பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களால், டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர்
கென்னித்ராஜ் அன்பு அவர்களுக்கு, அவரது துறையில் அவர் ஆற்றிய சிறப்பு மிக்க பங்களிப்புக்காக ‘மதிப்புறு முனைவர் பட்டம்’ (ஹானரிஸ் காசா) பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. உடன் சிறப்பு விருந்தினர் சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.அசோக் வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ் (ஓய்வு), பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வீ.அன்புராஜ், சென்னை, எத்திராஜ் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் எம்.தவமணி,
முதன்மையர், காந்தி கிராமம் பல்கலைக்கழகம், திண்டுக்கல் (ஓய்வு) முனைவர் எம்.ஜி.சேதுராமன், பல்கலைக்கழக அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினர்கள் மருத்துவர் சு.நரேந்திரன், பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன், இணை துணைவேந்தர் பேரா.ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா ஆகியோர் உள்ளனர் (தஞ்சை, 11.10.2025).
வல்லம், அக்.11 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்ட மளிப்பு விழா இன்று (11.10.2025) பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன்
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் இப்பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களையும், சிறப்பு விருந்தினர் கே.அசோக் வர்தன் செட்டி அய்.ஏ.எஸ் அவர்களையும், ஏனைய விருந்தினர்களையும், சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்றார். பின்னர் அவர் தனது உரையில் இப்பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள் இங்கிருந்து அறிவையும், விழுமியங்களையும், சமூக முன்னேற்றத்திற்கான பொறுப்புணர்ச்சியையும், தொடர் முன்னேற்றத்திற்கான வழி முறைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் திறனையும் பெற்றுச் செல்கின்றனர். 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் எங்கள் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் நிறுவனம் பெற்ற கல்வியின் முன்னேற்றம், ஆய்வு முயற்சிகள், அங்கீகாரங்கள் மற்றும் சாதனைகளை ஆண்டு அறிக்கையாக வழங்குவதில் பெருமை கொள்கிறேன் எனக் கூறினார்.
1,738 மாணவ, மாணவிகள்
பட்டம் பெற்றனர்!
பட்டம் பெற்றனர்!
இப்பட்டமளிப்பு விழாவில் கட்டடக்கலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை புலன்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 1,738 மாணவ, மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இவர்களில் 1,225 பேர் இளங்கலை பட்டமும், 501 பேர் முதுகலைப் பட்டமும் மற்றும் 12 பேர் முனைவர் பட்டமும் பெறுகின்றனர். கல்வியில் சிறப்பு நிலைகளை அடைந்த 118 பேர் பதக்கம் பெற்றுள்ளனர் (இவர்களில் 48 பேர் தங்கம், 39 பேர் சில்வர் 31 பேர் வெண்கலப் பதக்கங்களை பெறுகின்றனர்).
கல்வி கற்பித்தலில் நவீன முறைகளான விளைவு அடிப்படையிலான கல்வி (OBE) தேர்வு முறைகளில் நவீன முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு சிறந்த வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதுகலை பட்டப்படிப்பில் மாடுலார் அடிப்படை யிலான கல்வி ஒரே கால கட்டத்தில் இருவேறு பட்டப்படிப்புகளைப் படிக்கும் திட்டம் ஆகியவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் வாயிலாக செயற்கை நுண்ணறிவு, இயந்திர மொழி, தரவு அறிவியல் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த பட்டடிப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தேசிய அளவில் ஆன்லைன் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் ஸ்வேயம் தேர்வு மய்ய அங்கீகாரம் பெறப்பட்டு மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ERP-LMS ஒருங்கிணைந்த நவீன டிஜிட்டல் கல்வி முறை செயற்கை நுண்ணறிவு திறன்களைப் பயன்படுத்தி வளாகம் முழுவதும் நெட் ஒர்க் வசதியுடன் கூடிய மேட்லேப், லேப்வியூ மற்றும் SPSS ஆய்வகங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
முதலாம் ஆண்டு மாணவ, மாணவிளுக்கு அடிப்படை அறிவுத் திறன்களை வளர்க்கும் வகுப்புகள் நடத்தப்படுவதன் மூலம், இதர கல்வி வாய்ப்புகளைப் பற்றி அறிந்து அவற்றையும் பெறுகின்றனர்.
2026 முதல் தகவலியல் தொழில்நுட்பத் துறையுடன் சுகாதார அறிவியல் தொடர்புடைய படிப்புகளும் உரிய ஆய்வக வசதிகளுடன் வழங்கப்படவுள்ளன.
கல்வி செயல்பாடுகள் தணிக்கைகளின் வாயிலாக செம்மைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் NBA, NAAC சான்று பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆய்வில் மேம்பாடு அடைந்துள்ளதுடன், தரமான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகளை பெற்றுத்தருவதுடன் தகுந்த ஊக்க ஊதியமும் வழங்கி வருகிறோம்.
உலகப் பசுமைப் பல்கலைக்கழக விருது
டிசம்பர் 2024 இல் உலக அளவில் அங்கீகாரம் பெறும் வகையில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) உலகப் பசுமைப் பல்கலைக்கழக விருதினை நியூயார்க் சிட்டி கிரீன் அமைப்பு வழங்கியுள்ளது.
தேசிய அளவிலும், உலக அளவிலும் பேராசிரியர்க
ளும், மாணவ, மாணவிகளும் பல சிறப்புகளைப் பெற்றுள்ளனர்.
மேனாள் மாணவ, மாணவிகள் சங்கத்தின் வாயிலாக சமூகத்துடன் இணைந்து வாழும் முகாம், திறந்தவெளி நிகழ்ச்சிகள், பெரியார் கலைவிழா ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் நோக்கங்களான புத்தாக்க சிந்தனை, புதிய கண்டுபிடிப்பு மாற்றம் காணுதல் போன்றவற்றை மெய்ப்பிக்கும் வண்ணம். கூட்டு முயற்சிகளால் பல வெற்றிகளைக் கண்டுள்ளது 2024-2025 கல்வி ஆண்டு.
அனைவரையும் மீண்டும் ஒருமுறை வரவேற்ற துணைவேந்தர், இந்த நாள் பட்டம் பெற உள்ள மாணவ, மாணவிகளின் வாழ்வில் என்றும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு பொன்னான நாளாக அமையட்டும் எனக் கூறினார்.
வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ் அன்பு அவர்களுக்கு தனது துறையில் அவர் ஆற்றிய சிறப்பு மிக்க பங்களிப்புக்காக மதிப்புறு முனைவர் பட்டம் (ஹானரிஸ் காசா) பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கென்னித்ராஜ் அன்பு
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ் அன்பு அவர்கள் தனது ஏற்புரையில், தங்கள் குடும்பத்திற்கும் தந்தை பெரியார் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் தந்தை பெரியார் இல்லையேல் தங்கள் குடும்பம் இல்லை மற்றும் அவரால் தான் தாங்கள் இந்தநிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்றும் கூறினார். தந்தை பெரியாரின் உயரிய அடிப்படை கொள்கைகளை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டதால் தான் வளர்ந்தன என்றும் கூறினார். இந்த மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி தன்னை கவுரவித்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். முன்னதாக கென்னித்ராஜ் அவர்களைப் பற்றியும், அவரது சேவைகள் பற்றியும் சென்னை எத்திராஜ் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேரா எம்.தவமணி எடுத்துரைத்தார்.
கே.அசோக் வர்தன் ஷெட்டி
மேனாள் துணைவேந்தர் இந்திய கடல்சார் பல்க லைக்கழகம், சென்னை மற்றும் ஒன்றிய – மாநில அரசுகள் உறவு குறித்த உயர்நிலை குழு உறுப்பினர் கே.அசோக் வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ் (ஓய்வு) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அய்ந்து முக்கியமான அறிவுரைகளை வழங்கி, அவர்கள் வாழ்விலும் ஆற்றவுள்ள பணியிலும், தலை சிறந்தவர்களாக திகழ இவ்வறிவுரைகளைப் பின்பற்றுமாறு கூறினார்.
- வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருங்கள். 2. நற்பண்புகள் 3. மன வலிமை 4.சுயசிந்தனை மற்றும் 5 திறனாய்வுச் சிந்தனை அல்லது அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றினை வளர்த்துக் கொள்ளுங்கள் என கூறினார்.
தோல்விகளைக் கண்டு பயப்படக்கூடாது!
மேலும் தனது பேருரையில், கல்விக்கு எல்லை இல்லை; அது ஒரு வாழ்நாள் பயணம். எனவே, நீங்கள் பயின்றுகொண்டே இருக்கவேண்டும். இல்லாவிடில் வாழ்வில் எந்தத் துறையிலும் சிறப்பாகப் பயணிக்க இயலாது என்றும், தீய பழக்கம் என்பது இயங்க இயலாத தட்டையான டயருக்குச் சமம். அப்பழக்கதை மாற்றிக்கொள்ளும் வரை நீங்கள் எங்கும் செல்ல முடியாது என்றும் கூறினார். உங்களின் உயரிய எண்ணங்களே உங்களை புகழின் உச்சிக்கு இட்டுச்செல்கிறது. பணிபுரியும் இடத்தில் துணிவுடன் செயல்படவேண்டும். தோல்விகளைக் கண்டு பயப்படக்கூடாது.
வாழ்க்கை ஒரு சுகமான பயணம் அல்ல; அவை தோல்விகளையும் உள்ளடக்கியது. தோல்விகளை கையாளத் தெறியாதவர்கள், மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதை மணதில் நிறுத்தி, வெற்றி என்பது இறுதி அல்ல; தோல்வி என்பது முடிவும் அல்ல; தைரியம் மட்டுமே உன்னை மீண்டும் வெற்றி பெறச்செய்யும். பிரிட்டிஷ் நாவல் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் தான் எழுதிய ‘‘ஹாரிஸ் பாட்டர் நாவல் 12 பதிப்பகத்தாரால் பிரசுரிக்க மறுக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சியால் அப்புத்தகத்தை வெளியிட்டு, இன்று மிகச்சிறந்த படைப்பாளராகவும், வசதி படைத்தவராகவவும் உள்ளார். எனவே, விடாமுயற்சியால் தோல்விகளை வெற்றிப்படிகளாக்கி முன்னேற்றம் காணுங்கள்.
வெற்றி எனும் இலக்கை நோக்கிச் செல்!
வாழ்க்கை ஒரு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல. அது ஒரு மராத்தான் ஓட்டம். அதில் நீங்கள் ஓடிக்கொண்டே இரு. தற்காலிக தோல்விகள் உனது ஊக்கத்தை தகர்த்தெரிய அனுமதியாதே. வெற்றி எனும் இலக்கை நோக்கிச் செல்.
உலகின் சிறிய கண்டுபிடிப்புகளே மிகப்பெரிய புரட்சிகரமான செயல்களைச் செய்ய உதவியிருக்கின்றன. உங்களைப் போன்றோர் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனைகளைப் படைத்தல் வேண்டும். குறைந்த செலவில் நிறைந்த பலன்களைத் தருவதாக தங்கள் கண்டுப்பிடிப்புகள் இருத்தல் வேண்டும். ஆப்பிள் நிறுவனம் கணினியை கண்டுபிடிக்கவில்லை. மாறாக நாம் எவற்றிற்கெல்லாம் கணினியை பயன்படுத்துகிறோம் என்பதை அறிந்து, அந்த நிறுவனம் கண்டறிந்து, கண்டுபிடிப்புகளுக்கு ஒரு கண்டுபிடிப்பு என தனது நிலைப்பாட்டைச் செயல்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனமும் இதைத்தான் செய்கிறது. எனவே, சிறுசிறு கண்டுப்பிடிப்புகளில் ஈடுபடுங்கள்; மேற்கண்ட நிறுவனங்கள் செல்வதை மனதில் கொண்டு செயலாற்றுங்கள்.
மாறுப்பட்ட சிந்தனை உடையவராக துணிவுகொள்ளுங்கள் அப்பொழுதுதான் உலகத்தை மாற்ற முடியும்.
அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது அவசியம்!
படைப்பாற்றல் திறனுடன் மாணவர்கள், திறனாய்வுச் சிந்தனையையும் வளர்த்துகொள்வது அவசியம் எனக் கூறினார். மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு, அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது அவசியம் என்பதை நாட்டில் அண்மைக்காலங்களில் மூடநம்பிக்கையின் பெயரால் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய சில உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார். இதில் மூழ்கியிருப்பவர்களில் மெத்தப்படித்தவர்களும் உள்ளனர் என்பது தான் வியப்பானது.
திறனாய்வுச் சிந்தனையை வளர்த்துக்கொண்டு தந்தைபெரியாரின் கூற்றான ‘‘யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே’’ என்பதை மனதில் இறுத்திக்கொள்ளுங்கள். அய்யாவின் கூற்றே அறிவியல் மனப்பான்மையின் முக்கிய சாரம் ஆகும். அறிவியல் மனப்பான்மை ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் அவசியமானது என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.
சிறந்த ஆய்வுச்சிந்தனையை வளர்த்துக்கொள்வதன் மூலம் உண்மைக்கும், போலிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ளலாம்.
இந்த அய்ந்து அறிவுரைப் பாடங்களை பின்பற்றினால், மாணவ, மாணவிகள் அனைவரும் அவர்கள் பணிகளில் மட்டுமின்றி, பகுத்தறிவு, மனிதநேயம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கி இந்தியாவை முன்னேற்றம் பெறச் செய்யலாம் எனக் கூறினார். பட்டம் பெறும் அனைத்து மாணவ, மாணவிகளையும் திறம்பட சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் எனக்கூறினார்.
இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள், இணை துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.