கரூர், அக்.9- கரூர் மாநகர தவெக செயலா ளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.
கரூர் வேலுசாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிர சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாய மடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செய லாளர் ஆனந்த், துணை ப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கொலைக்குச் சமமான குற்றப்பிரிவு 105, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி செய்தல் பிரிவு 110, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்ளும் குற்றப்பிரிவு 125பி, பொது அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படி யாமல் இருத்தல் குற்றப்பிரிவு 223, பொது சொத்துக்கு சேத விளைவித்தல் குற்றப்பிரிவு டிஎன்பிபிடிஅய்
ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 28ஆம்தேதி கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கட்சியின் மாநகரச் செயலாளர் மாசி பவுன்ராஜ் வீட்டில் தங்கியிருந்தபோது, அவரையும், அவருக்கு உதவிய மாசி பவுன்ராஜையும் கடந்த மாதம் 29ஆம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (அக்.6ஆம்தேதி) மாசி பவுன்ராஜ் சார்பில் ஜாமீன் மனு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று (8.10.2025) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், இன்னும் விசாரணை எதுவும் முழுமையடையாமல் உள்ள நிலையில், மாசி பவுன்ராஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.