட சாதனைகளுள் முக்கியமானது எது? நடைமுறைக்கு சவாலாக இருப்பது எது?

சாதனை, சவால் இரண்டிற்கும் சேர்த்து 2025 அக்டோபர் 6-ஆம் நாளன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி மீது நடந்த தாக்குதல் முயற்சியைத் தான் சொல்லத் தோன்றியது.

மக்களாட்சி நாட்டின் மகத்துவமான மூன்று தூண்களுள் ஒன்று நீதித்துறை. அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்பது எந்தளவு உயரியநிலை, மாண்பமை பதவி என்பது நாட்டு நடப்புகளில் அக்கறை கொண்டோர் அறிந்ததே. அந்தப் பதவிக்கு வந்த – தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்திலிருந்து வந்த இரண்டாவது தலைமை நீதிபதி திரு.பி.ஆர்.கவாய் அவர்கள். புத்த நெறியினைத் தழுவிய முதல் தலைமை நீதிபதி ஆவார் அவர். கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட வகுப்பினரிலிருந்து 75 ஆண்டு காலத்தில் இரண்டாவதாக தலைமை நீதிபதியாகிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் நாட்டின் முதல் குடிமகன் / குடிமகள் என்ற நிலையில் உள்ள குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 75 ஆண்டு கால அரசமைப்புச் சட்டப்படி நடைபெறும் ஆட்சியில் ஒரு மகத்தான சாதனை அது.

அதே நேரத்தில் எப்படிப்பட்ட சாதனை நிகழ்த்தப்பட்டாலும், அதனை அவமதிக்கப்படும் வகையில் ஒரு செயலை செய்துக் காட்டமுடியும் என்பதுவும் ‘அனைவரும் சமம்’ எனும் அடிப்படையிலான அரசமைப்புச் சட்டத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. ‘மனிதர் அனைவரும் சமம்; பிறப்பால் பாகுபாடு கிடையாது’ என்பதை மறுத்திடும் கோட்பாடே ஸநாதனம் என அறியப்படும் மனுதர்ம கோட்பாடு. ‘பிறப்பில் பேதம் உண்டு. முன்வினைப்படி இந்த பிறப்பில் வாழ்க்கை அமையும்; கல்வி மறுக்கப்படும்; அப்பன் செய்யும் தொழிலைத்தான் மகன் செய்திட வேண்டும்’ என்பதை பல நூற்றாண்டுகளாக வலிந்து கூறி சமுதாயத்தில் நிலைக்கச் செய்துவிட்ட மனித விரோத கோட்பாடே ஸநாதனம். அப்படிப்பட்ட ஸநாதனத்தை காப்பாற்றிட உச்சநீதிமன்றத்திலேயே வழக்காடும் நிலையில் உள்ள ஒரு வழக்குரைஞர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானவர் நீதிமன்றப் பணிகளை கவனித்துக் கொண்டிருக்கும்பொழுது அவர் மீது தனது செருப்பு வீசிட முயன்றார் என்பதுதான் நம் அரசமைப்புச் சட்டத்திற்கு – அதன் நடைமுறைக்கு விடப்பட்ட சவால். தலைமை நீதிபதி மீது செருப்பை வீசிடும் முயற்சி தடுக்கப்பட்டது என்றாலும் நாட்டின் தலைமை நீதிபதி அவர்களை திட்டமிட்டு அவமதித்ததாகத்தான் கருதப்பட வேண்டும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.பி.ஆர்.கவாய் அவர்களின் மீது செருப்பு வீசிடும் முயற்சியின் நிகழ்ச்சியை – 75 ஆண்டு கால அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறைச் சாதனையை விட அதற்கு விடப்பட்ட – ஸநாதனக் கோட்பாட்டால் விடப்பட்ட சவால்தான் பெரிதாக உள்ள நிலை தெரியவருகிறது. அவமதிப்பை சுற்றியிருந்த காவலர்கள் தடுத்துவிட்டனர். செருப்பு வீசிடும் வழக்குரைஞரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்தனர். வழக்குரைஞர்களிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணையில் “காஜுரா கோயில் விஷ்ணு சிலை புதுப்பிப்பு பற்றிய வழக்கில் தலைமை நீதிபதி, ‘கடவுளை கேலி செய்து பேசிவிட்டார். ஸநாதனத்தில் பற்றுக் கொண்டு அதனைக் கடைபிடித்துவரும் எங்களைப் போன்றவர்களால் தலைமை நீதிபதி சொன்னதை பொறுத்துக் கொள்ள முடியாது. செருப்பை வீசிடும் முயற்சி செய்தது என்னுடைய செயல் அல்ல; கடவுள் விதித்தபடி ஸநாதனத்தைக் காப்பாற்றிட அதன் அடையாளமாக தலைமை நீதிபதி மீது எனது செருப்பைக் கழற்றி வீசிட முயற்சி செய்தேன்.” என்று கூறியபின் காவல்துறையினர் அந்த வழக்குரைஞரை விடுவித்து விட்டனர். அவர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை.

உச்சநீதி மன்றத்தில் வழக்காடும் நிலையில் இருந்தார் என்ற நிலையில் பார்கவுன்சிலில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த வழக்காடும் உரிமம் திரும்பப் பெறப்பட்டது. தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் நடந்துக் கொண்ட வழக்குரைஞர் மீது எந்தவித வழக்கும் பதியப்படவில்லை.

75 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் நடைபெற்ற ஒரு கோர சம்பவத்தை நினைத்துப் பார்க்கலாம். 1947இல் நாடு பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்று ஓராண்டு கூட முடியாத காலம்; 1948, ஜனவரி 30 பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றிட முக்கிய காரணமாக அந்தப் போராட்டத்தை வழிநடத்திய, ‘தேசப் பிதா’ எனப் போற்றப்பட்ட, போற்றப்பட்டு வரும் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட நாள். சுட்டுக் கொன்றவன் நாதுராம் கோட்சே எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற இந்துத்துவவாதி. விடுதலை பெற்ற இந்தியா மதச் சார்பற்ற (Secular) நாடாகவே இருக்க வேண்டும்; பாகிஸ்தானைப் போல மதம் சார்ந்த நாடாக மாறக்கூடாது. அதற்கு ஏற்ற வகையில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என விரும்பியவர் காந்தியார். அதற்கான தொடக்க காலப் பணியினை – குறிப்பாக அரசமைப்புச் சட்டம் எழுதிடும் வரைவுக் குழு தலைமைப் பொறுப்பினை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு அளித்திட வேண்டும் என வலியுறுத்தியவர் காந்தியார். அம்பேத்கர் கருத்துக்கு எதிரானவர்கள் பலர் அரசமைப்பு அவையில் அங்கம் வகித்தாலும், மதவாதிகள் பலர் இருந்தாலும் – அவர்கள் அனைவருக்கும் ஈடு கொடுத்து அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கி விடுவார் என்ற நம்பிக்கை காந்தியாருக்கு இருந்தது. காந்தியாரின் முக்கிய சாதனைகளுள் முதன்மையானது அம்பேத்கரை அரசமைப்புச் சட்ட அவையில் அங்கம் பெற வைத்ததுதான்.

பாகிஸ்தான் பிரிவினையை முழு மனதாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தார் காந்தியார். இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட போராளி அவர். நாடு பிரிந்த நிலையில் நியாயமாக பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பங்கீட்டை நினைவூட்டி வந்தார் காந்தியார். விடுதலை பெற்ற நாடு இந்து நாடாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள் சாவர்க்கார் வழி வந்த இந்துத்துவவாதிகள். விடுதலை பெற்ற நாடு இந்துநாடாக மாற்றம் பெற்றிட பெரிய தடையாக காந்தியார் இருந்தார். மேலும் தொடக்கத்தில் ஸநாதனக் கோட்பாட்டை ஆதரித்து வந்த காந்தியார் தமது இறுதிக் காலத்தில், பிறப்பால் பேதம் இல்லை; அனைவரும் சமம் எனும் கருத்தினை பேசிடத் தொடங்கினார். இது ஸநாதனக் கோட்பாட்டிற்கு எதிரான நிலை. இவை அத்தனைக்கும் சேர்த்து காந்தியார் இனி வாழ்ந்தால் தங்களது கொள்கை நடைமுறைக்கு தடையாக இருப்பார் எனக் கருதி நாதுராம் கோட்சே அவரை சுட்டுக் கொன்றார்.

காந்தியார் கொலை வழக்கில் தனது நிலைப்பாட்டை வழக்குரைஞர் துணையின்றி நீதிமன்றத்தில் தானே எடுத்துச் சொன்னான் நாதுராம் கோட்சே.

“The accumulating provocation of 32 years, culminating in his last pro-Muslim fast, at last goaded me to the conclusion that the existence of Gandhiji should be brought to an end immediately.”

“32 ஆண்டுக் கால தூண்டுதல்களின் இறுதி விளைவுதான் காந்தியார் சமீபத்தில் நடத்திய “முஸ்லிம் ஆதரவு”ப் பட்டினிப் போராட்டம். காந்தியாரின் வாழ்வு முற்றுப்பெற வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட என்று என்னைத் தீர்மானிக்க வைத்து விட்டது அவருடைய இந்தப் போராட்டம்.”

Nathuram Godse referenced the Bhagavad Gita to justify his actions, interpreting the text as a call to prioritize duty over personal ties.

பகவத் கீதையின் வழி தனது கடமையை (காந்தியாரை சுட்டுக் கொன்றதை) செய்து முடித்ததாக நாதுராம் கோட்சே விசாரணை நீதிமன்றத்தில் தனது வாக்குமூலமாக தந்தான்.

கருத்தை கருத்தால் நேர் கொள்ள வேண்டும் என்ற திராணியற்றவர்கள் இந்துத்துவவாதிகள். காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னர் 75 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையிலும் இந்துத்துவவாதிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

காஜுரா கோயில் சிற்பங்கள் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிதிலமடைந்த விஷ்ணு சிலையைப் புதுப்பித்து கோயிலுக்குள் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தொல்லியல் துறையினரை அணுகுங்கள் என தனது அமர்விற்கு வந்த வழக்கினை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தள்ளுபடி செய்தார். திரும்பத் திரும்ப மனு செய்தவர் சிலையைப் புதுப்பிப்பதற்கு உத்தரவிடக் கோரிய நிலையில், நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள விஷ்ணுவிடமே கேட்டுப் பெறுங்கள் என்று சொல்ல நேர்ந்தது. இதை எப்படி ஸநாதனத்திற்குப் புறம்பானதாகக் கருதமுடியும்?

“ஸநாதனத்தின் மீது நம்பிக்கை கொள்வோரை பாதிப்பதாகக் கூறி செருப்பைக் கழற்றி தலைமை நீதிபதி மீது வீசிட முயற்சி செய்தேன்” என தாக்குதலுக்கு முயற்சித்த உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் ராகேஷ் கிஷோர் கூறியுள்ளார். நாதுராம் கோட்சே கூறியதற்கும், ராகேஷ் கிஷோர் கூறியதற்கும் குற்றத்தின் உள்ளடக்கப் பின்னணியில் எந்த மாற்றமும் இல்லை. அன்று மேற்கோள் காட்டியது பகவத் கீதையை; இன்று சனாதன கோட்பாட்டை – வார்த்தைகள் மாறியுள்ளன; சாராம்சம் ஒன்றே.

ஸநாதனக் கோட்பாட்டின் விழுமியங்கள் ஒவ்வொன்றும் அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பானதே.

அரசமைப்புச் சட்டத்தின்படி சட்டப் பணி ஆற்றிய தலைமை நீதிபதியை, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான ஸநாதனக் கோட்பாட்டில் உயர் நம்பிக்கை வைத்து ஒருவர் தாக்கிட முயற்சித்துள்ளார். இது வெளிப்படையாகத் தெரியும் ஒரு தனி நபர் செயல் அல்ல. செயல் புரிந்தவர்களுக்குப் பின்னால் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு தத்துவம், நம்பிக்கை என்பதாக தூக்கிப் பிடிக்கப்படுகிறது. இதில் உள்ள நியாயமற்ற தன்மையை இயல்பான மனநிலையில் உள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும். ‘நடந்து விட்ட செயல்’ குறித்து உடன் இருந்தோர் சற்று நேரம் கழித்து நினைவூட்டிய வேளையில் தலைமை நீதிபதி ‘அதை அப்போதே மறந்து விட்டேன்’ என்று இயல்பாகச் சொல்லிவிட்டு நீதிமன்றப் பணியில் மூழ்கி விட்டார்.

இது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அது பெருந்தன்மை என்று நரேந்திர மோடி பாராட்டியது குறித்து மட்டும் பேசிவிட்டு போக முடியாது. அரசின் (State) முக்கிய அங்கமான நீதிபரிபாலனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவருக்கு நேர்ந்ததை அப்படி எளிதில் கடந்து செல்வது நாட்டின் எதிர்கால ஜனநாயக குடியரசு ஆட்சிக்கு உகந்ததாகாது!

பிரதமர் மோடி மட்டும் தனது ‘X’ தளத்தில் தலைமை நீதிபதி அவர்களிடம் தான் பேசிப் பாராட்டியதைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்; பிரதமர் பதிவிட்ட செய்திக்கு எத்தனை பேர் ஆதரவாக கருத்துத் தெரிவித்து (பொதுவாக பிரதமரின் ஒவ்வொரு பதிவையும் பின்பற்றி ஆதரவாகக் கருத்து தெரிவிப்பவர்கள்) உள்ளார்கள்? பிரதமரின் மற்ற பதிவிற்கு உள்ள பேராதரவு, தலைமை நீதிபதியைப் பாராட்டிப் பதிவிட்டதற்கு வினையாற்றியதா? மோடி நாட்டின் பிரதமர் என்ற நிலையில் தலைமை நீதிபதியைத் தொடர்பு கொண்டு அவரது பெருந்தன்மையான நிலைக்கு பாராட்டியது – ஒரு மரபு கருதியே; சம்பிரதாயமே!

பிரதமர் நரேந்திர மோடியின் பதிவிற்கு எப்பொழுதும் ஆதரவு அளிப்பவர்கள் அனைவரும் தலைமை நீதிபதியைப் பாராட்டிய பதிவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது எதைக் காட்டுகிறது? தலைமை நீதிபதி மீது செருப்பை வீசியவர் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அந்த அமைதியான எதிர்வினையினைக் கருதிடலாமா? இந்த நிலையினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்கும் முயற்சியை எதிர்ப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரதமர் தவிர ஒன்றிய அமைச்சரவையின் எந்தவொரு அமைச்சரும், சட்ட அமைச்சர் உள்ளிட்ட எவருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே. ஏன்? பா.ஜ.க.வின் ரஜ கத துரகபதாதிகள் எவருமே பிரதமர் தெரிவித்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை; ஆதரவு அளிக்கவில்லை; அங்குதான் இருக்கிறது ஸநாதனத்தின் சூட்சுமம்.

ஸநாதனக் கூட்டமானது நடந்த நிகழ்ச்சிக்கு ‘அமைதியாக’ இருந்து தாக்குதல் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருக்கிறது. சங்கப் பரிவாரின் ஊடகங்களில், தாக்குதல் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பு கொடுக்க விரும்பாதவர்களிடம் இதைத் தவிர எதை எதிர்பார்க்க முடியும்? ஆனால் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை மாண்பினைப் போற்றுபவர்கள் – ஒரு சில வழக்குரைஞர்கள் ‘நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கு நடத்திட அரசு வழக்குரைஞர்களிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

இருப்பினும் சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சமத்துவ நீதி ஆகிய சீரிய நோக்கங்களுக்காக போராடி வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ‘விஷ்ணு’ சிலையைப் புதுப்பிக்கும் வழக்கிலே தலைமை நீதிபதியை விமர்சித்த காவிக் கும்பலுக்கு சரியான பதிலடி கொடுத்து ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இப்பொழுது நடந்த தாக்குதல் முயற்சிக்குப் பின்னரும் ஒரு கண்டன அறிக்கையினை ஆசிரியர் வெளியிட்டுள்ளார். திராவிடர் கழகத்தினர் அக்டோபர் 16-ஆம் நாள் தமிழ்நாடெங்கும் முக்கிய நகரங்களில் தலைமை நீதிபதி மீது செருப்பை வீசி நடத்த இருந்த தாக்குதல் முயற்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தினை நடத்திட உள்ளனர்.

75 ஆண்டு காலம் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தும், ஸநாதனிகளின் மனதில் மாற்றம் ஏதும் நடைபெறவில்லை. சமத்துவத்திற்கான போராட்டத்தை கருத்தியல் அடிப்படையில் தொடர்ந்து நடத்த வேண்டும். ஸநாதனத்திற்கு வக்காலத்து வாங்கிடும் அவர்ணர்கள் முழுவதுமாக விழித்தெழ வேண்டும். தலைமை நீதிபதியானவர் ஒரு தனி நபர் அல்ல. இன்றைக்கு அந்தப் பதவியில் இருக்கும் பி.ஆர்.கவாய் அவர்களுக்கு கருத்தியல் சார்ந்த பின்புலமும், ஆதரவும் நாடு முழுவதும் உள்ளதை ஆதிக்க ஸநாதனவாதிகள் மறந்துவிடக் கூடாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *