சென்னை, அக்.11 கோவை– அவி னாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு பெயரிலான அந்த உயர்மட்ட சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.10.2025 அன்று திறந்து வைத்தார். இந்த நிலையில், ‘‘தமிழ்நாட்டில் மிக நீளமான பாலத்தை கோவை மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கித் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி’’ என்று கூறி, உயர்மட்ட சாலை ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாநகரில் ரூ.1,791.23 கோடியில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட சாலை கட்டப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. ஒன்றிய அரசு நிதியில் கட்டப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.