குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு!

சென்னை, அக்.12-  குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக எந்தவித ஆய்வையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்பது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ‘தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகம் அடிப்படை வழிகாட்டு நடைமுறைகளை அமல்படுத்தத் தவறியதே இந்த விவகாரத்துக்கு காரணம்’ என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக சிடிஎஸ்சிஓ வட்டாரங்கள் நேற்று (11.10.2025) தெரிவித்தன. மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தனா். அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சிறீசன் ஃபார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. அந்த மருந்தை உட்கொண்ட பின்னா், மத்திய பிரதேசத்தில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா்.

சிறப்பு விசாரணைக்குழு

இந்த விவகாரம் தொடா் பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. தமிழகம் வந்த அந்தக் குழு, சிறீசன் ஃபாா்மா நிறுவன உரிமையாளா் ரங்கநாதனை கைது செய்து மத்திய பிரதேசம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சிறீசன் ஃபார்மா நிறுவனத்தில் சிடிஎஸ்சிஓ நிர்வாகிகள் சார்பில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவு குறித்து அதிகாரிகள் கூறியதாவது:  சிறீசன் ஃபார்மா நிறுவனத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிர்வாகம் கடந்த 2011-ஆம் ஆண்டு உரிமம் வழங்கியுள்ளது. ஆனால், அதன் பிறகு அதிகாரிகளின் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக அந்த நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமலும் அந்த நிறுவனம் இயங்கி வந்தது ஆய்வில் தெரியவந்தது.

மருந்துகளின் தரத்தை
உறுதி செய்ய..

மேலும், மருந்து தரக் கட்டுப்பாட்டு விதிகள் டி மற்றும் சி பிரிவுகளின் விதி 84ஏபி-இன் படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும் அவா்களின் அனுமதிக்கப்பட்ட மருந்து உற்பத்தி குறித்த தகவல்களை ‘சுகம்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும். நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் இந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்டன.

இவ்வாறு தரவுகளைப் பதிவிடுவது தொடா்பாக நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தியாளா்களுக்கும், தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துக்கும் கடந்த 2023-ஆம் ஆக்டோபரில் தகவல் அனுப்பப்பட்டது. மேலும், மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு நிர்வாகங்களுடன் நடத்தப்படும் மாதாந்திர ஆய்வு கூட்டத்தின்போதும், இந்தத் தரவுகள் பதிவேற்றம் குறித்த நினைவூட்டல் வழங்கப்பட்டது.

நிர்வாகத்தின் பொறுப்பாகும்

ஆனால், சிறீசன் ஃபார்மா நிறுவனம் அதன் உற்பத்தி குறித்த எந்தவிதத் தரவுகளையும் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. அதன்படி, இந்த நிறுவனத்தை மருந்து உற்பத்தி நிறுவனமாகவே கருத முடியாது. இந்த விதியை மாநிலத்தில் முறையாக நடைமுறைப்படுத்துவது மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *