முனைவர் அதிரடி க.அன்பழகன்
மாநில அமைப்பாளர்,
கிராமப் பிரச்சாரக்குழு,
திராவிடர் கழகம்
தந்தை பெரியார் தனது கொள்கை பரப்பும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேட்டிற்கு ஆசிரியராக 1962ஆம் ஆண்டு அய்யா தமிழர் தலைவர் அவர்களை அமர வைத்தார்.
“வீரமணி மட்டும் இப்பொறுப்பை ஏற்க சம்மதிக்கவில்லை என்றால், விடுதலை நாளேட்டை நிறுத்திவிட்டு, வார ஏடாக ஆக்கிட எண்ணியிருந்தேன்” என்று பெரியார் பதிவு செய்துள்ளார்.
மேலும், அய்யா கூறுகையில், ‘விடுதலைக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள வீரமணியின் ஏகபோக உரிமைக்கு விடுதலையை ஒப்படைத்துவிட்டேன்’ என்று பிரகடனப்படுத்தினார்.
ஆசிரியர் பொறுப்பேற்ற 1962ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 – அறிவாசான் பிறந்த நாள் அன்று விடுதலையின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் ஆண்டு மலரை ஆசிரியர் அய்யா அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
2025ஆம் ஆண்டு மலர்ந்திடும் இம்மலர் தொடர்ந்து 64ஆம் ஆண்டு மலராக வெளிவந்து கொள்கை மணம் வீசுகிறது. (அதற்குமுன் 1956ஆம் ஆண்டு மட்டும் வெளியிடப்பட்டு, பின்னர் தொடரப்படவில்லை).
இந்த மலர் மலரும் இவ்வாண்டு, இயக்க வரலாற்றில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு, “உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்” எனும் உச்சம் தொடும் வெற்றியைக் குவிக்கும் ஆண்டாகவும் மலர்கிறது.
பெரியாரின் கொள்கை கோலோச்சும் உலகத்தின் மாதிரியை – “பெரியார் உலகம்” எனும் பெயரில் திருச்சி மாநகருக்கு அருகில் “சிறுகனூர்” எனும் சிற்றூரில் உருவாகும் காலத்தில் இந்த ஆண்டு மலர் மலர்கிறது.
92ஆம் ஆண்டு வயதில் 64ஆம் ஆண்டு மலரினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிவரச் செய்து, பெரியார் ஆண்டு மலரை உலகை வலம் வரச் செய்துள்ளார் என்றால் அது மிகையில்லை.
பெரியார் பிறந்த நாள் மலர் – அறிவாசான் பெரியார் சுயமரியாதை இயக்கம் குறித்து குடிஅரசில் எழுதிய கருத்துகளோடு, தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் “திராவிடமே வெல்லும்” எனும் கருத்தாழமிகு கட்டுரை – சமூகநீதி காத்த சரித்திர நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் “பெரியார் பார்வையில் திராவிட மாடல் அரசு” ஆற்றிடும் அரும் பணியினைப் பட்டியலிடும் அரிய கட்டுரை மற்றும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் – கவிஞர்கள் – ஊடகத்துறையினர் – பன்னாட்டு அறிஞர்கள் என 43 பேர்களின் கட்டுரைகள், கருத்துப் பொக்கிஷங்களாக இடம் பெற்று வெளியாகியுள்ளது.
இம்மலர் 394 பக்கங்களைக் கொண்டுள்ளது. மலரில் பல செய்திகள் – உரிய தரவுகளோடு பக்கங்கள் தோறும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்களோடு தந்தை பெரியாரின் படங்கள் – வரலாற்றை உருவாக்கிய சந்திப்புகள், நிகழ்ச்சிகள் என்று பல அரிய படங்களின் அணிவகுப்பாக இம்மலர் அமைந்துள்ளது.
கழகத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடும் கழக டைரி – தமிழர் தலைவர் மேற்கொண்ட பிரச்சாரப் பெரும் பயணத்தின் சுற்றுப் பயண பட்டியல் – தமிழர் தலைவரின் அரிய அறிக்கைகள் அலைஅலையாய் கால வரிசைப்படி இடம் பெற்றுள்ளது மலரின் தனிச் சிறப்புக்கு அணி சேர்ப்பதாய் அமைந்துள்ளது.
மலரின் அட்டைப் படத்தில் புரட்சியின் வடிவாய் – எழுச்சியின் இருப்பாய் அச்சிடப்பட்டுள்ள அய்யாவின் முழுத் தோற்றம். மலரில் உள்ளே இருக்கும் அவரது செய்தியினை உரைப்பதுபோல் இடம் பெற்றுள்ளது.
முதல் பக்கத்தின் முதலாக – மலரின் செய்தி முகமாக இருக்கும் “ஓ… இளைஞர்களே!” என்று பெரியார் உரக்க அழைத்து உரைக்கும் செய்தி, படிக்கும் இளைஞர்களின் இரத்தத்தைச் சூடேற்றி, உயிர் கொடுக்கும் செய்தியாகும்.
அடுத்து, தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பால் நிரப்பப்பட்ட ‘குடிஅரசு’ கருவூலத்திலிருந்து உயர் மதிப்பு புரட்சிக் கருத்துகள் இடம் பெற்றுள்ளது.
“சுயமரியாதை” என்ற ஒற்றைச் சொல்லின் சிறப்பு.
சுயமரியாதை இயக்கத்தின் தனிச்சிறப்பு.
சுயமரியாதை இயக்கம் சொல்வதென்ன?
அறிவு விடுதலை இயக்கம்.
ஒழிக்கப்பட வேண்டியவைகள்.
பிறர் நன்மைக்கு உழைப்பதே சேவை.
அறிவு – மானம் காக்கப் பயன்பட வேண்டும்.
ஒழுக்கம் – தன்னல மறுப்பும் இளைஞர்க்கு அணிகலன்.
நம் உறுதியே இயக்கத்திற்கு சொத்தும் – அஸ்திவாரமும்.
‘குடிஅரசு’ ஏட்டில் தந்தை பெரியார் விதைத்துள்ள அறிவுக் கருத்துகளை விடுதலை மலர் நமது சிந்தைக்கு விருந்தாக்கி நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறது.
மலரின் வாயிலில் நின்று தந்தை பெரியார் தந்த இயக்கத்தைத் தன் தோள்மீது சுமந்து – எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாது, பெரியார் பணி முடிக்கும் களப் பணிக்குத் தலைவராக – படைக்குத் தளபதியாக – களமாடுவதில் முதல் சிப்பாயாக 93 வயதினை சில நாட்களில் தொட்டுக் கடக்க இருக்கும் – பெரியாரை உலக மயமாக்கும் தத்துவத்தைச் சுமந்துள்ள கப்பலை, செலுத்திக் கொண்டிருக்கும் பெரியார் பயிற்றுவித்த மானமிகு மாலுமி – தமிழர் தலைவர் கரங்கூப்பி வரவேற்று – கடந்து வந்த பாதையை -– கடக்கும் களமதை – முடிக்கும் இலக்கை – “21ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!” என்ற வெற்றிக் கணிப்போடு, “இனி திராவிடமே வெல்லும் – அதை நாளைய வரலாறு திட்டவட்டமாகச் சொல்லும். இது உறுதி! உறுதி!! உறுதி!!!” என தனது கட்டுரையில் அறுதியிட்டுக் கூறுகிறார்.
திராவிடம் வெல்லும் – அதை நாளைய வரலாறு சொல்லும் என்று இதற்கு முன்பு வரை முழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இக்கட்டுரையில் “திட்டவட்டமாக” என்று ஒரு சொல்லைக் கொண்டு திராவிடத்தின் வெற்றியை – நாளைய வரலாற்றில் உறுதி செய்யப்படும் வெற்றியை முன் உரைக்கும் குறிப்பினை கட்டுரையின் தலைப்புச் சொற்கள் கட்டியங் கூறி நிற்பதை உணர முடிகிறது.
கட்டுரையின் தொடக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் மலர் வெளியிடும் மகத்தான பணி 1962 செப்.17 முதல் தொடங்கி, இம்மலர் தொடர்ச்சியாக 64ஆம் ஆண்டு மலராக மலர்கிறது என்று, மலரின் வயதை மறவாது குறிப்பிட்டு கட்டுரையைத் தொடங்குகிறார்.
இதுவரை வெளிவந்த மலர்களில் இம் மலருக்கு என்று ஒரு தனிப் பெருமை உண்டு. அதுதான், “பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்” என்ற பொருள் பொதிந்த “செயல் தொடக்கம்” என்று எழுதுகிறார்.
ஆம், பெரியார் பன்னாட்டமைப்பு (Periyar International) இன்று அமெரிக்கா முதல் பல நாடுகளில் இயங்கி வருகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் – கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் என உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல பெரியாரைப் பாராட்டி சிறப்பிக்கின்றன. உலகின் பல மொழிகளில் பெரியாரின் நூல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன.
உலக நாடுகளில் இருக்கும் இயக்கங்கள் – அமைப்புகள் – கட்சிகளின் பெயர்களில் ஒரு தனித்தன்மையான பெயர்தான் “சுயமரியாதை இயக்கம்” என்பதாகும். இப்பெயருக்கு இணையான பெயர் எங்குமில்லை என்பதே உண்மை.
ஓர் இயக்கம் வெற்றிபெறத் தேவையான இலக்கணங்களாக பெரியார் அய்யா குறிப்பிடுவதை ஆசிரியர் அய்யா அவர்கள் அப்படியே தருகிறார் – படியுங்கள்,
- உத்தமமான தலைமை
- உறுதியான கொள்கை
- உண்மையான தொண்டர்கள்
- யோக்கியமான பிரச்சாரர்கள்
இவற்றின் ஒருங்கிணைந்த செயலாக்கம்தான் சுயமரியாதை இயக்கத்தின் தடைபடா எதிர்நீச்சல் பணியின் முழு வெற்றிக்குக் காரணம் என்பதை தமிழர் தலைவர் தனது கட்டுரையில் சிறப்பாகப் பதிவு செய்கிறார்.
‘குடிஅரசு’ ஏட்டினை சுயமரியாதை இயக்கத்தின் முதல் அத்தியாயம் என்பதோடு, “குடிஅரசு – புரட்சிக்குப் போர்முரசு” என்று நயம்பட ஆசிரியர் அவர்கள் சிறப்பித்துள்ளமை அருமையினும் அருமை ஆகும்.
ஒட்டுமொத்த உலக மக்களுக்கு, மனித குலத்திற்கு மானமும் அறிவும் கிடைக்க – புதியதோர் சுயமரியாதை உலகை – பெரியார் உலகை உருவாக்க உருவான ஒப்புவமையில்லா உயர்ந்த இயக்கமே சுயமரியாதை இயக்கமாகும் என்கிறார்.
தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா தன் ஆசானைப் பற்றிக் கூறியதைப் பின்வருமாறு இடம் பெறச் செய்துள்ளார்.
- தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர்
- பல நூற்றாண்டு வெற்றியை ஒரு நூற்றாண்டில் கண்டவர்.
- தனது கொள்கை வெற்றியை நேரில் கண்டு – கேட்டு மகிழ்ந்தவர்.
உலகில் எந்தத் தலைவரும் எம் தலைவரின் பெருமைக்கு நிகரில்லை என்று மார்தட்டி மகிழ்கிறார். தந்தை பெரியார் தந்திட்ட சுயமரியாதைச் சூரணமே இங்குள்ள சமூக நோய்க்கு மட்டுமல்ல உலகின் எங்குள்ள நோய்க்கும் மருந்தாகும் என்று அய்யாவின் தத்துவச் சிறப்பைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அழகுபடக் குறிப்பிடுகிறார். ஆய்ந்தறிந்து எழுதியுள்ளார்.
ஆக்ஸ்போர்டில் அய்யா பெரியார் படம்
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கையின் சிறப்பை மேடையில் முழங்கிடும் வரிகளான, “ஈட்டி எட்டியவரை பாயும்…” எனும் வரிகளை நினைவூட்டி, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இலங்கை, அய்ரோப்பா ஆகிய நாடுகளில் 1929, 1931, 1954இல் மேற்கொண்ட பயணங்கள் – விளைந்திட்ட பயன்கள் – வளர்ந்துள்ள பெரியாரின் அமைப்புகளை – பெரியார் பன்னாட்டு அமைப்புகளை – வெளிநாடுகளில் நடத்திட்ட மாநாடுகள், தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் உருவப் படம் என பெரியார் உலக மயம் ஆகும் காட்சிகளையும் – அதன் மாட்சிகளையும் மனங்குளிர – மெய்சிலிர்க்க எழுதியுள்ள கருத்துகள் வாசிப்போரை வியக்க வைக்கின்றன.
சிங்கப்பூர்
சிங்கப்பூர் நாட்டில் பெரியார் “சமூக சேவை மன்றம்” ஆற்றும் மனித நேயப் பணியைப் பெரியாரின் கொள்கை பரப்பும் பணியைப் பாராட்டியும் – நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததையும் குறித்து பதிவு செய்துள்ளார்கள்.
பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம்
பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர்கள் நடத்திடும் சிறப்பான பணி ஜாதி – தீண்டாமை ஆரிய சங்கிகளால் நுழைக்கப்படாமல் தடுக்கப்பட்டதைப் பாராட்டியுள்ளார்கள். மெல்போர்ன் நாட்டில் இரு நாள் பன்னாட்டு மாநாட்டின் சிறப்புகள் குறித்து எழுதியுள்ளார்கள்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு
தமிழ்நாடு, கேரள இரு மாநில அரசுகள் இணைந்து அழைத்து நடத்திய வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழா சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொள்கை வெற்றியின் உச்சம். இந்நிகழ்வினை ஆசிரியர் அவர்கள் கட்டுரையில் குறிப்பிட்டு வைக்கம் களத்தில் போராடிய பெரியாருக்கே இறுதி வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் இயக்கம் –
ஆர்.எஸ்.எஸ். இயக்கம்
1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் போல், அதே ஆண்டில் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, நம்மோடு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொள்கை உறவையும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் எதிரெதிர் கொள்கைகளையும் விளக்கியுள்ளார்.
காந்தியாரைக் கொலை செய்ய கோட்சே பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பச்சைத் தமிழர் காமராசரின் வீட்டைக் கொளுத்திய ஆர்.எஸ்.எஸ். கூட்டம் இவைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சி
நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடத்திடும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றி வரும் அரும்பணிகள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை முத்துகள், ஒன்றிய அரசும் – ஆளுநர் அடாவடித்தனமும மீறி – சட்டப்போர் நடத்தி தமிழ்நாட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் திராவிட மாடல் ஆட்சியைப் பாராட்டி தமிழர் தலைவர் சிறப்பித்து எழுதியுள்ளார்கள்.
பெரியார் ஆண்டில் நடைபெறவுள்ள பணிகள்
பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் விஷன் ஓடிடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) என்ற திட்டங்கள் இவ்வாண்டில் வேகமெடுக்கச் செய்ய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்ற இனிப்பான செய்தி, சமூக விஞ்ஞான கருத்துகளை அறிவியல் துணை கொண்டு வளர்த்திட தமிழர் தலைவர் மேற்கொள்ளும் அறிவார்ந்த செயலினைக் காட்டுகிறது.
போலி விஞ்ஞானத்தால் பிதற்றும் பிற்போக்கு சக்திகள் வீழ்ச்சியுறும். ஜாதி – மதங்கள் தோற்பது உறுதி!
“திராவிடம் வெல்லும் – அதை
வரலாறு திட்டவட்டமாகச் சொல்லும்!”
என்று தமிழர் தலைவர் ஆசிரியர் தனது இப் பெரியாராண்டிற்கான செய்தியை – செயல்திட்டத்தைக் கட்டுரையின் நிறைவாக்கி உள்ளார்.
ஆசிரியர் அய்யாவின் ஆணையை நிறைவேற்ற அணிவகுப்போம்!
முதலமைச்சர் தீட்டியுள்ள கட்டுரை
“பெரியார் பாதையில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு” எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.
தனது கட்டுரையை வாசிப்போருக்கு வரலாற்று நிகழ்வுகளை வார்த்தளிக்கும் வண்ணமாக – திராவிட மாடல் ஆட்சி உருவாக்கும் புதிய வரலாற்றை வடித்துத் தரும் பெட்டகமாகத் தீட்டியுள்ளார் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், “திராவிடமு ன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது! – திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல” என்று சென்னை ராபின்சன் பூங்கா திடலில் கூறியதைக் குறிப்பிட்டுத் தனது கட்டுரையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்றதும் – தந்தை பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் அண்ணா. வாழ்த்து பெற்று ஆட்சி அமைத்ததும் பெரியாரின் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி அய்யாவுக்குக் காணிக்கை ஆக்கினார்.
பெரியார் – மணியம்மையார் குழந்தைகள் நல விடுதியும், பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனையும்
திருச்சியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தைகள் நல பிரிவு தொடங்க ஒரு இலட்ச ரூபாய் நன்கொடையாக, நமது ஆசிரியர் அய்யா மூலமாக முதலமைச்சர் அண்ணா அவர்களுக்குக் கொடுத்ததைக் குறிப்பிட்டு, அதோடு அரசு 1¼ இலட்சம் ரூபாய் போட்டு, முதலமைச்சர் அண்ணா அவர்கள், “பெரியார் ஈ.வ.ரா.மணியம்மையார் குழந்தைகள் நல விடுதி” என்று பெயரிட்டு உருவாக்கிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.
இன்று தனது தலைமையிலான திராவிட மாடல் அரசு – கொளத்தூர் தொகுதியில் அதிநவீன வசதிகளோடு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு, “பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனை” என்று பெயரிட்டுள்ளதை பதிவிட்டுள்ளார்.
பெரியார் நூலகம்
கோவையில் உலகத் தரத்தில் உயர்ந்து நிற்கும் நூலகத்திற்கு தந்தை பெரியார் பெயரைத் திராவிட மாடல் அரசு சூட்டியுள்ளது. மக்களின் நோய் தீர்க்க பெரியார் பெயரில் மருத்துவமனை, மக்களின் அறிவு சிறக்க பெரியார் பெயரில் நூலகம் என்று திராவிட மாடல் ஆட்சியின், ஆம், மக்கள் நல அரசின் (Welfare State) நலம் பேணும் சிந்தனை செயலாக்கம் சிறப்பாகும்.
செங்கற்பட்டு தீர்மானமும்,
திராவிட மாடல் ஆட்சி சாதனைகளும்
திராவிட மாடல் ஆட்சி கலைஞரின் சமத்துவபுரம், நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு நடைபெற்ற செங்கற்பட்டில் 1929இல் பெரியார் நிறைவேற்றிய புரட்சிகர தீர்மானங்களான,
பெண்களுக்குச் சம சொத்துரிமை, காவல்துறை, இராணுவத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை செயல்பாட்டுக்கு வந்தன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், பெண் தொழிலாளர்கள் 43%, அர்ச்சகர் பணிக்கு அனைத்து ஜாதியினர் நியமனம் இவ்வாறு திராவிட மாடல் அரசின் பல்வேறு திட்டங்களைக் கட்டுரையிலே படம் பிடித்துள்ளார்.
பெரியார் பாதையில் பயணிக்கும் அரசு
தமிழ்நாட்டின் முதலமைச்சர் – நம் சமூகநீதி காக்கும் சரித்திர நாயகர் கட்டுரையின் முடிவில், எங்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆலோசனைகளை வழங்குவது, “தாய்க் கழகத்தின் தலைவர்”, “தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்”, “தந்தை பெரியாரின் இயக்கத்தைக் கட்டிக் காத்திடும் தலைவர்”, என்பதை இம் மலரில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.
“இது தந்தை பெரியார் பாதையில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு!” என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் தீட்டியுள்ள கட்டுரையின் பல்வேறு சிறப்பினை – செய்தியினைப் படித்து பயன் பெறுங்கள் – மலரை – பலரைப் படிக்கச் செய்து மணம் பரப்பிடுவீர்.
(மலர் மணம் வீசும்)