டிரானே, அக். 10- அல்பேனியா தலைநகர் டிரானேவில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார். அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நீதிபதியை நோக்கி சரமாரியாக சுட்டார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டுகளால் துளைக்கப்பட்டு படுகாய மடைந்த நீதிபதி, சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து எல்விஸ் ஷ்கெம்பியை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அலட்சியமாக செயல்பட்ட நிதிமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
மின்டானோவ், அக். 10- பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மய்யம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஒரு வாரத்திற் முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம் செபு நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.